Dahaad Web Series: 29 பெண்கள் கொலை.. கண்ணெதிரே குற்றவாளி....திணறும் காவல்துறை.. அமேசான் பிரைமை கலக்கும் தஹாத்
கடந்த மே 12-ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியான இணையத் தொடர் தஹாத் (சிங்கத்தின் உறுமல்).
கடந்த மே 12-ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியான இணையத் தொடர் தஹாட் (சிங்கத்தின் உறுமல்). பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா, விஜய் வர்மா ஆகியவர்கள் மையக் கதாபாத்திரமாக நடித்துள்ளார்கள். அண்மையில் இந்தியாவில் வெளியாக இணையத் தொடர்களில் நல்ல விமர்சனங்களைப் பெற்றது இந்தத் தொடர். எதனால் அப்படி? என்று ஒரு சின்ன விமர்சனமாக பார்க்கலாம்... நிச்சயமாக இதில் ஸ்பாய்லர்கள் கிடையாது.
தஹாட் ( சிங்கத்தின் உறுமல்)
ராஜஸ்தான் மாநிலத்தில் மண்டாவா என்கிற ஒரு சிறிய கிராமத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சில மாதங்களாக காணாமல் போகிறார். அவரைத் தேடி விசாரணையைத் தொடங்குகிறார் அஞ்சலி பாத்தி (சோனாக்ஷி சின்ஹா) என்கிற சப் இன்ஸ்பெக்டர். இந்த ஒரு பெண்ணைத் தேடுவதில் இருந்து தொடங்கும் விசாரணை அடுத்தடுத்து மொத்தம் 29 பெண்கள் அதேமாதிரி காணாமல் போனது தெரியவருகிறது. கூடுதல் விசாரணையில் அவர்கள் ஒவ்வொருவராக இறந்த நிலையில் மீட்கப்படுகிறார்கள்.
யார் இந்தப் பெண்கள்?
இந்த 29 பெண்களுக்கும் இருக்கும் ஒற்றுமை என்னவென்றால் அவர்கள் அனைவரும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள். அனைவரும் மரணமடைவதும் ஒரே மாதிரியான வகையில்தான். காதலித்து தனது வீட்டிற்கு ஒரு கடிதம் எழுதிவைத்து விட்டு ஓடிச்சென்றவர்கள்தான். இவர்களை எல்லாம் கொலை செய்வது யார்? எதற்காக?
கொலையாளி
தொடரின் இறுதிவரை பதுக்கி வைத்து ஒரு பெரிய ட்விஸ்ட் வைத்து எல்லாம் நமக்கு கொலையாளியை காட்டமுயற்சிக்காமல் தொடக்கத்திலேயே யார் இந்த கொலையை செய்கிறார் என்பதை நமக்கு காட்டிவிடுகிறார்கள். இந்தக் கொலைகளை அவன் எப்படி, ஏன் செய்கிறார் என்பது படிப்படியாக வெளிகாட்டப்படுகிறது. குற்றவாளி தெளிவாக கண்ணுக்குத் தெரிந்தும் போதிய ஆதாரங்களைத் திரட்ட காவல்துறை எந்த மாதிரியான சவால்களை எதிர்கொள்கிறது? என்பதே மையக் கதையாக இருக்கிறது.
கதாபாத்திரங்கள்
மையக் கதையாக விசாரணை சென்றுகொண்டிருக்க சமகாலத்தியப் பிரச்சனைகளும் இந்தத் தொடரில் விவாதிக்கப்படுகின்றன. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் சமூகத்தில் தனக்கான அடையாளத்தைத் நிலைநாட்ட சந்திக்கும் சவால்கள். சாதிய ரீதியான ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை துணிச்சலாக எதிர்கொள்ளும் ஒரு பெண்ணின் கதாபாத்திரமாக சோனாக்ஷி சின்ஹாவின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
காவல்துறை அதிகாரிகள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அழுத்தங்கள், அவர்களது அந்தரங்க சிக்கல்கள் ஆகியவை இந்த தொடரில் நம்மை மேலும் ஈடுபாடு கொள்ளச்செய்கின்றன.
ஏற்றத்தாழ்வுகளின் பிரதிநிதி குற்றவாளி
மேலும் பெரும்பாலானபடங்களில் வரும் கொலையாளிக்கும் இந்தத் தொடரில் வரும் கொலையாளிக்கு இருக்கும் ஒரு வித்தியாசம் என்னவென்றால் . சீரியல் கில்லர் என்று சொன்னால் அவன் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டத் தாக்கங்களால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு கொலைகளை செய்து வருவான். ஆனால் கொலையாளி தன்னுடைய தனிப்பட்ட காரணங்களால் மட்டுமில்லை சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளின் பிரதிநிதியாகவே அவன் உருவாகிறான் என்கிற தரப்பை எடுத்திருக்கிறது இந்தத் தொடர். இந்திய இணையத் தொடர்களில் நிச்சயம் ஒரு நல்ல முயற்சி தஹாட்