Autograph: சேரனை சுற்றும் ஹீரோயின் சர்ச்சை.. மேடையில் பதிலடி கொடுத்த அமீர்!
ஆட்டோகிராஃப் என்ற படம் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் நடைபெற்ற பழைய நினைவுகளை பற்றி சொல்லும் படம். அந்த படத்தை 21 வருடம் கழித்தும் பேசுகிறோம்.

எனக்கும், சேரனுக்கும் இடையே கருத்து முரண் எப்போதும் இருக்கும் என இயக்குநர் அமீர் பட நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராஃப்
கடந்த 2004 ஆம் ஆண்டு சேரன் இயக்கி நடித்த படம் ஆட்டோகிராஃப். இந்த படத்தில் மல்லிகா, கோபிகா, சினேகா, கனிகா என நான்கு ஹீரோயின்கள் நடித்திருந்தனர். பரத்வாஜ் இசையமைத்த இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தேசிய மற்றும் மாநில அரசின் விருதுகளையும் வென்றது. ட்ரெண்ட் செட்டர் பட வரிசையில் இடம் பெற்ற ஆட்டோகிராஃப் 21 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இப்படம் நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது. இதனை முன்னிட்டு படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அமீர், “ஆட்டோகிராஃப் என்ற படம் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் நடைபெற்ற பழைய நினைவுகளை பற்றி சொல்லும் படம். அந்த படத்தை 21 வருடம் கழித்தும் பேசுகிறோம். இப்படத்தில் சேரனுக்கும் எனக்குமான உறவைப் பற்றி பேச நேரம் போதாது. சேரனைப் பற்றி அவரது உதவி இயக்குநர் பேசி கேட்டிருக்கிறேன். அவர்கள் எல்லாரும் சேரனைப் பற்றி நிறைய பேசுவார்கள்.
சேரனுக்கு உதவ நினைத்தேன்
நான் திரைத்துறைக்கு வரும் முன் சேரன் ஜெயித்த இயக்குநர். அதில் இந்த ஆட்டோகிராஃப் படத்தை எடுத்துக் கொண்டால், அப்போது நான் ராம் படம் இயக்கி கொண்டிருக்கிறேன். அப்போது ஆட்டோகிராஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த மேடையில் பேசிய சேரன், ஆட்டோகிராஃப் என படம் எடுத்து விட்டேன். இந்த படத்துக்காக பைனான்சியரிடம் எவ்வளவு கையெழுத்து போட்டிருப்பேன் என கலங்கி பேசினார்.
பின்னர் நிகழ்ச்சி முடிந்த வெளியே வந்தவரிடம், நானே கடன் வாங்கி படம் எடுக்கும் சூழலில், நான் வேண்டுமானாலும் ரூ.1 லட்சம் ரெடி பண்ணி தரட்டுமா என கேட்டேன். அவர் அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என கூறி சென்று விட்டார். அதன்பிறகு படத்தின் வெற்றிக்குப் பின்னால் தான் அவரை சந்தித்தேன். அதற்குள் அவரது உதவி இயக்குநர்கள் எனக்கு நெருக்கமாகி விட்டார்கள். அதனைக் கண்டு அவர் கொஞ்சம் டென்ஷனாகி விடுவார்.
சேரன் ஜெயிக்க வேண்டும்
அவரிடம் இருந்து உதவி இயக்குநர்கள் விலகும்போது காரணம் கேட்டால் ஹீரோயின் தான் என சொல்வார்கள். ஆனால் உண்மையில் சேரன் தன்னுடைய வாழ்க்கையில் இயல்பாகவே சகோதரர்களை விட, சகோதரிகளுடம் அதிகம் பழகியவர். அதனால் தன் படங்களின் ஹீரோயின்களை அவ்வளவு நன்றாக பார்த்துக் கொள்வார்.
சேரன் தமிழ் சினிமாவில் சாதித்த, தவிர்க்க முடியாத கலைஞன். அவரின் அலுவலகம் சென்றால் அங்கிருக்கும் விருதுகளைப் பார்க்க பொறாமையாக இருக்கும். கே.பாலச்சந்தருக்கு பிறகு அதிகம் விருதுகளை அங்கே தான் பார்த்தேன். சேரனின் முதல் திரைப்படத்தை ஊரில் இருக்கும்போது பார்த்தவன் நான். அதன்பிறகு அவரின் வெற்றியைக் கண்டேன்.
சேரனுக்கும் எனக்கும் நிறைய முரண்பாடு உள்ளது. நான் எது சொன்னாலும் அவர் கேட்க மாட்டேன். இருந்தாலும் நான் சொல்லிக் கொண்டே இருப்பேன். ஆனாலும் அவருடனான உறவை அப்படியே தொடர்கிறேன். சேரன் எப்போதும் ஜெயிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டே இருப்பேன்” என அமீர் தெரிவித்துள்ளார்.






















