Watch Video | புனீத் ராஜ்குமார் ஆன்மா சாந்தியடையணும்.. மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா!
கன்னட பவர் ஸ்டார் புனீத் ராஜ்குமாரின் அகால மரணம் திரைத்துறையினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கன்னட பவர் ஸ்டார் புனீத் ராஜ்குமாரின் அகால மரணம் திரைத்துறையினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் அவரின் மறைவையடுத்து இசைஞானி இளையராஜா சிவன் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கன்னட பவர் ஸ்டார் புனீத் ராஜ்குமாருக்கு உடற்பயிற்சி செய்யும்போது நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் சரத்குமார் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கதறி அழுத காட்சிகள் காண்போரைக் கலங்கச் செய்தது. தமிழ்த் திரையுலகின் பிரபலங்களான, அஜித், சூர்யா, இயக்குநர் ஷங்கர், கமல்ஹாசன் எனப் பலரும் புனீத்துக்காக இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இசைஞானி இளையராஜா கோயிலில் மோட்ச தீபம் ஏற்றி புனீத் ஆன்மா சாந்தியடைய வேண்டியுள்ளார். மோட்ச தீபத்தை ஏற்றிவிட்டு புனீத் ராஜ்குமாரின் ஆன்மா சாந்தியடையட்டும், சாந்தியடையட்டும், சாந்தியடையட்டும் என மூன்று முறை கூறினார்.
அந்த வீடியோ இளையராஜாவின் பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில் அவர், அன்புக்குரிய புனித் ராஜ்குமார் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை தந்துள்ளது. அவரது குடும்பத்தாருக்காக இந்தக் கடினமான நேரத்தில் நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
அவர் விழிகள் வாழும்..
கன்னட மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட மறைந்த திரைப்பட நடிகர் புனீத் ராஜ்குமார் காலமானார். 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே தனது கருவிழிகள் உட்பட உடலின் அனைத்து உறுப்புகளையும் தானமாக வழங்க உறுதியளித்து இருந்தார். அதற்கேற்றவாறு, புனித் ராஜ்குமாரின் கண்கள் தானமாக அளிக்கப்பட்டுள்ளது. புனீத் ராஜ்குமார் கன்னட திரையுலகில் கொடிக்கட்டிப் பறந்த ராஜ்குமாரின் (அன்னாவரு) கடைசி புதல்வராவார். 1954-ம் ஆண்டு பெடரா கண்ணப்பா என்ற படத்தில் சினிமாவுக்கு அறிமுகமானவர் ராஜ்குமார். இந்தப் படம் தமிழில் வேடன் கண்ணப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் கண்ணப்பன் வேடமேற்று நடித்த ராஜ்குமார் தனது ஒரு கண்ணை இறைவனுக்கும் கொடுத்துவிடுவது போல் காட்சியமைக்கப்பட்டிருக்கும். மேலும், தனது மறுகண்ணையும் தானமாக கொடுக்கத் தயாராகும் பொழுது, இறைவனே அவன் செயலைத் தடுத்து, "நில்லு கண்ணப்ப' என்று கூறி அருள்புரிவார்.
இதன் காரணமாக, ராஜ்குமார் தனது மறைவக்குப் பிறகு தனது கருவிழிகளை தானமாக வழங்க முடிவு செய்து, அதன்படியே வழங்கினார். ராஜ்குமாரின் மறைவுக்குப் பிறகு, அவரின் கோடிக்கணக்கான ரசிகர்களையும் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஊக்குவிக்க ராஜ்குமார் அறக்கட்டளையை அவரின் புதல்வர்கள் நிறுவினர்.
இந்நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டு ராஜ்குமாரின் 83ம் பிறந்தநாள் விழாவில் , "Dr. Rajkumar-The Person Behind The Personality" என்று புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது . இதில், கலந்துகொண்டு பேசிய புனீத் ராஜ்குமார், "மறைவுக்குப் பிறகு கருவிழிகள் உட்பட ஒட்டுமொத்த உடல் உறுப்புகளையும் தானம் அளிக்க ராஜ்குமார் குடும்பத்தினர் உறுதி ஏற்கிறோம்" என்று தெரிவித்தார்.
அதன்படி இப்போது அவரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன.