Bigg boss season 7: என்னது.. இந்த சீசனில் இரண்டு பிக் பாஸ் வீடுகளா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட்..!
Bigg boss season 7 update: அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாக எதிர்பார்க்கப்படும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று கசிந்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மிக பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. கடந்த ஆறு சீசன்களாக நல்ல வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் வரும் அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆறு சீசன்களை போலவே இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார் என்றும், அவர் நடித்துள்ள ப்ரோமோ வீடியோவின் படப்பிடிப்பு சென்ற மாதம் சென்னையில் நடைபெற்றது என்ற தகவல் இணையத்தில் வெளியானது.
இந்த சீசன் போட்டியாளர்கள் :
பொதுவாக ஒவ்வொரு சீசனிலும் வைரலான செலிபிரிட்டிகள், பரபரப்பாக இருந்து இன்று வாய்ப்பில்லாமல் இருப்பவர்கள், சின்னத்திரையில் கவனம் ஈர்த்தவர்கள், கலைத்துறையை சேர்ந்தவர்கள், காமெடியன்கள் இப்படி பலரின் கலவையாகவே போட்டியாளர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் இந்த பிக் பாஸ் 7வது சீசனில் பங்கேற்கப்போகிறவர்கள் என யூகிக்கிக்கப்பட்ட சில போட்டியாளர்களின் விவரம் என ஏற்கனவே இணையத்தில் வைரலாக பகிரப்பட்டது. அந்த பட்டியலில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிரபலமான நடிகர் பிருத்திவிராஜ் என்ற பப்லு, சின்னத்திரை தொகுப்பாளினியாக இருந்து ஜாக்குலின், சர்ச்சை கருத்துகளால் மிகவும் பிரபலமாக இருக்கும் ரேகா நாயர், நடிகை ரச்சித்தாவின் முன்னாள் கணவர் தினேஷ், தனியார் பேருந்து பெண் ஓட்டுநராக பிரபலமான ஷர்மிளா உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
லேட்டஸ்ட் அப்டேட் :
அந்த அப்டேட்டை தொடர்ந்து இந்த பிக் பாஸ் சீசன் குறித்த மேலும் ஒரு ஸ்வாரஸ்யமான தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த சீசனில் இரண்டு பிக் பாஸ் வீடுகள் இருக்கும் என்றும் அதில் ஒரு வீட்டில் இந்த சீசன் போட்டியாளர்களும் இரண்டாவது வீட்டில் பழைய பிக் பாஸ் சீசன் போட்டியாளர்களும் தங்க வைக்கப்படலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சீசன் போட்டியாளர்களாக கலந்து கொள்ள போகிறவர்களுக்கு இந்த உண்மை ஏற்கனவே தெரியுமா? அல்லது உள்ளே சென்ற பிறகு தான் தெரியவருமா? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
காத்திருக்கும் ட்விஸ்ட் :
இப்படி புதிய மற்றும் பழைய போட்டியாளர்கள் தனித்தனியே இரண்டு வீடுகளில் இருக்கப்போவதால் போட்டியாளர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்ற அர்த்தம் கிடையாது. வழக்கமான எண்ணிக்கையில் தான் இரெண்டு வீட்டிலும் போட்டியாளர்கள் பிரித்து தங்க வைக்கப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இது வரையில் வெளியாகவில்லை. பிக் பாஸ் சீசன் 7 ப்ரோமோ இந்த மாத இறுதியில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் இல்லாத ஒரு வித்தியாசமான ட்விஸ்ட் இந்த பிக் பாஸ் சீசனில் உள்ளதால் ரசிகர்களின் ஆர்வம் இப்போதிலிருந்தே அதிகமாக உள்ளது.