மேலும் அறிய
Advertisement
ஒரு ஹிட் தர 11 ஆண்டுகள்... தமிழில் ரீ எண்ட்ரி கொடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாத்!
நீண்ட இடைவெளிக்குப்பின் தமிழில் கிடைத்துள்ள இந்த வெற்றிக்கு டிஎஸ்பி ‛ஓ.. சொல்றாரா...’ இல்லை முந்தைய காலங்களைப் போல ‛ஓஓ.. சொல்றாரா...’ என காத்திருந்து பார்க்கலாம்!
எங்கு பார்த்தாலும் டிஎஸ்பி என்கிற சத்தம் உரக்க கேட்ட காலம் அது. தெலுங்கு படங்கள் எப்படி தமிழில் ரீமேக் ஆகி சக்கை போடு போட்டுக் கொண்டிருந்ததோ... அதே மாதிரி தான் தெலுங்கில் ஹிட் ஆன பாடல்களும் தமிழில் தாளம் போட வைத்தன. அப்படி துள்ளலும், துடிப்புமாய் ஆர்ப்பரித்த இசைக்கு சொந்தக்காரர் டிஎஸ்பி என அழைக்கப்பட்ட தேவி ஸ்ரீ பிரசாத்.
2000 ஆண்டின் இசை உலகை தன் வசமாக்கிய டிஎஸ்பி, அறிமுகமானதும் 2000ம் ஆண்டு தான். தெலுங்கு, தமிழ், இந்தி என மூன்று படங்களில் அவர் அறிமுகமான தேவி படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. முதல் படம் பலமொழிகளில் வந்தாலும் அவருக்கான இடமாக அவர் தக்க வைக்க நினைத்தது, தக்க வைத்தது தெலுங்கு திரையுலகம் தான்.
2000 ம் ஆண்டில் அறிமுகம் ஆனாலும், அதன் பின் அவர் தமிழுக்கு வர 3 ஆண்டுகள் ஆனது. 2003ல் அவர் தமிழ் படங்களுக்கு இசையமைத்தார். அவை எல்லாம் சுமார் ரகமாகவே இருந்தது. இனிது இனிது காதல் இனிது, ஐஸ் என பலர் அறிந்திராத படங்களுக்கான இசை அது. ஆனால் அதே ஆண்டில் தெலுங்கில் இசை அமைத்த வர்ஷம் மெகா ஹிட். அது தான் பின்னாளில் 2005ல் மழை என்ற பெயரில் ஜெயம் ரவி-ஸ்ரேயா நடித்த படமாக தமிழில் வெளியானது. இரண்டுக்கும் அவரே இசையமைப்பாளர்; பாடல்களும் அவைகளே!
2003 ல் தமிழில் பெரிய வெற்றி கிடைக்கவில்லை; ஆனாலும் கீ போர்டு இசைத்துக் கொண்டே இருந்தது. 2004லும் நிறைய குப்பை படங்கள். அதற்கு டிஎஸ்பி இசையமைப்பாளர். அப்போதும் பேசப்படவில்லை. அதே ஆண்டில் பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்த திருப்பாச்சி படத்திற்கு மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைத்தனர். அதில் கட்டு கட்டு கீரைக்கட்டு பாடலுக்கு இசையமைத்தவர் தேவி ஸ்ரீ பிரசாத். மற்ற பாடல்களுக்கு மணிஷர்மா மற்றும் தினா ஆகியோர் இசையமைத்திருந்தனர். அதிலும் எதையும் சொந்தம் கொண்டாட முடியாத நிலை.
ஆனால் 2004ன் இறுதி அவருக்கு உறுதியளித்திருக்கும். சிங்கம்புலி இயக்கத்தில் சூர்யா நடித்த மாயாவி வெளியான போது, அது தான் டிஎஸ்பி-க்கு தனி பெயர் பெற்றுத் தந்தது. 2005ல் சச்சின், ஆறு, 2006ல் சம்திங் சம்திங் என டிஎஸ்பி ஆக்கிரமிப்பு அதிகரித்தது. ஆனால் அது தொடரவில்லை. முழுநேரமாக தெலுங்கிலும், பகுதி நேரமாக தமிழிலும் அவர் கால் வைத்து, இங்கு தடம் பதிக்க தவறிவிட்டார். பெரும்பாலும் தமிழுக்கு வரும் போது, தெலுங்கி போட்ட டியூனோடு வந்து வேலையை முடித்துக் கொண்டார். அதனால் இங்கு புதுமையை அவர் தொடவில்லை.
2008ல் வெளியான சந்தோஷ் சுப்பிரமணியனும் தெலுங்கு வாடை தான். 2008 ன் இறுதியில் வந்த வில்லு, 2009ன் துவக்கத்தில் வந்த கந்தசாமி என ஆல்பம் ஹிட் அடித்தாலும், படங்களின் மோசமான தோல்வி, இசைக்கு பெயர் பெற்றுத் தரவில்லை. ஆனாலும், அவை டிஎஸ்பியின் பெஸ்ட் டிராக்ஸ்.
அதுக்கு அப்புறம் வழக்கம் போல ப்ரேக்... ஓர் ஆண்டுக்குப் பின் 2010ல் சிங்கம்...! டிஎஸ்பி.,யின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய படம். இந்தியாவின் பல்வேறு மொழிகளில் கவனம் பெற்ற படம். பாடல், பின்னணி என எல்லாவற்றிலும் பின்னியெடுத்த படம். டிஎஸ்பி-க்கு தமிழில் கிடைத்த ஒரு மோசமான அனுபவம்; அவர் ஒவ்வொரு முறை கவனிக்கப்படும் போதும், அதை அவர் தக்கவைப்பதில்லை. சிங்கம் வெற்றிக்கு பிறகும் அது தான் நடந்தது. மன்மதன் அம்பு, வேங்கை, சிங்கம் 2, புலி, சாமி 2 என எல்லாம் சுமார் ரகம். இதில் இடையில் வெற்றி பெற்ற ஒரே படம் வீரம். அதிலும் கொண்டாடும் பாடல்கள் இல்லை. பின்னணி பேசப்பட்டது; இசை கேட்கப்பட்டது, அவ்வளவு தான்.
இடைப்பட்ட காலத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாய் அவருக்கு படங்கள் வந்தாலும், அவையெல்லாம் பத்தோடு பதினொன்றாக தான் கடந்தன. 2000-2010 வரை தான் டிஎஸ்பி சாம்பிராஜ்யம் இருந்தது. இன்னும் சொல்ல வேண்டுமானால், 2010ல் வெளியான சிங்கம் தான் அவரின் அடையாளமாக இங்கு உலா வந்தது.
இப்போது 2021ன் இறுதியில் புஷ்பாவில் புஸ்வானமாக பூரித்திருக்கிறார் டிஎஸ்பி. ‛ஒ சொல்றீயா... ஓஓ சொல்றீயா...’ சர்ச்சையை கடந்து கொண்டாடப்படுகிறது. கொண்டாடப்பட்டதால் தான் அது சர்ச்சையானது என்பது தனிக்கதை. தமிழில் நாளுக்கு ஒரு இசையமைப்பாளர் அறிமுகமாகிறார்கள். அவர்களும் ஜெயிக்கிறார்கள். அவர்களின் பாடல்கள் ஜொலிக்கிறது. இந்த போட்டியில், பழைய பட்டாசாக நமத்துப் போயிருந்த டிஎஸ்பி, தற்போது சரவெடியாக சிதறியிருக்கிறார். அதுவும் ஒரே ஆல்பம்... அதன் பெயர் புஷ்பா!
தமிழ் மட்டுமல்லாமல் பிறமொழிகளிலும் அந்த பாடல் கொண்டாடப்படுகிறது. ரிபீட் ஆகிறது. சமந்தா, ஆண்ட்ரியா, விவேகா என்று தான் அந்த பாடலை பலரும் கடக்கின்றனர். ஆனால், 11 ஆண்டு வெறியும்... தன் இருப்பை காட்ட வேண்டிய குறியும் தான் டிஎஸ்பியை தனித்துவமான ஆல்பம் தர வைத்துள்ளது. இப்போது தேடுகிறார்கள்... புஷ்பா படத்தின் இசையமைப்பாளர் யார் என்று? உண்மையில் பலருக்கு அவரை தெரியவில்லை. தெரிந்தவர்களுக்கு அவரா என- நம்ப முடியவில்லை. இப்படி தான் சில சமயம் புகழ் பெற்றவர்கள் மீண்டும் புகழ் பெறுகிறார்கள்.
டிஎஸ்பிக்கு தொடக்கம் முதல் இருந்த பிரச்சனை, ‛அவரது ட்யூன்கள் ஒரே ரகமாக இருக்கிறது... காப்பி அடிக்கப்படுகிறது...’ என்கிற விமர்சனம் தான். ‛அவர் பாடலை தானே அவர் காப்பி அடிக்கிறார்...’ என ஆதரவு தருவோரும் உண்டு. ஆனால், இந்த விமர்சனம் எல்லாம் தமிழில் மட்டும் தான். தெலுங்கில் இன்றும் கொண்டாடப்படும் இசையமைப்பாளர் டிஎஸ்பி. நீண்ட இடைவெளிக்குப்பின் தமிழில் கிடைத்துள்ள இந்த வெற்றிக்கு டிஎஸ்பி ‛ஓ.. சொல்றாரா...’ இல்லை முந்தைய காலங்களைப் போல ‛ஓஓ.. சொல்றாரா...’ என காத்திருந்து பார்க்கலாம்!
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion