Bombay Jayashri Health: பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை இப்போ எப்படி இருக்கு..? அவரே தந்த அப்டேட்..!
மயங்கிய நிலையிலும், தலையில் பலத்த காயத்துடனும் பாம்பே ஜெயஸ்ரீ ஓட்டல் அறையில் மீட்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.
தன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பின்னணிப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ பதிவிட்டுள்ளார். இதனால், ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கோமாவில் பாம்பே ஜெயஸ்ரீ:
பிரபல பின்னணிப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்து நாட்டுக்கு இசைக்கச்சேரி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த நிலையில், அங்கு மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். தொடர்ந்து, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக லண்டன், லிவர்பூல் நகரில் உள்ள மருத்துவமனையில் பாம்பே ஜெயஸ்ரீ கோமா நிலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
லண்டனில் லிவர் பூல் நகரில் உள்ள ஓட்டல் அறை ஒன்றில் தங்கியிருந்த பாம்பே ஜெயஸ்ரீ, மார்ச்.23ஆம் தேதி இரவு தனக்கு கடும் கழுத்து வலி இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மார்ச்.24ஆம் தேதி காலை உணவு உட்கொள்ள அவர் தன் அறையை விட்டு வெளியே வராத நிலையில், அவரை சோதித்தபோது மயங்கிய நிலையிலும், தலையில் பலத்த காயத்துடனும் பாம்பே ஜெயஸ்ரீ கிடந்துள்ளார். தொடர்ந்து அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் கோமா நிலையில் இருந்த பாம்பே ஜெயஸ்ரீக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும், சென்னைக்கு விமானம் மூலம் அவர் விரைவில் அழைத்து வரப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகின.
நல்லா இருக்கேன்:
தொடர்ந்து பாம்பே ஜெயஸ்ரீ சென்னைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அவர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில், முன்னதாக தன் உடல்நிலை பற்றி பாம்பே ஜெயஸ்ரீ தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “உங்கள் பிரார்த்தனை, வாழ்த்துகளால் நான் நன்றாக உடல்நலம் தேறி வருகிறேன். தொடர்ந்து அவற்றைக் கொடுத்துக் கொண்டே இருங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவரான பாம்பே ஜெயஸ்ரீ தன் குடும்பத்திலிருந்து வந்துள்ள நான்காம் தலைமுறை பாடகராவார். கொல்கத்தாவில் பிறந்த இவர் தன் சிறு வயதிலேயே லால்குடி ஜெயராமன், டி.ஆர்.பாலமணி ஆகியோரிடம் கர்நாடக இசையைக் கற்றுத்தேர்ந்தார். பாடல் தாண்டி வீணை இசையையும் முறைப்படி கற்றுத் தேர்ந்த பாம்பே ஜெயஸ்ரீ, மும்பையில் வணிகவியல் பட்டப்படிப்பை முடித்தவர்.
1982ஆம் ஆண்டு தன் முதல் மேடைக் கச்சேரியைத் தொடங்கிய பாம்பே ஜெயஸ்ரீ, அன்று தொடங்கி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்தியுள்ளார்.
’பாம்பே’ ஜெயஸ்ரீ
தமிழ்நாட்டில் பாடகர்கள் தங்கள் ஊர்ப் பெயர்களை முதற்பெயராகக் கொண்டு வலம் வரும் நிலையில் (எ.கா - குன்னக்குடி வைத்தியநாதன்), மும்பையில் படித்து வளர்ந்தவரான பாம்பே ஜெயஸ்ரீ தன் ஊர் பெயரை முதற்பெயராகக் கொண்டு அழைக்கப்பட்டு வந்தார்.
தன் இசைப் பயணத்துக்காக, 2021ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை வென்ற பாம்பே ஜெயஸ்ரீக்கு, சென்ற வாரம் சென்னை மியூசிக் அகாடமி சார்பில் சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டது.
வசீகரா மூலம் வசீகரித்தவர்!
மற்றொருபுறம் 2001ஆம் ஆண்டு வெளியான ’மின்னலே’ படத்தில் இடம்பெற்ற ’வசீகரா’ பாடலின் மூலம் தமிழ்நாடு, இந்தியா தாண்டி பலதரப்பட்ட ரசிகர்களையும் பாம்பே ஜெயஸ்ரீயின் குரல் சென்றடைந்தது.
குறிப்பாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தொடர்ந்து ஹிட் பாடல்களைக் கொடுத்து வந்துள்ள பாம்பே ஜெயஸ்ரீ, கஜினி படத்தில் இடம்பெற்ற ’சுட்டும் விழிச்சுடரே’, மஜ்னு படத்தில் இடம்பெற்ற 'முதற்கனவே’ , பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ’உனக்குள் நானே’, தாம் தூம் படத்தில் ’யாரோ மனதிலே’, நண்பேன்டா படத்தில் இடம்பெற்ற ’ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா’ , காக்க காக்க படத்தில் ’ஒன்றா ரெண்டா ஆசைகள்’ எனத் தொடர்ந்து திரை இசைப் பாடல்கள் வழியாக ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
2013ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுகளைத் குவித்த லைஃப் ஆஃப் பை படத்தில் ‘Pi's Lullaby’ எனும் தாலாட்டுப் பாடலை பாம்பே ஜெயஸ்ரீ பாடி உலகம் முழுவதும் கவனமீர்த்தது குறிப்பிடத்தக்கது.