CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
தொடர்ச்சியாக விஜய் ஆய்வு செய்வது இணையத்தில் எதிர்கருத்துகளையும் பெற்று வருகிறது. ரீல்ஸ் போடவும், போட்டோஷூட் எடுக்கவும் அவர் இந்த ஆய்வை பயன்படுத்திக் கொள்கிறார் என சகட்டுமேனிக்கு விமர்சனத்தை முன்வைக்கின்றனர்.

சென்னையில் பல்வேறு இடங்களிலும் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் இது இணையத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
முதலமைச்சரான விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த விஜய் 2024ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி முதல்முறையாக களம் கண்டு ஆட்சியைப் பிடித்து வரலாற்று சாதனைப் படைத்தது. விஜய் முதலமைச்சராக பதவியேற்று இரண்டரை மாதங்கள் கடந்து விட்டது. இப்படியான நிலையில் தவெக அரசு லஞ்சம், ஊழல் இல்லாத நிர்வாகத்தைப் படைக்க வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
சென்னையில் தொடரும் ஆய்வு
இதற்கிடையில் காலை முதல் மாலை வரை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் அலுவல் பணிகளை மேற்கொள்கிறார் என்பது தொடங்கி அவரின் ஒவ்வொரு அசைவும் பேசுபொருளாக வைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அனைவருடன் எளிமையுடன் பழகுவது, தன் பக்கத்தில் நின்று கொஞ்சி பேசினாலும் அதனைக் கண்டு மகிழ்வது என கடந்த கால ஆட்சியாளர்களைப் போல இல்லாமல் விஜய் செயல்படுவது பலரையும் கவர்ந்துள்ளது.
இதனிடையே கடந்த ஜூலை 6ம் தேதி மாமல்லபுரம் அருகில் உள்ள நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து ஜூலை 27ம் தேதி கோயம்பேட்டில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதுமட்டுமல்லாமல் நேற்று முதலமைச்சர் விஜய் சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் தலைமையகத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதற்காக சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் முதல் நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.
Also Read: பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
அப்போது ரயிலில் பயணித்த பயணிகளுடன் அவர் கலந்துரையாடினார். செல்ஃபி எடுத்துக் கொண்டார். மேலும் நந்தனம் மெட்ரோ நிலையம் அருகே சாலையில் தன்னை காண காத்திருந்த மக்களை பார்த்து கையசைத்து சென்றார். தொடர்ந்து கிண்டி கத்திப்பாரா மற்றும் கிண்டி மெட்ரோ பகுதிகளில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகளை பார்வையிட்டதுடன், போரூர் - பூந்தமல்லி வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலில் பயணம் செய்து ஆய்வு செய்தார்.
கடந்த மாதம் தலைமைச் செயலகத்தில் புதிய அரசுப் பேருந்துகளைத் தொடங்கி வைத்தபோது திருவல்லிக்கேணி - பெரம்பூர் வழித்தட பேருந்தில் சிறிது தூரம் பயணம் மேற்கொண்டார்.
ஆசையைத் தீர்க்கிறாரா விஜய்?
ஆனால் விஜய் இப்படியாக ஆய்வு செய்வது இணையத்தில் எதிர்கருத்துகளையும் பெற்று வருகிறது. இந்தியாவின் பல மாநில முதல்வர்கள் தங்கள் மாநிலங்களில் ஆய்வு மேற்கொள்ளும் நிலையில் விஜய் செய்வது மட்டும் ஏன் தனித்துவமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் காட்டப்படுகிறது என்ற கேள்வியைப் பலரும் எழுப்பியுள்ளனர். ரீல்ஸ் போடவும், போட்டோஷூட் எடுக்கவும் அவர் இந்த ஆய்வை பயன்படுத்திக் கொள்கிறார் என சகட்டுமேனிக்கு விமர்சனத்தை முன்வைக்கின்றனர். இதற்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடுமையான பதிலடி கொடுக்கப்படுகிறது.
காரணம், விஜய் சினிமாவில் பிரபலமாக தொடங்கிய நிலையில் தன்னால் பல இடங்களுக்கும் சுதந்திரமாக செல்ல முடியவில்லை என நேர்காணல்களில் தெரிவித்துள்ளார். பல நேரங்களில் மாஸ்க் அணிந்தும், தன்னுடைய அடையாளம் வெளியே தெரியாதபடியும் வெளியே சென்று வரும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. இது விஜய் மட்டுமல்லாது ஒவ்வொரு பிரபலமும் சந்திக்கும் பிரச்னையாகும். அப்படியான நேர்காணலில் தனது ஆசைகளையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
அப்படியிருக்கும் மக்களுடன் மக்களாக வாழ எல்லாருக்கும் ஆசை இருக்கும். அது முதலமைச்சராக விஜய்க்கு நிறைவேறி இருக்கிறது. பேருந்து பயணம், மெட்ரோ ரயில் பயணம், மக்களை சாலைகளில் சந்திப்பது என கடமைக்கு மத்தியில் தனது ஆசையை தீர்த்துக் கொள்வதிலும் தவறில்லை. தொந்தரவாக அமைந்தால் தான் தவறு. முதலமைச்சர் விஜயை அனைவரும் தங்களில் ஒருவராக பார்க்கிறார்கள் என தவெக தரப்பு பதிலடி கொடுத்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















