Lokesh Kanagaraj: சமூக வலைதளங்களில் இருந்து ப்ரேக்.. எக்ஸ் தளத்தில் பதிவிட்டு விடைபெற்ற லோகேஷ் கனகராஜ்!
Lokesh Kanagaraj: லியோ படத்திற்கு வந்த விமர்சனங்களை தான் கவனித்ததாகவும், அதன் மூலம் தனது தவறுகளை இந்த முறை அவற்றை சரி செய்துகொள்வதாகவும் லோகேஷ் சமீபத்திய நேர்க்காணலில் தெரிவித்தார்.
லோகேஷ் கனகராஜ்
மாநகரம் படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj), தமிழ் சினிமாவில் பல்வேறு அசாத்தியமான திருப்பங்களை ஏற்படுத்திவிட்டார். கைதி , மாஸ்டர் , விக்ரம் , லியோ என அடுத்தடுத்தப் படங்களை இயக்கி தனக்கான லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸை உருவாக்கி இருக்கிறார் லோக்கி. தற்போது ஃபைட் கிளப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர் இயக்க இருக்கும் படம் தான் தலைவர் 171.
தலைவர் 171
ரஜினிகாந்த் நடிக்க லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார். சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய நேர்காணல்களில் படம் குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இதில் அவர் முக்கியமாகக் குறிப்பிட்டது, லியோ படத்தைப் போல் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை தான் முன்னதாகவே அறிவிக்க மாட்டேன் என்று பேசியது. மேலும் லியோ படத்திற்கு வந்த விமர்சனங்களை தான் கவனித்ததாகவும், அதன் மூலம் தனது தவறுகளை இந்த முறை சரி செய்துகொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐமேக்ஸில் படபிடிப்பு
மேலும் இந்தப் படத்தின் சில பகுதிகளை தான் ஐமேக்ஸ் கேமராவில் படம்பிடிக்க இருப்பதாகவும், இந்த முறை மலையாள சினிமா திரைக்கதை எழுத்தாளர்களுடன் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுத இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இந்தப் படம் தான் இதுவரை முயற்சி செய்யாத மாறுபட்ட ஆக்ஷன் ஜானராக இருக்கும் என்றும், இந்தப் படத்தில் ரஜினிகாந்தை தான் புதிய கோணத்தில் காட்ட இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் இருந்து சில மாதங்களுக்கு இடைவேளை எடுத்துக் கொள்வதாக லோகேஷ் கனகராஜ் தற்போது அறிவித்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெகட்டிவிட்டியை தவிருங்கள்
🤗❤️ pic.twitter.com/0EL6PAlbdQ
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) December 16, 2023
அவர் வெளியிட்ட அறிக்கையில் “முதலில் என்னுடை தயாரிப்பில் வெளியான முதல் படமான ஃபைட் கிளப் படத்திற்கு ரசிகர்கள் நீங்கள் அனைவரும் கொடுத்திருக்கும் வரவேற்பிற்கு நன்றி. அதற்காக நான் எப்போதும் உங்களுக்கு கடமைப்பட்டிருப்பேன்.
என்னுடைய அடுத்த படத்திற்கான வேலைகளைத் தொடங்க இருப்பதால், அனைத்து சமூக ஊடகங்களில் இருந்தும் இருந்து சிறிது காலம் இடைவேளை எடுத்துக் கொள்ளப்போகிறேன். இந்தக் குறிப்பிட்ட காலத்தில் என்னை தொடர்புகொள்ள முடியாது.
எனது முதல் படத்தில் இருந்து எனக்கு ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு இன்னொரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதுவரை பாசிட்டிவாக இருங்கள், நெகட்டிவிட்டியைத் தவிருங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.