Raman Abdullah: பாதையில் இருந்து சற்று விலகிய பாலு மகேந்திரா.. 26 ஆண்டுகளை நிறைவு செய்யும் ‘ராமன் அப்துல்லா’..!
பாலு மகேந்திராவின் அற்புதமான படைப்புகளில் ஒன்றான ‘ராமன் அப்துல்லா’ படம் வெளியாகி இன்றோடு 26 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
பாலு மகேந்திராவின் அற்புதமான படைப்புகளில் ஒன்றான ‘ராமன் அப்துல்லா’ படம் வெளியாகி இன்றோடு 26 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
பாலு மகேந்திராவின் தரமான படைப்பு
தமிழ் சினிமாவில் உணர்வுப்பூர்வமான படங்களை இயக்குவதில் முக்கியமானவர் இயக்குநர் பாலு மகேந்திரா. அவரின் கை வண்ணத்தில் கடந்த 1997 ஆம் வெளியான படம் ‘ராமன் அப்துல்லா’. இது 1994 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘மலப்புரம் ஹாஜி மஹானாயா ஜோஜி’ படத்தின்ரீமேக் ஆகும். இப்படத்தில் சிவகுமார் , கரண் , விக்னேஷ்,ஈஸ்வரி ராவ், ருத்ரா, சார்லி, பிரித்விராஜ் உள்ளிட்ட பலரும் நடிட்த்திருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
முக்கியமான விஷயம் ஒன்றை இயல்பாகவும் காமெடியாகவும் சொல்லும் போது அது மக்களை மிக எளிதாக சென்றடையும். அந்த வகையில் ‘ராமன் அப்துல்லா’ மறக்க முடியாத படைப்பாக அமைந்தது.
படத்தின் கதை
வேலை இல்லாமல் இருக்கும் டுடோரியல் காலேஜ் வாத்தியார் ராமன் (விக்னேஷ்), துபாயில் வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசையோடு இருக்கும் அப்துல்லாவும் (கரண்) நண்பர்கள். ஆனால் ஆசிரியருக்குப் படித்த பையனை அந்த துறையில் வேலை செய்ய வைக்க வேண்டும் என அப்துல்லா அப்பா நினைக்கிறார். இதனிடையே ஒருநாள் அப்துல்லா வீட்டுக்கு 2 தந்தி வரும். ஒன்று துபாயிலிருந்து வேலைக்கு அழைப்பு, மற்றொன்று ஊட்டியிலிருந்து ஆசிரியர் வேலைக்கு அழைப்பு.
என்ன செய்வதென்று தெரியாமல் அப்துல்லா, வேலை இல்லாமல் இருக்கும் ராமனின் புலம்பலை கேட்டு ஒரு ஐடியாவுக்கு வருகிறார். அதன்படி, ஊட்டிக்கு வேலைக்கு போறதா சொல்லிட்டு, நான் துபாய் போறேன், நீ ஊட்டி போய் சமாளிச்சுக்கோ என ராமனை அனுப்புகிறான். இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதையாகும்.
முத்தான பாடல்களை கொடுத்த இளையராஜா
இந்த படத்தில் கரணுக்கு ருத்ராவும், விக்னேஷுக்கு ஈஸ்வரிராவும் ஜோடியாக வருவார்கள். பாலுமகேந்திரா படங்களில் இல்லாத கடத்தல், சண்டைக் காட்சி என ஏகப்பட்ட விஷயங்கள் இப்படத்தில் இடம் பெற்றிருக்கும். பாடல்களுமே ஊட்டி, கொடைக்கானல், சிம்லா, காஷ்மீர் என்று அழகாக படமாக்கப் பட்டிருக்கும்.
பாலு மகேந்திரா படத்தில் இளையராஜா என்றால் சொல்லவா வேண்டும். அசத்தியிருப்பார். நாகூர் இ.எம்.ஹனீபா பாடிய உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்?, மால்குடி சுபா பாடிய மச்சான் உன் மச்சினி, எஸ்பிபி - சித்ரா பாடிய செம்பருத்திப் பெண்ணொருத்தி, முத்தமிழே முத்தமிழே பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் அருண்மொழியும் பவதாரிணியும் பாடிய என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குறே? பாடலில் பவதாரிணியின் குரல் காலத்துக்கும் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது.
பாக்ஸ் ஆபீஸில் ராமன் அப்துல்லா படம் தோல்வியடைந்தாலும், ரசிகர்கள் மனதில் என்றும் ஒரு மறக்க முடியாத படமாக அமைந்து விட்டது என்றே சொல்லலாம்.