AA26: கெத்து காட்டும் அட்லீ.. அல்லு அர்ஜூனுக்கு ஜோடியான தீபிகா படுகோனே.. மாஸ் என்ட்ரி
அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக ஷாருக்கான் பட நடிகை கமிட் ஆகியுள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் அட்லீ. இந்தியில் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் பாலிவுட் திரையுலகையே வியக்க வைத்தது. 1000 கோடி வசூல் செய்து பெரிய லாபத்தை ஈட்டிய படமாகவும் அமைந்துள்ளது. இதைத்தொடர்ந்து அட்லீ அடுத்து யாரை வைத்து இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்தது. பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக திகழும் சல்மான் கானை வைத்து படம் இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
அட்லீ - அல்லு அர்ஜூன் காம்போ
அதே நேரத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் இந்திய அளவில் புதிய டிரெண்டை உருவாக்கியது. இதுவரை இல்லாத அளவிற்கு 1600 கோடிக்கு வசூல் செய்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. இதன் பின்னர் கடந்த சில மாதங்களாகவே அல்லு அர்ஜூன் - அட்லீ கூட்டணியில் புதிய படம் உருவாக இருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அட்லீ - அல்லு அர்ஜூன் ஆகிய இரண்டு வசூல் சக்கரவர்த்திகள் சேர்ந்தாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். ரசிகர்கள், சினிமா விமர்சகர்கள் யூகித்த படியே இருவரும் இணைவது உறுதியானது. இதுதொடர்பான அறிவிப்பையும் பிரம்மாண்ட முறையில் சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
பிரம்மாண்ட தயாரிப்பு
அல்லு அர்ஜுன் பிறந்தநாளான அன்று புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. பீரியட் கதையைக் கொண்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என்ற ஹைப்பை படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர். முதல் முறையாக அட்லீ - அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகும் இத்திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் பேரலல் யூனிவர்ஸ் கான்சப்டில் உருவாகி வருகிறது. ஹாலிவுட்டில் அவதார் படத்தை போன்று இப்படத்திற்காக ஒரு உலகத்தை கிராபிக்ஸ் முறையில் உருவாக்கி வருகிறார்கள். அதேபோன்று அல்லு அர்ஜூன் இப்படத்தில் 3 கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
இவர்தான் ஹீரோயினா?
தமிழ் சினிமாவில் எந்திரன், 2.0 படத்திற்கு பிறகு மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுவாகும்.
உலக தரத்தில் படத்தை எடுக்க திட்டமிட்டிருக்கும் இயக்குநர் அட்லீ, பிரியங்கா சோப்ராவை ஹீரோயினாக நடிக்க வைக்க முடிவெடுத்திருந்தார். ஹாலிவுட்டை கலக்கி வரும் பிரியங்கா சோப்ரா இப்படத்தில் இடம்பிடித்தால் வணிகரீதியாக நல்ல லாபம் பெறலாம் என்ற கணக்கும் இருந்தது. ஆனால், அதையெல்லாம் பிரியங்கா தவுடு பொடியாக்கினார். கால்ஷீட் பிரச்னையால் பிரியங்கா சோப்ரா நடிக்க முடியாமல் போனது. யார் ஹீரோயின் என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இன்று புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் நாயகியாக தீபிகா படுகோன் இணைந்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
The Queen marches to conquer!❤🔥
— Sun Pictures (@sunpictures) June 7, 2025
Welcome onboard @deepikapadukone✨#TheFacesOfAA22xA6
▶️ https://t.co/LefIldi0M5#AA22xA6 - A Magnum Opus from Sun Pictures💥@alluarjun @Atlee_dir#SunPictures #AA22 #A6 pic.twitter.com/85l7K31J8z
இந்த வீடியோவில் இயக்குநர் அட்லீ தீபிகா படுகோனிடம் கதையை கூறுவது போன்று உள்ளது. பின்பு கதையை கேட்டு இம்ப்ரஸ் ஆன தீபிகா படத்தில் இணைவதை உறுதி செய்கிறார். அங்கிருந்து கட் பண்ணா தீபிகா படுகோன் ஆக்சன் அவதாரத்தில் காட்சியளிக்கிறார். அதற்கான டெஸ்ட் காட்சிகள் தொடர்பான வீடியோவும் இடம்பிடித்திருக்கிறது. இதில், தீபிகா படுகோன் வேற்று கிரக வாசியாக வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில், முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகள் இடம்பிடித்துள்ளன. தீபிகா படுகோன் கடுமையான முயற்சி எடுத்துள்ளார் என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.





















