Chandramukhi 2: ஜோதிகா மாதிரி கங்கனா நடிப்பாங்களா.. ராகவா லாரன்ஸ் என்ன சொன்னார்?
”ஜோதிகா மேடம்போல் கங்கனா நடிப்பார்களா என பலரும் என்னிடம் கேட்டார்கள். ஜோதிகா மேடத்தையும், கங்கனா மேடத்தையும் ஒப்பிட வேண்டாம்”
ஜோதிகாவைபோல் கங்கனா சந்திரமுகியாக நடிப்பாரா என்ற கேள்விக்கு ராகவா லாரன்ஸ் அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் சந்திரமுகி 2 வரும் 15ம் தேதி ரிலீசாக உள்ளது. இதை ஒட்டி படத்தின் புரோமோஷன் பணியாக சந்திரமுகி2 படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அதில், ராகவா லாரன்ஸ், பி.வாசு, கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்து படத்தின் அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டனர். அப்போது பேசிய ராகவா லாரன்ஸ், “ரஜினி சார் ரசிகனாக இருந்து பலமுறை சந்திரமுகி படத்தை பார்த்துள்ளேன். அதில் நடிக்க போகிறேன் என சொன்னதும், அதை விட அதிக முறை சந்திரமுகி படத்தை பார்த்தேன். ரஜினி சாரை பார்த்து ஆசிர்வாதம் வாங்கி விட்டுதான் இந்த படத்தில் நடிக்க தொடங்கினேன். நான் இரண்டாம் பாகத்தில் நடிக்கப்போகிறேன் என்றதும், சந்திரமுகி யாராக இருப்பார்கள் என வாசு சார் கிட்டே கேட்டேன். கங்கனா மேடம் என்று சொன்னதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
ஜோதிகா மேடம்போல் கங்கனா நடிப்பார்களா என பலரும் என்னிடம் கேட்டார்கள். ஜோதிகா மேடத்தையும், கங்கனா மேடத்தையும் ஒப்பிட வேண்டாம். கங்கனா ரனாவத் அவருக்கான ரோலில் நன்றாக நடித்துள்ளார். முதல் பாகத்தில் ஜோதிகா சந்திரமுகியாக தன்னை நினைத்து நடித்திருந்தார். இந்த பாகத்தில் ஒரிஜினல் சந்திரமுகியாகவே கங்கனா நடித்துள்ளார். படத்தில் நடிப்பதற்காக வேட்டையன் டிரெஸ் போட்டதும் எனக்கு ஒரு பயம் வந்தது. அதனால், ரஜினி சாருக்கு போன் பண்ணி பேசினேன். அப்போது, தைரியமாக நடியுங்கள், படம் நன்றாக வரும் என்றார். அவர் அளித்த தைரியமும், பாபாவின் அரும் நல்ல படத்தை கொடுத்துள்ளது. எனது கோவிலில் உள்ள சிலையில் ரஜினி சார் முகம்தான் இருக்கு.
காஞ்சனாவுக்கு பிறகு இந்த கதையை நான் நடிக்க பல காரணங்கள் உள்ளன. காஞ்சனா படம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த படம். காமெடி, பயம் என எல்லாமே காஞ்சனா படத்தில் இருந்தது. அது போன்ற ஒரு படத்தில் மீண்டும் நடிக்க வேண்டும் என நினைத்தேன். அப்பொழுது தான் சந்திரமுகி 2 பற்றி வாசு சார் என்னிடம் பேசினார், உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். ஷூட்டிங்கின்போது, வடிவேலு சார் கங்கனாவிடம் பேசிட்டு இருந்தாரு. அப்போது, அங்கு சென்ற நான், வடிவேலுவிடம் கங்கனா மேடம் என்ன பேசினார்கள்? என கேட்டேன். அவர்கள் பேசியது புரிந்தால் நான் ஏன் சிரிக்க போகிறேன் என்று வடிவேலு சொன்னார். ஏனென்றால் கங்கனா மேடம் இந்தியில் பேசி உள்ளார்” என்றார்.
இதற்கிடையே, சந்திரமுகி 2 படத்தில் தனது பெயரை ராகவா லாரன்ஸிற்கு பதிலாக ராகவா என இடம்பெற்றிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராகவா லாரன்ஸ், ”நீண்ட நாட்களாக எனது தாய், என் பெயரை ராகவா என்று மட்டும் குறிப்பிடும்படி கூறி வந்தார். அவரின் விருப்பதால் ராகவா லாரன்ஸிற்கு பதில், ராகவா என்று மட்டும் எனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது” என விளக்கம் அளித்தார்.
மேலும் படிக்க: Silk Smitha Re-Entry: மீண்டும் திரையுலகத்தில் சில்க் ஸ்மிதா.. மார்க் ஆண்டனியில் புது அக்மார்க்காக ஜொலிக்கும் யார் இவர்?