Vaathi Director: 'தமிழ்நாட்டு இடஒதுக்கீடு முறை பற்றி எனக்கு தெரியாது..' - ரிசர்வேஷன் பற்றி மீண்டும் வாத்தி இயக்குனர்
ப்ரமோஷன் பணிகளின் போது முன்னதாக தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்த இயக்குனர் வெங்கி அட்லூரி, இட ஒதுக்கீடு பற்றி பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி, கென் கருணாஸ் உள்ளிட்டோர் நடிப்பில், தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் கடந்த பிப்.17ஆம் தேதி வாத்தி படம் வெளியானது.
வாத்தி:
தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் வெளியான வாத்தி படம் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட நிலையில், கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதும், 10 நாள்களில் நல்ல வசூலை ஈட்டியுள்ளது. கல்வி வியாபாரத் தந்தைகள், தனியார்மயமாக்கப்பட்ட கல்வி ஆகியவை குறித்து பேசும் வகையில் வாத்தி படத்தின் கதை அமைந்துள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷ் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன.
ஆனால் இந்தப் படத்தின் ப்ரொமோஷன் பணிகளின் போது முன்னதாக தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்த இயக்குனர் வெங்கி அட்லூரி, இட ஒதுக்கீடு பற்றி பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இட ஒதுக்கீடு சர்ச்சை:
நான் கல்வி அமைச்சரானால் இட ஒதுக்கீட்டை நீக்கிவிடுவேன். சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது. பொருளாதார அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும்” என்று அவர் பேசிய நிலையில், சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் வெங்கி அட்லூரிக்கு எதிராகக் கிளம்பின.
இந்நிலையில், முன்னதாக இட ஒதுக்கீடு பற்றிய தன் கருத்தையும் தன் கருத்தின் நோக்கம் குறித்தும் மீண்டும் வெங்கி அட்லூரி பேசியுள்ளார்.
வாத்தி படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று (பிப்.25) நடைபெற்ற நிலையில், அப்போது இயக்குனர் வெங்கி அட்லூரி பேசியதாவது:
கொஞ்சம்தான் தமிழ் தெரியும்:
என் மீது நம்பிக்கை வைத்த நடிகர் தனுஷூக்கு நன்றி. இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றிய எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வாத்தி படம் எட்டு நாள்களில் 75 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. இதற்கு மேல் என்ன வேண்டும்?
நான் தமிழில் பேச விரும்புகிறேன். ஆனால் எனக்கு கொஞ்சம் தான் தெரியும். என் மீது நம்பிக்கை வைத்த வம்சிக்கு நன்றி.படம் இன்னும் இரண்டு, மூன்று வாரங்களுக்கு நன்றாக ஓடும் என நான் நம்புகிறேன்.
என் பார்வையில் கல்வி பொருளாதாரரீதியில் பின்தங்கியவர்களுக்கும் சென்று சேர வேண்டும். இந்தியாவில் கல்வி சிறப்பாக இருந்தாலும், விலை உயர்ந்ததாக உள்ளது. அரசுப் பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன.
இட ஒதுக்கீடு பற்றி தெரியாது:
வட இந்திய பள்ளிகளை நான் அதிகம் பார்த்ததில்லை. தென்னிந்தியப் பள்ளிகள் மீது தான் எனக்கு ஆர்வம். எனக்கு தமிழ்நாட்டைப் பற்றி அதிகம் தெரியாது, இங்கு உள்ள இட ஒதுக்கீடு பற்றியும் அதன் சூழல் பற்றியும் எனக்கு தெரியாது.
இட ஒதுக்கீடு பற்றி நான் முன்பு சொன்ன கருத்து சர்ச்சையாகி உள்ளது. நான் அது பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. இட ஒதுக்கீட்டில் பொருளாதார ரீதியில் பின்தங்கியோரையும் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். கல்வியானது அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் என் கருத்து. அது தான் நம் நாட்டின் வளர்ச்சி, சமுதாயத்தின் வளர்ச்சி, அது தான் என் நோக்கம்” எனப் பேசியுள்ளார்.
தனுஷ் பற்றி பேசிய இயக்குநர் வெங்கி அட்லூரி, தனுஷ் உடன் பணியாற்றுகையில், ”நாம் சரியாக வேலை செய்ய வேண்டும். பார்த்துக்கலாம் எனும் பேச்சுக்கெல்லாம் இடமே இல்லை. தனுஷ் என்னை ஒரு நல்ல இயக்குனராக உருவாக்கியுள்ளார். நாம் ஒரு நல்ல நடிகர், தொழில்நுட்பக் கலைஞருடன் பணிபுரியும்போது, நாமும் இணைந்து நல்ல கலைஞராக மாறுவோம்” என்றார்.