Dhruv Vikram: பிரபல மலையாள நடிகைக்கு ஜோடியாகும் துருவ் விக்ரம்: விரைவில் படப்பிடிப்பு!
Dhruv Vikram: கபடி விளையாட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகவுள்ளதால் கபடி பயிற்சிகளை மேற்கொண்டு தன்னை தயார் படுத்தி வருகிறார் துருவ் விக்ரம்.
'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் ஒட்டுமொத்த திரை ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் மாரி செல்வராஜ் அதை தொடர்ந்து கர்ணன், மாமன்னன் என அழுத்தமான திரைக்கதை மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்கவைத்தார்.
தற்போது அடுத்ததாக அவர் இயக்கப்போகும் படம் குறித்த அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. கபடி விளையாட்டை மையமாக வைத்து இயக்க இருக்கும் படத்தின் ஹீரோவாக நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார். ஆதித்யா வர்மா, மகான் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் துருவ் விக்ரம். அடுத்ததாக இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கபடி விளையாட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகவுள்ளதால் கபடி பயிற்சிகளை மேற்கொண்டு தன்னை தயார் படுத்தி வருகிறார்.
மார்ச் 15ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை முழுவதுமாக முடித்து மே மாதத்தில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பல நல்ல படங்களை தயாரித்து வரும் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
ஏற்கனவே இப்படத்தின் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் திடீரென நிறுத்தப்பட்டு 'மாமன்னன்' படத்தில் கவனம் செலுத்தி வந்தார் மாரி செல்வராஜ். உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபகத் பாசில் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மாமன்னன் படத்தைத் தொடர்ந்து தனது சொந்த தயாரிப்பில் 'வாழை' என்ற படத்தை எடுத்துள்ளார். இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிடப்பில் போடப்பட்ட இந்த திரைப்படத்தை மீண்டும் தூசி தட்டி தீவிரம் காட்டி வருகிறார் என்றும் இதன் படப்பிடிப்பு தூத்துக்குடி மற்றும் நெல்லை சுற்றிய பகுதிகளில் நடைபெற உள்ளது என்றும் கூறப்படுகிறது. கயல் ஆனந்தி, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்.
1990ஆம் ஆண்டு காலகட்டத்தில் கபடி விளையாட்டில் சிறந்து விளங்கிய வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது.
மேலும் துருவ் விக்ரம் ஜோடியாக மலையாள நடிகை தர்ஷனா ராஜேந்திரன் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே மூணே மூணு வார்த்தை, கவண், இரும்புத்திரை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் வெளியான ஹிருதயம், ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார். மேலும் மலையாளம் தாண்டி இந்தி, வெப் சீரிஸ் என பான் இந்திய நடிகையாக கலக்கி வரும் தர்ஷனா ராஜேந்திரன் துருவ் விக்ரமை விட 9 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.