Silk Smitha Re-Entry: மீண்டும் திரையுலகத்தில் சில்க் ஸ்மிதா.. மார்க் ஆண்டனியில் புது அக்மார்க்காக ஜொலிக்கும் யார் இவர்?
ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்கும் இந்த திரைப்படம், முழுக்க முழுக்க டைம் டிராவலை மையமாக கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
நடிகர் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் மார்க் ஆண்டனியின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ட்ரெய்லரில் ஆக்ஷன், காமெசி, டைம் டிராவல், கேங்ஸ்டர்கள் பட்டையை கிளப்பி வருகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்கும் இந்த திரைப்படம், முழுக்க முழுக்க டைம் டிராவலை மையமாக கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இரண்டு நிமிடம் ஐம்பது நொடிகள் கொண்ட ட்ரெய்லரில், “ மார்க் ஆண்டனியின் உலகத்திற்கு வரவேற்கிறோம், அண்ணா” என்ற வரியுடன் தொடங்குகிறது.
அற்புதமான காட்சிகள், பிரமிக்க வைக்கும் அதிரடி காட்சிகள் மற்றும் வண்ணமயமான பிரேம்கள். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் அடிதடி இசையென ட்ரெய்லர் மீண்டும் ஒருமுறை பார்க்க வைக்க தோன்றுகிறது.
அறிவியல் புனைகதை ஆக்ஷன் காமெடி படமாக எடுக்கப்பட்ட மார்க் ஆண்டனி, அப்பா மற்றும் மகன் என்ற இரட்டை வேடத்தில் விஷால் நடிக்கிறார். இப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. மார்க் ஆண்டனி படமானது நடிகர் விஷாலுக்கும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் முக்கியமான திரைப்படம்.
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் மற்றும் பகீரா போன்ற தொடர்ச்சியான தோல்விக்கு பிறகு இயக்குநர் ஆதிக் இந்த படத்தில் களமிறங்குகிறார். அதேபோல், துப்பறிவாளனுக்கு பிறகு எந்தவொரு ஹிட்டும் கொடுக்காத விஷாலுக்கு மார்க் ஆண்டனி வெற்றிபடமாக அமைய வேண்டும். இந்தநிலையில், இந்த ட்ரெய்லரில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் கேமியோ ரோல் செய்த பெண்தான், தற்போது உள்ளூர் ட்ரெண்ட்.. அவர் யார் என்று இதில் பார்க்கலாம்..!
சில்க் ஸ்மிதாவின் மறுபிறவி:
1980களில் தென்னிந்திய திரையுலகையே தன்வசம் வைத்திருந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. ஹூரோக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்த அந்த காலத்தில் பல தயாரிப்பாளர்களை தனது வீட்டு வாசலில் லைனில் நிற்க வைத்தவர்தான் இந்த சில்க்.
ஆந்திராவில் எள்ளூரு எனும் இடத்தில் பிறந்த இவர், நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இவரது உண்மையான பெயர், விஜயலக்ஷ்மி வட்லபட்டி. இப்படி கொடிகட்டி பறந்த இவர், கடந்த 1996ம் ஆண்டு மறைந்தார். இப்படி ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களுமே சில்க் இருக்கும் திசையைத் தேடி ஓடிய காலம் இன்றும் பலரின் கண்முன் வந்து செல்கிறது.
இப்படி இருக்க மார்க் ஆண்டனியில் சில்க் ஸ்மிதாவை போலவே இருக்கும் விஷ்ணுபிரியா சில்க் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதைபார்த்த சில்க்கின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் யார் இவர் என சல்லடை போட்டு தேடி வருகின்றனர். சில்க் ஸ்மிதாவின் உருவ ஒற்றுமை மட்டுமே அல்ல, பிறந்த ஊர், மாசம் எல்லாமே ஒத்து போகிறது. இதுகுறித்து விஷ்ணுபிரியா தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ என் சொந்த ஊர் திருப்பதி. நான் தற்போது எம்பிஏ படித்து வருகிறேன். ஒருநாள் எதார்த்தமாக ஒரு வீடியோவை வெளியிட்டேன். அதை பார்த்த சிலர் என்னை சில்க் ஸ்மிதாவை போல இருப்பதாக கருத்து தெரிவித்தனர்.
சில்க் ஸ்மிதாவிற்கு எனக்கும் சில ஒற்றுமைகள் உள்ளது. அவர் இறந்தது 1996. நான் பிறந்தது 1997. அவர் பிறந்த ஊரும் திருப்பதி, நான் பிறந்த ஊரும் திருப்பதி. அவரின் பிறந்தநாள் டிசம்பர் 3, என்னுடைய பிறந்தநாள் டிசம்பர் 13” என குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், பலமுறை தன் கனவில் சில்க் ஸ்மிதா வந்துள்ளதாக கூறினார்.