சிறிய பட்ஜெட்டில் நல்ல படங்கள் எடுங்கள் : ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம் பேச்சு!
சிறிய பட்ஜெட் படங்கள் செய்தாலே போதும். பல கோடி ரூபாய் பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் வேண்டாம் என ட்ரீம் கர்ல் படத்தின் இசைவெளியீட்டில் ஒளிப்பதிவாளர் பிசி ஶ்ரீராம் பேசியுள்ளார்

'ட்ரீம் கேர்ள்'படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இயக்கிய 'மீரா' படத்தின் கதாசிரியரும் 'அழியாத கோலங்கள் 2' படத்தின் இயக்குநருமான எம் .ஆர் .பாரதி இயக்கத்தில் புதுமுகங்கள் ஜீவா, ஹரிஷா, பிரபு சாஸ்தா, இந்திரா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'ட்ரீம் கேர்ள்' . இப்படத்திற்கு சாலமன் போஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார் .இளமாறன் இசையமைத்துள்ளார். வசனம் ஹேமந்த் செல்வராஜ். கலை இயக்கம் கலை. படத்தொகுப்பு .கே.பி. அஹமத் .சாருலதா பிலிம்ஸ் தயாரித்துள்ளது.பாடல்களை சரிகம வெளியிட்டுள்ளது. இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்களைப் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் வெளியிட்டார் .விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர்.விழாவில் ஏராளமான இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
பிரபல ஒளிப்பதிவாளர் பி .சி. ஸ்ரீராம் பேசும் போது,
"இங்கே பாரதி பற்றி எல்லாரும் புகழ்ந்து பேசுவதைப் பார்த்தபோது ,ஒரே கருத்தை எல்லோரும் கூறிய போது எனக்கு சிலிர்ப்பாக இருந்தது. நான் வேறு விதமான விழாக்களில் கலந்து கொண்டுள்ளேன். சினிமா ஆடியோ விழாவில் கலந்து கொள்வது இதுவே முதல்முறை. பாரதி அழைத்தால் மறுப்பு சொல்ல முடியுமா?
அவர் தனது நட்பின் மூலம் உயர்ந்திருக்கிறார்.எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
எங்களுக்குள் நீண்ட நாள் நட்பு உண்டு.எங்களுக்குள் பல கதைகள் உண்டு. அவரது திருமணத்திலிருந்து பல கதைகள் உண்டு.
நான் சொன்ன ஒரு வரிக் கதையை அவர் திரைக்கதையாக்கிக் கொடுத்தார். சுவாரசியமாக மாற்றி இருந்தார். நன்றாக இருந்தது.அது வழக்கமான படமாக இருக்காது. அவர் இது மாதிரி அர்த்தமுள்ள சிறிய பட்ஜெட் படங்கள் செய்தாலே போதும். பல கோடி ரூபாய் பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் வேண்டாம். இந்தப் படம் நன்றாக வர வேண்டும் .பாரதிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்" என்றார்.





















