Nagaraj about Na. Muthukumar : சம்பளத்தை திருப்பி கொடுத்துவிட்டார்... நா. முத்துக்குமார் பற்றி நெகிழ்ந்த நாகராஜ்
Nagaraj about Na. Muthukumar : பாடலாசிரியர் நா. முத்துக்குமார் பற்றி நினைவலைகளை பகிர்ந்து நெகிழ்ச்சி அடைந்த 'தினந்தோறும்' புகழ் இயக்குநர் நாகராஜ்.
தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குநர்களாக அடியெடுத்து வைப்பவர்கள் அனைவருமே முதல் படத்திலேயே கவனம் ஈர்ப்பது கிடையாது. ஆனால் அதில் ஒரு சிலர் விதிவிலக்காக முதல் படமே அட்டகாசமாக கொடுத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைப்பார்கள். அப்படி பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் தான் நாகராஜ். 1998ம் ஆண்டு முரளி, சுவலட்சுமி, மணிவண்ணன், தலைவாசல் விஜய், பாலா சிங் நடிப்பில் வெளியான 'தினந்தோறும்' திரைப்படம் தான் அவர் இயக்கிய முதல் படம்.
ஒவ்வொரு ஆணின் வளர்ச்சிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பதை மையமாக வைத்து வேலையில்லாமல் சுற்றி திரியும் வாலிபர்களை திருத்தி நல்வழிப்படுத்தும் பெண்களை சுற்றிலும் நகர்ந்த அந்த கதைக்களம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 100 நாட்களை கடந்து திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. முதல் படத்தை அதிரிபுதிரி ஹிட் கொடுத்த நாகராஜ் அடுத்தடுத்த படைப்புகள் எப்படி இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. ஆனால் நாகராஜ் 'தினந்தோறும்' திரைப்படத்திற்கு பிறகு வேறு எந்த ஒரு படத்தையும் இயக்கவில்லை.
மிகவும் திறமையான இயக்குநரான நாகராஜ் மது பழக்கத்திற்கு அடிமையானதால் அவரின் திரை வாழ்க்கையை தொலைத்தார். கெளதம் மேனன் இயக்கிய பெரும்பாலான படங்களின் வசனங்களை நாகராஜ்தான் எழுதி இருந்தார் என்பதை சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் தெரிவித்து இருந்தார்.
அந்த நேர்காணலில் இயக்குநர் நாகராஜ் பேசுகையில், பாடலாசிரியர் நா. முத்துக்குமார் பற்றின தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். இயக்குநர் நாகராஜ் ஒரு இடைவேளைக்கு பிறகு 'மத்தாப்பூ' என்ற படத்தை இயக்கினார். அப்படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களுக்கும் நா. முத்துக்குமார் தான் பாடல் வரிகளை எழுதியிருந்தார். அதற்கு சம்பளமாக நாகராஜ் தயாரிப்பாளரிடம் இருந்து 80 ஆயிரத்தை பெற்று நா. முத்துகுமாரிடம் கொடுத்துள்ளார். அதில் இருந்து நா. முத்துக்குமார் வெறும் 5 ஆயிரத்தை மட்டும் சம்பளமாக பெற்றுக் கொண்டு மீதி பணத்தை நாகராஜிடம் கொடுத்து உள்ளர். நாகராஜ் ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு படம் இயக்க வந்து இருந்ததால் அவரிடம் பண இருக்குமோ இல்லையோ என தெரியாததால் அந்த பணத்தை அவருக்கு உதவியாக இருக்கும் என திருப்பி கொடுத்துள்ளார் நா. முத்துக்குமார். அந்த சமயத்தில் நாகராஜிடம் வெறும் 300 ரூபாய் மட்டுமே இருந்துள்ளது.
நா. முத்துக்குமார் பெயரில் மட்டும் முத்து இல்லை அவர் மனதளவிலும் முத்து தான். அவரை போன்ற ஒரு நல்ல மனிதரை பார்ப்பது மிகவும் கடினம்" என நா. முத்துக்குமார் பற்றின தனது நினைவலைகளை அந்த நேர்காணலில் பகிர்ந்து இருந்தார் தினந்தோறும் நாகராஜ்.