Bigg Boss 9 : டிஆர்பி ரேட்டிங்கில் அடிவாங்கிய பிக்பாஸ் தமிழ் 9...இதான் முக்கிய காரணம் !
Biggboss Tamil 9 TRP : விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 டிஆர்பி ரேட்டிங் குறித்த தகவல்களைப் பார்க்கலாம்

பிக்பாஸ் தமிழின் 9 ஆவது சீசன் 16 நாட்களை கடந்துள்ளது. கடந்த சீசன் முதல் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். முந்தைய சீசன்களைக் காட்டிலும் இந்த சீசன் பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக இந்த சீசனில் போட்டியாளர்கள் குறித்து அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் கொச்சையாக பேசுவது குறித்து பார்வையாளர்களிடையே விமர்சனங்கள் இருந்து வருகின்றன. இதனால் முந்தைய சீசன்களைக் காட்டிலும் இந்த சீசனின் டிஆர்பி ரேட்டிங்கிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
கொச்சையாக பேசும் போட்டியாளர்கள்
இளம் பார்வையாளர்களை கவர்வதற்காக இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இல் சமூக வலைதள பிரபலங்கள் அதிகம் பேர் நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அரோரா சிங்க்ளேர் , வாட்டர்மெலன் ஸ்டார் , அகோரி கலையரசன் , விஜே பார்வதி , துஷார் என பெரும்பாலான போட்டியாளர்கள் சமூக வலைதளத்தின் வழி பிரபலமானவர்கள். இந்த போட்டியாளர்கள் 2k கிட்ஸ்களிடம் மத்தியில் பிரபலமாக பேசப்படுவார்கள் என நிகழ்ச்சியின் தொடக்கத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதில் பல போட்டியாளர்கள் மேல் பார்வையாளர்களுக்கு ஒவ்வாமையே ஏற்பட்டது. மேலும் சர்ச்சையை ஏற்படுத்துவது போலவே அனைத்து போட்டியாளர்களின் நடவடிக்கை இருந்து வருவது நிகழ்ச்சி மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. ஒருத்தருத்தருக்கு ஒரு ஆபாசமாக திட்டிக் கொள்வது , அந்தரங்க உரையாடல்களை பொதுவில் பேசுவது , கிறுக்குத்தனமான செயல்களை செய்வது என இந்த பிக்பாஸ் சீசன் ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சி போல் நடந்து வருகிறது. முந்தைய சீசன்களில் போட்டியாளர்கள் தகாத வார்த்தைகளில் பேசினால் அவர்களுக்கு பெனால்டி கார்ட் வழங்கப்பட்டது. ஆனால் இந்த சீசனில் அப்படி எதுவும் நடக்காதது நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜய் சேதுபதி மீது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
டி.ஆர்.பி ரேட்டிங்கில் சரிவு
இதன் விளைவாக பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இன் டிஆர்பி ரேட்டிங்கில் கனிசமான அளவு சரிவு ஏற்பட்டுள்ளதை நாம் பார்க்கலாம். பிக்பாஸ் தமிழ் 9 ஆவது சீசன் துவக்க நிகழ்ச்சி நகர்ப்புற மக்களிடம் 8.7 TVR , நகர மற்றும் கிராமத்தில் 5.61 TVR பெற்றது. தொலைக்காட்சியில் மட்டும் 3.4 கோடி மக்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்துள்ளனர். தொலைக்காட்சி மற்றும் ஜியோஹாட்ஸ்டாரில் சேர்த்து 420 கோடி நிமிடங்கள் இந்த நிகழ்ச்சி பார்வையிடப்பட்டப்பட்டுள்ளது. துவக்க நாளில் பெரியளவில் வரவேற்பைப் பெற்ற பிக்பாஸ் தமிழ் வார நாட்களில் டிஆர்பி யில் சரிவை கண்டது. மேலும் அடுத்தடுத்த வாரங்களில் போட்டியாளர்களின் நடவடிக்கைகள் இந்த நிகழ்ச்சியை குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் பார்க்க முடியாமல் போனதால் டி.ஆர்.பி யில் பெரியளவில் சரிவை சந்தித்துள்ளது.
வார நாட்களில் பிக்பாஸ் தமிழ் 4.4 TVR பெற்றுள்ளது. மற்ற மொழி பிக்பாஸ் நிகழ்ச்சிகளுடன் ஒப்பிடுகையில் பிக்பாஸ் இந்தி இறுதியிலும் அதற்கடுத்தபடியாக பிக்பாஸ் தமிழ் இடம்பெற்றுள்ளது.






















