Bigg Boss Ultimate | ஹாட் ஸ்டார் கொடுத்த அழுத்தம்! விலகிய கமல்! BB அல்டிமேட் குழப்பத்துக்கு இதுதான் காரணமா?
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கு கமல் கூறிய காரணம் முழுக்க முழுக்க உண்மைதான் என்றாலும் இதற்கு பின்னால் ஹாட் ஸ்டார்தான் இருப்பதாக கிசுகிசுக்கிறது கோலிவுட்.
விலகிய கமல்..
பிக்பாஸ் தமிழ் 5 நிகழ்ச்சியை அடுத்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களையும், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இடையே, அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தபோது மட்டும் ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். இந்நிலையில், அடுத்தடுத்து படங்களில் நடிக்க இருப்பதால், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகவுள்ளார்.
இது குறித்தான அறிக்கையை கமலே வெளியிட்டார். “பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு என நான் ஒதுக்கியிருந்த தேதிகளும், விக்ரம் படப்பிடிப்பு தேதிகளிலும் மாற்றங்கள் செய்யவேண்டியதாகிவிட்டது. இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கி வரும் சூழலில் என்னோடு பணியாற்றும் பிற முக்கியமான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுடைய தேதிகளையும் மாற்றியமைக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டதால், பிக்பாஸ் அல்டிமேட் மற்றும் விக்ரம் இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகிவிட்டது” என்று குறிப்பிட்டார்.
என்னதான் காரணம்?
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கு கமல் கூறிய காரணம் முழுக்க முழுக்க உண்மைதான் என்றாலும் இதற்கு பின்னால் ஹாட் ஸ்டார்தான் இருப்பதாக கிசுகிசுக்கிறது கோலிவுட். பிக்பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டாரின் தயாரிப்பு என்பது ஊருக்கே தெரிந்த விஷயம். அதேபோல் கமல் தயாரிக்கும் விக்ரம் படத்தையும் ஹாஸ் ஸ்டார்தான் அதிக விலைக்கு கொடுத்து வாங்க உள்ளதாம். அதற்கான ஒப்பந்தமும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால்தான் படத்தை தாமதம் செய்யாமல் உடனடியாக முடித்துக் கொடுக்கும்படி கமலுக்கு அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது. இதனால்தான் உடனடியாக கமல் படம் பக்கம் கவனத்தை திருப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
View this post on Instagram
அடுத்து யார்?
இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட்டை அடுத்து யார் தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. சிம்பு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என தகவல்கள் பரவி சமூக வலைதளத்தை ஆக்கிரமித்தது. கமலுக்கு பதில் அவர்தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்றும், இன்று ப்ரொமோ வெளியாகும் எனவும் தகவல் கிடைத்துள்ளது. எனினும், இது குறித்து பிக் பாஸ் தயாரிப்பு நிறுவனமோ, சிம்புவோ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. இதற்கிடையே ரம்யா கிருஷ்ணன், சரத்குமார், அரவிந்தசாமி என பலரதும் பெயரும் பிக்பாஸ் தொகுப்பாளராக அடிபடுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்