(Source: Poll of Polls)
Leo Title Card : எல்.சி யு டைட்டில் ஐடியா...லியோ படத்தில் விஜயின் டைட்டில் கார்ட் குறித்து லோகேஷ் கனகராஜ்
லியோ படத்தில் நடிகர் விஜய்க்கு உருவாக்கப்பட்ட டைட்டில் கார் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார்.
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகியது. விஜய் , த்ரிஷா, பிரியா ஆனந்த்,கெளதம் மேனன் , மேத்யு தாமஸ், சாண்டி மாஸ்டர், மிஸ்கின் , சஞ்சய் தத், அர்ஜூன், மடோனா செபாஸ்டியன் , அனுராக் கஷ்யப் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தில் இரண்டாவது முறையாக லோகேஷ் விஜயும் இணைந்துள்ளார்கள். லியோ திரைப்படம் இதுவரை உலகளவில் 500 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன.
விஜய்க்கு புதிய டைட்டில் கார்ட்
லியோ படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. பெரும்பாலான ரசிகர்களுக்கு படத்தின் முதல் பாதி அதிகம் பிடித்துள்ளது. படம் தொடங்கிய 10 நிமிடங்களுக்குப் பின் டைட்டில் போடுவது, பழைய பாடல்களுக்கு நடனம் ஆடுவது. ஆங்கிலப் பாடல் பின்னணியில் ஒலிக்க விஜய் சட்டையை மாற்றிக் கொண்டு காஃபி ஷாப்பிற்குள் நுழையும் காட்சி என முதல் பாதியில் லோகேஷ் டச் அதிகம் இருக்கின்றன. அப்படி ரசிகர்கள் திரையரங்கத்தில் அதிகம் ரசித்தது நடிகர் விஜய்க்கு என இந்தப் படத்தில் உருவாக்கப் பட்டிருக்கும் டைட்டில் கார்டு.
எப்படி உருவானது?
பொதுவாகவே டைட்டில் கார்ட் என்றால் அது ரஜினியின் டைட்டில் கார்ட் தான் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப் பட்டது. இடைப்பட்ட காலத்தில் ரஜினி படங்களுக்கு நிறைய டைட்டில் கார்டுகள் மாற்றப்பட்டன. நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படத்தில் வழக்கமாக தேவா இசையில் ரஜினிக்கு அண்ணாமலை படத்தில் போடப்பட்ட டைட்டில் மீண்டும் போடப்பட்டது. இது ரசிகர்களை கவரவும் செய்தது. ரஜினினியைத் தொடர்ந்து தற்போது விஜய்க்கும் சிறப்பான ஒரு டைட்டில் லியோ படத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இது ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்த டைட்டில் கார்ட் உருவான விதம் குறித்து லோகேஷ் கனகராஜ் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் விளக்கியுள்ளார்.
எல்.சி.யு
இந்தப் படத்தில் விஜய்க்கு நாங்கள் தனியாக ஒரு டைட்டில் கார்ட் உருவாக்க திட்டமிட்டோம் . ஏற்கனவே நான் எல்.சி யு வுக்கு ஒரு டைட்டில் கார்ட் திட்டமிட்டு வைத்திருந்தேன். அதை லியோ படத்தில் பயன்படுத்தலாம் என்று நினைத்தேன் ஆனால் அது நிறைய குழப்பங்களை உருவாக்கும் என்பதால் அதே மாதிரியான ஒரு டைட்டில் கார்டை விஜய்க்கு உருவாக்கினோம். லியோ படத்தில் விஜய்க்கு எடுக்கப் பட்ட க்ளோஸ் அப் காட்சிகளில் இருந்து அவரது கண்களைப் பயன்படுத்தி இதை உருவாக்கினோம். பொதுவாகவே நான் காமிக் ரசிகன் என்பதால் ஒரு கிராஃபிக் நாவல் மாதிரி இதை உருவாக்கினேன். அதை படத்தில் எந்த தருணத்தில் வைக்கலாம் என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும்போது தான் கழுதைப் புலியுடன் அவர் சண்டைப் போட்டுவிட்டுப் போகும் காட்சியில் விஜய் பெயரை போடலாம் என்று முடிவு செய்தேன். “ என்று கூறியுள்ளார். இனி வரும் படங்களில் விஜய்க்கு இதே டைட்டில் கார்டை பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்