Kanthan Malai Movie: ஹீரோவாக கலக்கினாரா ஹெச்.ராஜா?.. கந்தன் மலை விமர்சனம் இதோ!
Kanthan Malai Movie Review: ஒரு படம் முழுக்க ட்ரோல் செய்வதற்கான கன்டென்டை கந்தன் மலை படத்தில் இயக்குநர் வீரகுமார் கொடுத்திருக்கிறார். இதனை படம் என குறிப்பிடாமல் இருந்திருக்கலாம்.

வீரகுமார் இயக்கத்தில் ஹெச்.ராஜா முதன்மை கேரக்டரில் நடித்துள்ள “கந்தன் மலை” படம் தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தால் யூட்யூப் சேனலில் வெளியாகியுள்ளது. சுமார் 1 மணி நேரம் ஒரு நிமிடம் ஓடக்கூடிய இந்த படத்திற்கு இடைவேளையும் உண்டு. இப்படிப்பட்ட கந்தன் மலை படம் பற்றிய விமர்சனத்தைக் காணலாம்.
சர்ச்சையை ஏற்படுத்திய ட்ரெய்லர்
கந்தன் மலை படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்த திருப்பரங்குன்றம் மலை தொடர்பான காட்சிகளும், வசனமும் அதில் இடம் பெற்றிருந்தது. தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் மத நல்லிணக்கம், சட்டம் ஒழுங்கு ஆகியவை பாதிக்கப்பட்டு விடக்கூடாது என மிக கவனமாக செயல்பட்டு வருகிறது. அதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்தும் வருகிறது. இப்படியான நிலையில் அப்படியான திருப்பரங்குன்றம் மலையை ஒரு கிளைக்கதையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
கந்தன்மலை திரைப்படம் நாளை 19.06.2025 தாமரை யூடியூப் சேனலில் வெளியீடு..!!https://t.co/7yECwvZHDz@ThamaraiTVTamil pic.twitter.com/w3dNA115uP
— H Raja (@HRajaBJP) December 18, 2025
குறிப்பாக திமுகவை விமர்சிக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இப்படத்தை எடுத்திருக்கிறார்கள். இதில் நடித்தவர்களில் சிலர் பாஜக கூட்டணியிலும், இந்து முன்னணி போன்ற அமைப்பிலும் இருப்பவர்கள். திருப்பரங்குன்றம் விவகாரம், நாடக்காதல் என அத்தனையையும் புகுத்தி மக்களிடையே ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என படக்குழு நினைத்திருக்கலாம். ஆனால் அது எதுவுமே நடக்கவில்லை என்பதே உண்மை.
தர்ம போராளி ஹெச்.ராஜா
கந்தன் மலை கதை என்னவென்று பார்த்தால் பெரிதாக ஒன்றுமில்லை. இந்து மதத்தை பாதுகாக்கும் போராளியாக ஹெச்.ராஜாவும், அதனை எதிர்க்கும் ஒரு கூட்டத்திற்கும் நடக்கும் மோதல் தான் கதை. ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை எதற்காக இந்த மோதல் என சொல்லப்படவில்லை. ஒரு படம் என்று இருந்தால் அதற்கு தீர்வு என்று ஒன்று காட்டப்படும். அப்படி எதுவும் இல்லை. இந்து மதத்திற்கு விரோதம் செய்தால் அழிந்து போவார்கள் என்ற ரீதியில் காட்டப்படும் கிளைமேக்ஸ் பல்வேறு சமூக மக்கள் ஒற்றுமையுடன் வாழும் சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. ஹெச்.ராஜாவே அரிவாளை தூக்கியிருப்பது ஆச்சரியம் தான்!
நடுநடுவில் காட்டப்படும் சாதிய ரீதியிலான மோதல், நாடக காதல், ஆணவக்கொலை, காவல்துறையினரின் அதிகாரம் போன்றவை எதுவும் இந்த கந்தன் மலை உண்மையில் என்ன தான் சொல்ல வருகிறது என்ற குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. எனினும் தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை ஹெச்.ராஜா சிறப்பாக செய்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறும் கருத்துகளை எல்லாம் வசனமாக வைத்திருப்பது கவனிக்கத்தக்க ஒன்றாக உள்ளது. முருகனைப் பற்றிய பாட்டு தொடங்கி கிளைமேக்ஸில் உணர்வுப்பூர்வமான பாடல் வரை ஒரு படத்துக்கான அனைத்தும் உள்ளது.
இந்த படத்தில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி, வேலூர் இப்ராகிம், பெரிஸ் மகேந்திரவேல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கொஞ்சம் பிசகினாலே இந்த நவீன யுகத்தில் ஒரு படத்தை ட்ரோல் மெட்டீரியலாக்கி விடுவார்கள். ஆனால் ஒரு படம் முழுக்க அதற்கான கன்டென்டை இயக்குநர் வீரகுமார் கொடுத்திருக்கிறார். இதனை திரைப்படம் என குறிப்பிடாமல் விழிப்புணர்வு படம் என குறிப்பிட்டிருக்கலாம்.





















