Director Ameer: ஜனநாயகனா முக்கியம்?.. வெளுத்து வாங்கிய அமீர்.. அமைச்சர், ரசிகர்கள் மீது விமர்சனம்!
போராடும் மாணவர்களை ரௌடிகள் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருக்கிறார். பாஜக என்றைக்கு தமிழ்நாட்டு மக்களை மதித்திருக்கிறார்கள் என இயக்குநர் அமீர் விமர்சித்துள்ளார்.

ஜனநாயகன் படம் பற்றி இருக்கும் உணர்வை விட எதிர்கால சந்ததி நன்றாக இருக்க வேண்டும் என எங்களுக்கு இருக்கும் உணர்வு வலிமை மிக்கது என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அமீர் இங்கு போராடும் கூட்டம் அறிவார்ந்தது என தெரிவித்தார்.
ஜனநாயகனைக் காப்பாற்றும் பெரும் கூட்டம்
இந்நிகழ்ச்சியில் மேடையில் பேசிய அமீர், “நீட்டை கொண்டு வராமல் பார்த்துக் கொள்கிறோம். எங்களிடம் அதுக்கான ரகசியம் இருக்குதுன்னு சிலர் சொல்வார்கள். அவங்களும் கொண்டு வரமாட்டாங்க. அவங்களும் ஆண்டு முடிச்சிட்டு போயிடுவாங்க. கடைசி வரை அந்த ரகசியத்தை சொல்லமாட்டாங்க. அனிதா மரணத்திற்கு பின் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு கொடுக்க வீட்டிற்கு சென்றவர்களும் அதிகாரத்தில் இருப்பார்கள். அவர்களும் சொல்ல மாட்டார்கள். இந்த கட்சிகள் 2 எதுவும் செய்ய மாட்டார்கள்.
ஜனநாயகத்தை காப்பாற்ற இங்கே சிறிய கூட்டம் போராடிக் கொண்டிருக்கிறது. இதேவேளையில் அங்கே ஜனநாயகன் திரைப்படத்தை காப்பாற்ற ஒரு பெரும் கூட்டம் போராடிக் கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டம் இதைவிட பெரிய கூட்டமாக இருக்கலாம். ஆனால் இந்தக் கூட்டம் அவர்களைவிட அறிவார்ந்தக் கூட்டம் என கூறினார்.
பாஜக என்றைக்கு மதித்திருக்கிறார்கள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமீர், “மக்கள் எப்போது எல்லாம் போராட்டம் நடத்துகிறார்களோ அப்போதெல்லாம் காவல்துறை அல்லாத குண்டர்கள் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்துகிறார்கள். ஏற்கனவே டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழத்தினுள் குண்டர்கள் நுழைந்து தாக்குதல் நடத்தினார்கள். இது டெல்லியின் மாடல். அது தமிழ்நாட்டிற்குள் வர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். போராடும் மாணவர்களை ரௌடிகள் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருக்கிறார். பாஜக என்றைக்கு தமிழ்நாட்டு மக்களை மதித்திருக்கிறார்கள். ஹெச்.ராஜா தமிழ்நாட்டு மக்களை பொறுக்கிகள் என சொல்வார். அதன் நீட்சி தான் இது” என தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம், “அமைச்சர்கள் எல்லாரும் ஜனநாயகன் படத்துக்காக தியேட்டரில் இருக்கிறார்களே?” என்ற கேள்விக்கு அது அவர்களின் விருப்பம். அதுக்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என பதிலளித்தார். மேலும், ஜனநாயகன் படம் எங்களுடைய உணர்வு, அதை இந்த மாணவர்களுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம் என அமைச்சர் அருண்ராஜ் சொல்லியிருக்கிறாரே என எழுப்பப்பட்ட கேள்விக்கு, அந்த உணர்வை விட கூடுதல் உணர்வு இந்த நாடு நல்லாருக்க வேண்டும் என்பது தான். எதிர்கால சந்ததியினர் நன்றாக வாழ வேண்டும் என்ற எங்களுடைய உணர்வுக்கு தான் வலிமையும், மதிப்பும் அதிகம் என அமீர் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















