The Kerala Story: ’பிரிவினைவாதத்தை தூண்டும் ட்ரெய்லர்’ - தி கேரளா ஸ்டோரி படத்துக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்
தி கேரளா ஸ்டோரி படத்தின் ட்ரெய்லர் திட்டமிட்டு பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தி கேரளா ஸ்டோரி படத்தின் ட்ரெய்லர் திட்டமிட்டு பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தி கேரளா ஸ்டோரி
இந்தியில் சுதிப்தோ சென் இயக்கத்தில் விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “தி கேரளா ஸ்டோரி”. இந்த படத்தில் அதா ஷர்மா , பிரணவ் மிஷ்ரா , யோகிதா பிஹானி , சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்துள்ளனர் . இந்த படத்தின் கதை கேரளாவைச் சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு இஸ்லாமிய நாடான ஈராக் மற்றும் சிரியாவில் ISIS அமைப்பில் சேருவதைப் பின்தொடர்கிறது. இது உண்மைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. இதுதொடர்பான காட்சிகள் ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ளது.
இந்த படத்தின் போஸ்டர் கடந்த ஆண்டு போஸ்டர் வெளியான போது அதற்கு கேரளா அரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதனிடையே தி கேரளா ஸ்டோரி படம் வரும் மே 5 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது. ஆனால் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு
இந்நிலையில் முதலமைச்சர் பினராயி விஜயன் தி கேரளா ஸ்டோரி படத்தை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கேரளாவில் தேர்தல் அரசியலில் ஆதாயம் அடைய சங்பரிவார் அமைப்புகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. அந்த வகையில் அவர்களின் கொள்கைகளை பரப்புரை செய்ய எடுக்கப்பட்ட படம் இது என்பது ட்ரெய்லரை பார்க்கும்போது தெளிவாக தெரிகிறது.
வகுப்பு பிரிவினை வாதம் மற்றும் கேரளாவிற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பும் நோக்கத்துடன் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ளது. விசாரணை அமைப்புகள், நீதிமன்றம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூட நிராகரித்த "லவ் ஜிஹாத்" குற்றச்சாட்டுகளை வடிவமைத்தது திட்டமிட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். ஆனால் சமீபத்தில் லவ் ஜிகாத் என்ற ஒன்று கிடையாது என்று மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியான சூழலில் கேரளாவில் மதநல்லிணக்க சூழலை அழித்து வகுப்புவாத விஷ விதைகளை விதைக்க சங்பரிவார் முயற்சித்து வருவதாகவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.