Sushant Singh Rajput: நடிகர் சுஷாந்த் சிங் 3ஆம் ஆண்டு நினைவு நாள்... 'கருப்பு தினம்' என ரசிகர்கள் உருக்கம்!
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு தினமான இன்று அவரின் த்ரோபேக் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து பாலிவுட் ரசிகர்கள் நினைவு கூர்ந்து வருகிறார்கள்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது 34ஆவது வயதில் தற்கொலை செய்து கொண்டார். இன்று அவரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள். ஜூன் 14, 2020ஆம் ஆண்டு மும்பையின் புறநகர் பாந்த்ராவில் உள்ள தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சுஷாந்த் காணப்பட்டார்.
இந்நிலையில், சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளான இன்று சோசியல் மீடியா எங்கும் சுஷாந்த் சிங் ரசிகர்கள் அவரின் த்ரோபேக் வீடியோக்களையும், புகைப்படங்களை பகிர்ந்து கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
உணர்ச்சிவசப்படும் ரசிகர்கள் :
சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில் அவரின் ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இந்த நாளை ஒரு கருப்பு தினமாகவே அனுசரித்து வருகிறார்கள். சுஷாந்த் நினைவு நாளான இன்று அவரின் வழக்கு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவருக்கு நீதி வழங்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கையை முன்வைத்து வருகிறார்கள்.
யார் இந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்?
1986ஆம் ஆண்டு பீகார் மாநிலம், பாட்னாவில் பிறந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் பொறியியல் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு நடிக்க வந்து விட்டார். நடனக் கலைஞராக சினிமாத்துறையில் அடியெடுத்து வைத்த இவருக்கு 'கிஸ் தேஷ் மே ஹை மேரா தில்' என்று தொலைக்காட்சித் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து 'பவித்ரா ரிஷ்தா' என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து சுஷாந்த் பெரும் பிரபலமானார்.
வெள்ளித்திரை பயணம் :
2013ஆம் ஆண்டு ‘கை போ சே’ திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘ஷுத் தேசி ரொமான்ஸ்’, ‘டிடெக்டிவ் பியோம்கேஷ் பக்’ உள்ளிட்ட படங்கள் இவர் நடிப்பில் வெளியாகின. தொடர்ந்து ஆமிர் கானின் ‘பிகே’ மற்றும் ‘எம்.எஸ். தோனி : தி அன்டோல்டு ஸ்டோரி’ படங்களில் நடித்ததன் மூலம் வெற்றியின் உச்சத்தைத் தொட்டார் சுஷாந்த் சிங்.
திரை வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமாக இருந்த சுஷாந்த் சிங்கின் தனிப்பட்ட வாழ்க்கை ஏனோ திருப்திகரமாக அமையவில்லை. அவரின் தற்கொலைக்கான பின்னணி இன்றும் குழப்பமாகவே நீடித்து வருவதால் 'ஜஸ்ட்டிஸ் ஃபார் சுஷாந்த்' என்ற ஹேஷ் டேக்குடன் கவலை தெரிவித்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள்!