HBD Gautham Menon: "கனவு காதலின் கதாநாயகன்”: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பிறந்தநாள் இன்று..!
தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக காதல் காட்சிகளை வைத்து, அதனை ரசிகர்கள் தங்கள் வாழ்வில் பொருந்தி பார்க்கும் அளவுக்கு கவிதைகளாக மாற்றி அழகு பார்ப்பவர் கௌதம் மேனன்.
தனது தனித்துவமான படைப்புகளால் சினிமா ரசிகர்களிடையே தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுள்ள இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தமிழ் சினிமா ரசிகர்கள் எத்தனையோ காதலை கண்டுள்ளார்கள். மொழி தாண்டி மற்ற மாநில காதல்களையும் திரைப்படங்கள் வாயிலாக கண்டு வருகிறார்கள். அவற்றில் சில வகை காதல், காதல் காட்சிகள் தான் மனதுக்கு நெருக்கமான ஒன்றாக அமையும். ஆனால் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக காதல் காட்சிகளை வைத்து, அதனை ரசிகர்கள் தங்கள் வாழ்வில் பொருந்தி பார்க்கும் அளவுக்கு கவிதைகளாக மாற்றி அழகு பார்ப்பவர் கௌதம் மேனன்.
அவர் சினிமாவுக்கு அறிமுகமாகி 22 ஆண்டுகள் கடந்து விட்டது. எண்ணிப்பார்த்தால் தமிழில் 12 படங்கள், 2 ஆந்தாலஜி எபிசோட்கள், 4 தெலுங்கு, 2 இந்தி படங்கள் சேர்ந்து மொத்தம் 20 படங்கள் மட்டுமே கௌதம் இயக்கியுள்ளார். ஒவ்வொன்றும் ஒரு ரகம். ஆனால் இந்த படங்களுக்கெல்லாம் ஒரு ஒற்றுமை உள்ளது. எப்போதும் கௌதம் மேனன் படங்களில் ஹீரோயின்கள் அழகாக காட்டப்படுவார்கள் என்பது எழுதாத விதி.
மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா, நடுநிசி நாய்கள், நீதானே என் பொன்வசந்தம், என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, எனை நோக்கி பாயும் தோட்டா, வெந்து தணிந்தது காடு ஆகிய ஒவ்வொன்றும் தனி கைவண்ணங்கள்.
காட்சிகளின் ஹீரோ
கௌதமின் படங்களில் கதை ரொம்ப சிம்பிளாகவே இருக்கும். ஆனால் காட்சிகளுக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் சிம்பிள் கதையையும் சீரியஸாக மாற்றி விடும். “நீங்கள் ஒரு விஷயத்தை பார்க்கும்போது அது உங்களை எந்தளவுக்கு தாக்குகிறது” என்பது தான் கௌதம் மேனன் அடிப்படை கதையே. அதனால் தான் ஒவ்வொரு ரயில் பயணத்திலேயும் மேக்னாவை தேடிக் கொண்டிருக்கும். வயது அதிகமான பெண்ணை பார்த்து காதல் வயப்படும் போதும் ஜெஸ்ஸியையும் நினைத்துக் கொள்கிறோம்.
இத்தகைய சிந்தனைகளை சினிமாவால் மட்டும்தான் கொடுக்கமுடியும் என்று யோசித்தால் அதில் முதலில் கௌதம் படங்கள் தான் வரும். படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ஹஸ்கி வாய்ஸில் வசனம், ஒரு க்யூட்டான கதையமைப்பு என அவருக்கென்று ஒரு ட்ரேட் மார்க் உண்டு.
ஹீரோயின் -வில்லன் - ஹீரோ
முன்னரே சொன்னது போல கௌதம் மேனன் படங்களில் ஹீரோயின்கள் அழகாக காட்டப்படுவார்கள் என்பது எழுதாத விதி. அது ரீனா (மின்னலே), மாயா (காக்க காக்க), மேக்னா (வாரணம் ஆயிரம்), ஜெஸ்ஸி (விண்ணைத்தாண்டி வருவாயா), லேகா (எனை நோக்கி பாயும் தோட்டா), பாவை (வெந்து தணிந்தது காடு) என ஒவ்வொருவரிடம் நடை, உடை, பாவனை என அழகியலை காணலாம்.
ஹீரோவை விட படங்களில் வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். பாண்டியா (காக்க காக்க), அமுதன் - இளமாறன் (வேட்டையாடு விளையாடு), விக்டர் (என்னை அறிந்தால்) என வில்லன் கேரக்டரை நச்சென்று தேர்வு செய்திருப்பார். படம் முழுக்க ஆங்கிலத்தில் பேசுவது, காதல் மொழிகளை அள்ளி வீசுவது என கௌதம் மேஜிக் வேற லெவல் தான்.
காதல் கதையாக இருந்தாலும் சரி, காவல் கதையாக இருந்தாலும் சரி, கேங்க்ஸ்டர் கதையாக இருந்தாலும் சரி கௌதம் அலட்டிக்காமல் கெத்து காட்டுவார். இவரின் காட்சிகளுக்கு இசையமைப்பாளரும், ஒளிப்பதிவாளரும் கொடுக்கும் அழகு அற்புதம் தான். பாடல்களும் எவர் க்ரீன் ஹிட் என எழுதியே விடலாம். அந்த அளவுக்கு பார்த்து பார்த்து செதுக்கியிருப்பார்.
கதைகளின் ஹீரோ
மாதவன், சூர்யா, கமல்ஹாசன், சரத்குமார், சிம்பு, ஜீவா என படத்தின் ஹீரோக்கள் இருந்தாலும் கௌதம் படத்தில் கதை தான் ஹீரோ. அனைவருமே கதைக்கேற்றாற்போல் தான் நடிப்பார். அங்கு ஹீரோ பிம்பம் வெளிப்பட்டிருக்காது.
இயக்கம் டூ நடிப்பு
கௌதம் மேனனுக்கு நடிப்பு மீது ஒரு ஈர்ப்பு உள்ளது என்றே சொல்லலாம். “இத்தனை நாளா எங்கயா இருந்த” என்பது போல பல படங்களில் சின்ன கேரக்டர்களில் நடித்து வந்த அவர், கோலிசோடா-2, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ருத்ர தாண்டவம், சீதா ராமம், மைக்கேல் என படங்களில் நடிப்பிலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அடுத்ததாக அவர் நடிப்பில் விஜய்யின் லியோ, வெற்றிமாறனின் விடுதலை படங்கள் வெளியாகவுள்ளது.
ஜோஸ்வா இமைபோல் காக்க, துருவ நட்சத்திரம், வெந்து தணிந்தது காடு-2 என இயக்கத்திலும் கௌதம் டூயல் ரோல் செய்து வருகிறார். தனது பல படங்களுக்கு தயாரிப்பாளராகவும், சில படங்களில் பாடகராகவும் இருந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பன்முக கலைஞர் கௌதம் மேனனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!