Chiththa: சித்தா பார்த்து தூக்கம் வரவில்லை.. இயக்குநர் தமிழ் சினிமாவுக்கு இன்னொரு பாலச்சந்தர்.. திருச்சி சிவா
“பல காட்சிகளில் பக்கத்தில் குழந்தைகள் இருந்தால், தூங்கி கொண்டிருந்தால் கூட பதைபதைப்போடு கைகள் நம்மையறியாமல் இழுத்து நெருக்கமாக அணைத்துக் கொள்ளும்”
சித்தா திரைப்படம் பார்த்து ரசித்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
பாராட்டுகளைப் பெற்ற சித்தா
அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த், நிமிஷா விஜயன், தர்ஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி பாராட்டுகளைப் பெற்று வரும் திரைப்படம் சித்தா. கடந்த செப்.28ஆம் தேதி வெளியான இப்படம் பெண் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளை மையப்படுத்திய கதையாக அமைந்து சமூகப் பிரச்னையை நேர்த்தியாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பேசியிருந்தது.
சந்திரமுகி 2, இறைவன் ஆகிய படங்களுடன் வெளியான சித்தா படம், இந்த இரண்டு படங்களைத் தாண்டி பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. மூன்று வாரங்களைக் கடந்தும் இப்படத்துக்கு தொடர்ந்து சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த வரிசையில் தற்போது மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா சித்தா படம் பார்த்து ரசித்து மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
திருச்சி சிவா பதிவு
"சித்தா படம் பார்த்துவிட்டு தாமதமாக உறங்கி விடியற்காலையில் படத்தின் நினைப்பு வந்து மீண்டும் தூக்கம் வராமல் இரண்டாவது ஆட்டம் "சித்தா" பார்த்துவிட்டு தாமதமாக உறங்கி விடியற்காலையில் படத்தின் நினைப்பு வந்து மீண்டும் தூக்கம் வராமல் எழுதியது இது!
மனம் கவர்ந்த படங்களைப் பார்க்க நேர்ந்த போதெல்லாம் அதோடு தொடர்புடையவர்களை பாராட்டி எழுதியிருக்கிறேன். இது சமுதாயத்தில் படர்ந்து கொண்டிருக்கும் ஒரு மாபாதகத்தை பார்ப்பவர்கள் மனம் பதறப் பதற உணர்த்தியிருக்கும் படம் என்பதால்.
தூக்கம் தொலைவதற்கு காரணமான இந்த சினிமாவை மீண்டும் பார்க்க துணிவும் இல்லை, அவசியமும் இல்லை. ஆனால் மற்றவர்கள் ஒரு முறையாவது இந்தப் படத்தைப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
சித்தார்த் என்ற ஒரேயொரு அறிமுகமான நடிகரைத் தவிர அனைவரும் புதுமுகங்கள். ஒன்று கூட சினிமா முகம் கிடையாது. வழக்கமான அதற்கான தோற்றமோ, பெரிய ஒப்பனையோ கூட இல்லாமல் ஆனால் நடிப்பினால் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறார்கள்.
நெஞ்சில் மின்சார அதிர்வு
சுத்திகரிப்பு பணியிலிருக்கும் பெண்ணோடு கதாநாயகனுக்கு காதல் மலர்ந்து அந்த திசையில் செல்வது போல தொடங்கும் படம், முற்றிலும் வேறு திசையில் பயணித்து அப்படியே தடம் மாறி எட்டும் பத்துமான வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள், அவர்களின் பெற்றோர்களின் மிகப் பிரமாதமான நடிப்பு, என உணர்ச்சியின் உச்சத்தில் கொண்டு போய் உட்கார வைக்கும், நெஞ்சில், வயிற்றில் மின்சார அதிர்வினை ஏற்படுத்தும் காட்சிகளோடு திரைக்கதை, கதையையும் கதை மாந்தர்களையும் தத்ரூபமாக நடிக்க வைத்துள்ள இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் மிகுந்த பாராட்டுக்குரியவர்.
இரண்டு காட்சிகளில் மட்டுமே வரும் ரொட்டி விற்பவர், கடைசியாக சுந்தரியை ஆட்டோவில் பயணியாக ஒரு சில நிமிடங்களே வந்து காப்பாற்றும் பெண்மணி உட்பட மனதில் நின்று விடுகிறார்கள். வில்லன் என்ற சொல்லுக்கும் மேல் ஏதாவது கொடுமையான சொல் இருந்தால், அதற்குப் பொருத்தமான பாத்திரத்தில் எந்தவிதமான் சிறப்பு இலட்சணங்களும் இல்லாத ஒரு சாதாரணமான நடிக(ன்)ர் தான் என் தூக்கம் அதிகாலையில் கெடக் காரணமாக இருந்த பாவி!
சித்தா என்று அழைக்கும் குரல்
பிற்பகுதியில் கதையின் முக்கியமான பாத்திரமாக மாறும் எட்டு வயது குழந்தையைப் பார்க்கும்போதெல்லாம் நம் வீட்டில், நமக்குத் தெரிந்தவர்கள் வீடுகளில் உள்ள பிள்ளைகளின் நினைப்பு. 'சித்தா" என்று அழைக்கும் அந்த உறவும் குரலும் பலருக்கும் அறிமுகமான ஒன்றாக நிச்சயம் இருக்கும். பல காட்சிகளில் பக்கத்தில் குழந்தைகள் இருந்தால், தூங்கி கொண்டிருந்தால் கூட பதைபதைப்போடு கைகள் நம்மையறியாமல் இழுத்து நெருக்கமாக அணைத்துக் கொள்ளும்.
சுந்தரி" கடத்தல்காரனின் பிடியில் சிக்கிக் கொண்டு, குழந்தைத் தனம் மாறாமல் லாலிபாப்பும் மீன் ரொட்டியும் தின்று கொண்டு அவன் கொடூரத்திற்கும் இரையாகி, "மூட்டையில் இருக்கும் ரெண்டு பாம்பு கொத்தி தின்னுடும்" என்று கத்தும்போது வயிறெல்லாம் ஒட்டிக் கொண்டு போகிறது. என்ன ஓர் அற்புதமான நடிப்பு. இந்த ஆண்டின் சிறந்த குழந்தை நட்சத்திரம் என பாராட்டப்பட வேண்டிய திறமை.
இன்னொரு பாலச்சந்தர்
குழந்தை " பொன்னி" பாதிப்புக்கு முன் குழந்தைத்தனமாகவும் பாதிப்புக்குப் பின் அதிர்ச்சியும் கோபமும் கலந்த வேறுவிதமான முகக் குறிப்புடனும் அதிகம் பேசாமலே நிறைய புரிய வைக்கிறது. குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் ஆபாசப் படங்கள் பெருகி, பெரும் பாதகங்களுக்கு காரணமாக இணையதளங்களில் வளைய வரும் வக்கிரங்களை கட்டுப்படுத்திட, தடுத்திட அரசாங்கத்திற்கு ஆலோசனைகள் வழங்கிட இந்திய நாட்டின் முன்னாள் குடியரசு துணைத்தலைவர் திரு வெங்கையா நாயுடு, முன்னாள் ஒன்றிய அமைச்சர் திரு ஜெயராம் ரமேஷ் தலைமையில் அமைத்த சிறப்புக் குழுவில் நானும் ஓர் உறுப்பினராக இருந்து அந்தக் குழு அரிய பரிந்துரைகளை அரசுக்கு வழங்கி அதில் சில நடைமுறைப் படுத்தப்பட்டுமிருக்கின்றன.
#chithha @Siddharth_Actor @DirSUarunkumar pic.twitter.com/zLRBGDzqgs
— Tiruchi Siva (@tiruchisiva) October 13, 2023
இயக்குநரை ஆரத்தழுவி தமிழ்த் திரையுலகிற்கு இன்னொரு பாலசந்தர் என நெற்றியில் முத்தமிட வேண்டும். கொஞ்சம் சிரமம்தான். ஆனால் யதார்த்தம் என்பதால் எச்சரிக்கை உணர்வு எல்லோருக்கும் தேவை என்பதால் பெற்றோர் அவசியம் பிள்ளைகளோடு சென்று பார்த்து வந்தால் படத்தை அங்கீகரித்துப் பாராட்டியதாக அமையும்" என்று தெரிவித்திருக்கிறார்.