ABP Exclusive: ‛பிரச்னை வரக்கூடாது... நீங்க சொல்றதை செய்றேன்னு அஜித் சொன்னார்’ திருச்சி DC ஸ்ரீதேவி சிறப்பு பேட்டி!
‛‛நான் காத்திருந்து கூட போறேன்... எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை’ அப்படினு அஜித் சார் சொன்னாரு. இதை தான், அவர் சொல்லிட்டே இருந்தாரு. போலீசுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தாரு’’ -DC ஸ்ரீதேவி
திருச்சி வந்த நடிகர் அஜித்தை காண அவரது ரசிகர்கள் திரண்டதும். அதை கட்டுப்படுத்த தனி ஒரு ஆளாக நின்று, கையில் மைக்கோடு எந்த அசம்பாவிதமும் இல்லாமல் நிகழ்ச்சியை முடித்து வைத்தவர் திருச்சி காவல் துணை ஆணையர் ஸ்ரீதேவி ஐ.பி.எஸ். ரசிகர்களையும் திருப்திப்படுத்தி, அஜித்தையும் திருப்திப்படுத்தி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் திருப்திப்படுத்தி, சுமூகமாக சிறு உரசல் கூட இல்லாமல் இந்த நிகழ்ச்சியை நிறைவு செய்ய முக்கிய காரணமாக இருந்த திருச்சி காவல் துணை ஆணையர் ஸ்ரீதேவி ஐ.பி.எஸ்., ABP நாடு இணையத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டி இதோ...
‛‛ரசிகர்கள் மிகவும் ஒத்துழைத்தார்கள். நான் மைக்கில் அறிவித்ததுமே எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். ‛அஜித் சார் கொஞ்சம் பிஸியா இருக்காரு... அவர் அவசரமா கிளம்பனும்... நீங்க பார்த்துட்டு போய்டுங்கனு சொன்னேன். கயிறு கட்டியிருந்தோம். அந்த கயிறை தாண்டி வரக்கூடாது என்று கேட்டுக் கொண்டேன்; அவர்களும் அதை அப்படியே பின்பற்றினார்கள் . ‛அவரை பார்த்தால் கிளம்பி விடுவீர்களா?’ என்று கேட்டேன், அவர்களும் அதற்கு உடனே சம்மதம் தெரிவித்தனர்.
உடனே அஜித் சாரிடம் அதை தெரிவித்தேன். அவரும் உடனே வெளியே வந்து பார்த்தார். அவர் பார்த்த 5வது நிமிடத்தில் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு விட்டனர். ரசிகர்களால் தான் இது அமைதியாக முடிந்தது. உறுதியளித்தபடி, நாகரீகமாக ரசிகர்கள் நடந்து கொண்டனர். அதனால் தான் எந்த பிரச்சனையும் இல்லாமல் இது முடிந்தது. அஜித் சாரை பார்த்ததும், அவர்களுக்கு திருப்தியாகிவிட்டது. ஒரு சிலர் தான், போகவே இல்லை. இது வழக்கமாக உச்ச நட்சத்திரங்களை பார்க்கும் போது வரும் இயல்பான குணம் தான். ஆனால், யாராலும் பிரச்சனை ஏற்படவில்லை.
அஜித் சார் வருவதாக எனக்கு எந்த தகவலும் வரவில்லை. விசாரித்த போது தான், மதியம் அவர் வந்து, உடனே கிளம்புவதாக இருந்ததாக கூறினார்கள். கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடிய பிறகு தான், எனக்கு தகவல் சொன்னார்கள். அதன் பின், போலீசார் அங்கு சென்றோம். அவர் பெரிய ஸ்டார்; அவருக்கு கூட்டம் கூடத்தான் செய்யும். எங்களுக்குத் தெரிந்திருந்தால், அதிக போலீசாரை பாதுகாப்பு பணியில் அமர்த்தியிருப்போம்.
நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்தது எல்லாமே கண்ணாடி கதவுகள். அங்கிருந்த கூட்டம் கொஞ்சம் கட்டுப்பாட்டை இழந்திருந்தாலும், உடைத்துக் கொண்டு உள்ளே வந்திருப்பார்கள். அதனால் பெரிய பிரச்சனையே கூட எழுந்திருக்கலாம். ஆனால், அந்த அளவிற்கு அங்கிருந்த ரசிகர்கள் நடந்து கொள்ளவில்லை. மிக மிக நாகரீகமாக அவர்கள் நடந்து கொண்டார்கள்.
அமைதியா நின்று பார்த்துட்டு, சொன்னதை கேட்டு நடந்துட்டாங்க. அஜித் சாரும், இரு முறை வந்து பார்த்து அவர்களை உற்சாகப்படுத்தி அனுப்பி வெச்சாரு. ‛எந்த பிரச்னையும் வரக்கூடாது... நீங்க சொல்லுங்க... நான் அதை செய்யுறேன். நான் காத்திருந்து கூட போறேன்... எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை’ அப்படினு அஜித் சார் சொன்னாரு. இதை தான், அவர் சொல்லிட்டே இருந்தாரு. நல்ல ஒத்துழைப்பு போலீசுக்கு கொடுத்தாரு அஜித்.
அவர் வந்து வெளியே நின்றதுமே எல்லாரும் ஹேப்பி ஆகிட்டாங்க. போலீஸ்காரர்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றினு சொன்னாரு. என்னிடம் மட்டும் இதை சொல்லவில்லை; கான்ஸ்டபிள் வரைக்கும் அனைவரிடமும் சொன்னாரு. உண்மையில் அவர் ஒரு ‛நைஸ் ஜென்டில்மேன்’.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யும் அளவிற்கு எதுவும் நடக்கவில்லை. வன்முறையாகவும், பிரச்னைக்குரியதாகவும் அவர்கள் அங்கு துளி கூட நடந்து கொள்ளவில்லை. நாங்கள் சொன்னதை அவர்கள் மீறவே இல்லை. குடும்பங்கள், குழந்தைகள் அதிகம் வந்திருந்தார்கள். மைக் வேலை செய்யவில்லை. அதனால், அவர்களிடம் பேச கொஞ்சம் சிரமப்பட்டேன். இருந்தாலும், நான் கூறியதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்.
ரசிகர்களுக்கு தான் நன்றி சொல்லனும். நான் சொன்னதை அப்படியே கேட்டு ஒத்துழைத்த அனைவருக்கும் திருச்சி காவல்துறை சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.’’
என்று அந்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.