Ravindar : பண மோசடி வழக்கில் சிக்கிய பிரபலம்.. அமெரிக்க வாழ் இந்தியரை ஏமாற்றிய ரவீந்தர்? அதிர்ச்சியில் திரையுலகம்
அமெரிக்கா வாழ் இந்தியரிடம் இருந்து 15 லட்ச ரூபாய் பணம் பெற்று திருப்பி தராமல் அலைக்கழித்ததாக தயாரிப்பாளர் ரவீந்தர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
![Ravindar : பண மோசடி வழக்கில் சிக்கிய பிரபலம்.. அமெரிக்க வாழ் இந்தியரை ஏமாற்றிய ரவீந்தர்? அதிர்ச்சியில் திரையுலகம் Case filed against producer Ravindar for allegations of fraud complaint given by Indian residing in United states Ravindar : பண மோசடி வழக்கில் சிக்கிய பிரபலம்.. அமெரிக்க வாழ் இந்தியரை ஏமாற்றிய ரவீந்தர்? அதிர்ச்சியில் திரையுலகம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/11/1544b8de60e296f4b7ba951cb31295761689060735468224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவின் பிரபலமான தயாரிப்பாளரும், சின்னத்திரை நடிகை மஹாலக்ஷ்மியின் கணவருமான ரவீந்தர் சந்திரசேகரன் ஃபேட் மேன் என பரவலாக அறியப்படுகிறார். அவர் மீது பண மோசடி வழக்கு ஒன்றை காவல் துறையினர் பதிவு செய்து நேற்று விசாரணை நடத்தியுள்ளனர். இந்த தகவல் திரையுலகத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லிப்ரா புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் பல படங்களை தயாரித்துள்ள ரவீந்தர் தமிழ் சினிமாவின் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு பிரபலமான சின்னத்திரை நடிகையான மஹாலக்ஷ்மியை எளிமையான முறையில் ரகசிய திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்துக்கு பிறகு பல விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுந்த போதிலும் அதை எதையும் பொருட்படுத்தாமல் கணவனும் மனைவியும் சோசியல் மீடியாவில் போஸ்ட் போடுவதிலும் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பதிலும் மும்மரமாக ஈடுபட்டு வந்தனர்.
கொஞ்ச காலமாக ட்ரெண்டிங்கில் இருந்து வந்த ரவீந்தர் தற்போது பண மோசடி வழக்கு காரணமாக மீண்டும் ட்ரெண்டிங்காகி வருகிறார். அமெரிக்க வாழ் இந்தியரான விஜய் என்பவரிடம் ரவீந்தர் ரூபாய் 20 லட்சம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் ஒருவருக்கு அட்வான்ஸ் கொடுக்க வேண்டுமென கூறி கடந்த ஆண்டு மே மாதம், விஜய்யிடம் 20 லட்சம் கேட்டுள்ளார் என கூறப்படுகிறது. விஜய் தன்னிடம் 15 லட்சம் தான் உள்ளது அதை நான் இரண்டு தவணைகளாக தருகிறேன் என கூறி முதலில் 10 லட்சத்தையும் பிறகு இரண்டாவதாக 5 லட்சத்தையும் ரவீந்தரின் பேங்க் அக்கவுண்டுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. வாங்கிய பணத்தை ஒரே வாரத்தில் ஒரு லட்சம் கூடுதலாக சேர்த்து 16 லட்சமாக திருப்பி கொடுத்து விடுவதாக வாக்களித்துள்ளார்.
ஒரே வாரத்தில் திருப்பித் தருகிறேன் என சொன்ன ரவீந்தர், வங்கி விடுமுறை, நெட்வொர்க் பிரச்சனை அது இது என பல காரணங்களை சொல்லி தட்டிக் கழித்து வந்துள்ளார். ஒரு சில நாட்களுக்கு பிறகு விஜய் போன் நம்பரை பிளாக் செய்துள்ளார் ரவீந்தர். விஜய் மனைவி ரவீந்தரிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்க அவரை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார் ரவீந்தர். இதனால் பிரச்சனை முற்றிப்போய் விஜய் ஆன்லைன் மூலமாக காவல் நிலையத்தில், ரவீந்தர் மீது பண மோசடி புகார் அளித்துள்ளார். ஆதாரமாக ரவீந்தர் தகாத வார்த்தைகளால் பேசிய ஆடியோவை சமர்ப்பித்துள்ளார்.
விஜய் புகாரின் பேரில் ரவீந்தர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்து அவரை மத்திய குற்றவியல் பிரிவில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். விஜய் வெளிநாட்டு பணம் 15 லட்சத்தை இந்தியாவுக்கு கொண்டு வர முடியாததால் தன்னிடம் கொடுத்ததாகவும் அதை அவரின் உறவினர்களிடம் கொடுத்து விடுவதாகவும் ரவீந்தர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மறு விசாரணையின் போது நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி ரவீந்தரை அனுப்பி வைத்துள்ளனர் போலீசார்.
இந்த பண மோசடி வழக்கு திரையுலகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)