A R Rahman: குர்- ஆன் வார்த்தையுடன் பாடல்.. இஸ்லாமியர்களை புண்படுத்தும் என பயந்த ஏ.ஆர்.ரஹ்மான்.. இயக்குநர் பளிச்!
A R Rahman: "ரஹ்மான் அதிர்ச்சியடைந்துவிட்டார். எனக்கு அந்த வரிக்கான அர்த்தம் தெரியாது. ரஹ்மான் மற்றும் இர்ஷாத் கமில் ஆகிய இருவருக்கும் அது குர்ஆனிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்ட வார்த்தை என்று தெரியும்"
ஏ ஆர் ரஹ்மானும் சூஃபி இசையும்
இந்திய திரையிசையில் சூஃபி இசையை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியதில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பெரிய பங்களிப்பு இருக்கிறது. ஜோதா அக்பர் படத்தில் வரும் “க்வாஜா மேரே க்வாஜா”, டெல்லி 6 படத்தில் வரும் ’அர்ஸியான்’, ராக்ஸ்டார் படத்தில் வரும் குன் ஃபாயா குன்’ ஆகிய மூன்று பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத தன்மையைக் கொண்டவை. ராக்ஸ்டார் படத்தில் இடம்பெற்ற “குன் ஃபாயா குன்” பாடலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.
மொழி கடந்து இன்று டீக்கடைகளில், மேடைகளில், கல்லூரி நிகழ்ச்சிகளில், எத்தனை எத்தனையோ பேச்சுலர்களின் அறைகளில் ஒலிக்கும் ‘குன் ஃபாயா குன் ‘ பாடலை, அடிமனதில் ஒருவித பதற்றம் பொங்கவே உருவாக்கியிருக்கிறார் ரஹ்மான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? இஸ்லாமிய மதத்தினரின் உணர்ச்சிகளை இப்பாடல் புண்படுத்திவிடும் என ரஹ்மான் பயந்ததாக நிகழ்ச்சி ஒன்றில் இப்படத்தின் இயக்குநர் இம்தியாஸ் அலி தெரிவித்துள்ளார்.
குர்ஆன் வார்த்தைகளை எப்படி பாடலாக்குவது
இம்தியாஸ் அலி இயக்கத்தில் சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான படம் ‘அமர் சிங் சம்கீலா’. படமும் சரி ரஹ்மான் இசையில் அமைந்த படத்தின் அனைத்துப் பாடல்களும் சரி ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றன. இப்படியான நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இம்தியாஸ் அலி ராக்ஸ்டார் படத்தில் குன் ஃபயா குன் (Kun Faya Kun) பாடல் உருவான விதம் பற்றி பேசியுள்ளார்.
“இந்தப் பாடலுக்கு ஏற்ற வரிகளை நான், இம்தியாஸ் அலி மற்றும் பாடலாசிரியர் இர்ஷாத் கமில் ஆகிய மூவரும் சேர்ந்து யோசித்துக் கொண்டிருந்தோம். அப்போது இர்ஷாத் கமில் “குன் ஃபாயா குன்” என்றார். ரஹ்மான் (A R Rahman) உடனே அதிர்ச்சியடைந்துவிட்டார். எனக்கு அந்த வரிக்கான அர்த்தம் தெரியாது. ஆனால் ரஹ்மான் மற்றும் இர்ஷாத் கமில் ஆகிய இருவருக்கும் அது குர்ஆனிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்ட வார்த்தை என்று தெரியும். இதனால் இஸ்லாமிய மதத்தினர் புண்படுவார்கள் என்று அவர் பயந்தார். நாங்கள் யாரையும் புன்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் ஒரு பாடலை உருவாக்கவில்லை, ஆனாலும் இந்த மாதிரி இஸ்லாமிய மதத்தின் புனித நூலில் இருந்து நேரடியாக வரிகளை பயன்படுத்தும் போது நாங்கள் இன்னும் கவனமாக இருந்தோம்.
அதே போல் இந்தப் பாடலை ஹஸ்ரத் நிஸாமுத்தீன் தர்காவில் படம்பிடிக்கத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் அங்கு சென்ற பிறகு எங்களுக்கு ஏகப்பட்ட விதிமுறைகள் விதிக்கப்பட்டன. தர்காவின் உயரத்திற்கு மேல் கேமராவை பொருத்தக்கூடாது, ட்ராக் ஷாட் போடக்கூடாது என நாங்கள் நிறைய விஷயங்களை பின்பற்ற வேண்டியதாக இருந்தது. தர்கா சென்ற பிறகு நாங்கள் எல்லாவற்றையும் மீண்டும் திட்டமிட்டு படப்பிடிப்பை தொடங்கினோம்”என்று இம்தியாஸ் அலி கூறியுள்ளார்.