Imman On Vijay : ‛ப்ரியங்கா சோப்ராவை அடையாளம் காட்டியதே விஜய் சார்தான்...’ புதிய ரகசியத்தை உடைத்த டி.இமான்!
‛‛தமிழனில் ‛ஹாட் பார்ட்டினு’ ஒரு பாடல் வரும், அதில் ஹம்மிங் வரும். அப்போது ப்ரியங்கா சோப்ரா பாடுவதை விஜய் சார் கவனிச்சிட்டுட்டார்...’’
தமிழில் முன்னணி ஹீரோக்களுக்கு இன்று இசையமைத்தாலும், ஒரு காலத்தில் சீரியல்களுக்கு சூப்பர் ஹிட் மியூசிக் டைரக்டராக இருந்தவர் டி.இமான். அவரது கிருஷ்ணதாசி சீரியல் பாடல், பலரையும் கொண்டாட வைத்தது. அதன் மூலமாகவே சினிமா வாய்ப்பை பெற்ற டி.இமார், அதன் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகே, தன்னை நிரூபிக்க முடிந்தது. முதன் முதலில் விஜய்யின் தமிழன் படத்திற்கு இசையமைத்த போது, நடிகர் விஜய் உடன் பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவையும் டூயட் பாட வைத்த பெருமை, இமானுக்கு உண்டு. எப்படி நடந்தது இந்த நிகழ்வு? இணையதளத்தில் டி.இமான் கூறிய சுவாரஸ்ய தகவல் இதோ...
‛‛எஸ்.ஏ.சி.,சாரை சந்தித்தேன். தமிழன் படத்தின் கதையை சொல்லி, இதற்கு மியூசிக் பண்ணிட்டு வாங்கன்னு சொன்னாங்க. டியூன்ஸ் முடித்து விட்டு எஸ்.ஏ.சி., சாரை சந்தித்தேன். அப்புறம் இயக்குனர் மஜித்தை சந்தித்தேன். அதன் பிறகு தான், விஜய் சாரிடம் காண்பித்தேன். எஸ்.ஏ.சி., சார் கேட்டதும், சிலவற்றை நோட் செய்து வைத்திருந்தார். விஜய் சாரும் சிலவற்றை நோட் பண்ணி வெச்சிருந்தார். அதற்கு முன்பு, கிருஷ்ணதாசி சீரியலில் ‛சிகரம் பார்த்தாய் சிறகுகள் எங்கே...’ என்கிற எனது பாடல், விஜய் சாருக்கு ரொம்ப பிடித்திருந்தது. அந்த பாசிட்டிவ் வைப் உடன் தான், அவரை சந்தித்தேன்.
ஒவ்வொரு பாடல் கேட்கும் போதும், நல்லா இருக்குன்னு கருத்து தெரிவித்தார். விஜய் சார் தான், கடைசியல் பாடல்களை தேர்வு செய்தார். விஜய் சார் நன்றாக பாடுவார் என்பது எல்லோருக்கும் தெரியும். நான் போகும் முன்பே அவர் நிறைய பாடல்கள் பாடியிருந்தார். ஆனால், ப்ரியங்கா சோப்ரா பற்றி எதுவும் தெரியாது. அவர் நல்ல நடிகை என்பது தெரியும். தமிழனில் ‛ஹாட் பார்ட்டினு’ ஒரு பாடல் வரும், அதில் ஹம்மிங் வரும். அப்போது ப்ரியங்கா சோப்ரா பாடுவதை விஜய் சார் கவனிச்சிட்டுட்டார். ‛ப்ரியங்கா சோப்ரா, நன்றாக பாடுவர் போல...’ என, விஜய் சார் கூறினார்.
அதன் பிறகு தான், விஜய்-ப்ரியங்கா சோப்ரா இருவரையும் பாட வைக்கலாம் என முடிவு செய்தோம்.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு, படத்தின் ஹீரோ-ஹீரோயில் பாடிய பாடலாக அது இருந்தது. ‛உள்ளத்தை கிள்ளாதே...’ என்கிற அந்த பாடலை, வைரமுத்து சார் தான் எழுதினார். விஜய்-ப்ரியங்கா குரலில் அந்த பாடல் நன்றாக வந்தது,’’ என்று கூறியுள்ளார்.
தமிழன் படத்திற்கு பின்பாக, ஜில்லா படத்தில் தான், விஜய் உடன் இணைந்தார் டி.இமான். அந்த படத்திலும் சூப்பர் ஹிட் பாடல்களை வழங்கியிருப்பார் டி.இமான். சிறந்த பின்னணி, சிறந்த பாடல்கள் வழங்குவதில் கைதேர்ந்தவரான டி.இமான், தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை சமீபமாக தக்கவைத்து வருகிறார்.