BiggBoss 6 Tamil : முடியப்போகுது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி.. இவ்வளவு விஷயம் நடந்துருக்கா?..வாங்க பார்க்கலாம்!
கடந்த 2017 ஆம் ஆண்டு கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசன், அடுத்தடுத்த ஆண்டுகளில் பார்வையாளர்களிடையே நிகழ்ச்சி பற்றிய ஒருவித சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் நாளையுடன் முடிவுக்கு வரும் நிலையில் இதுவரை நடந்த நிகழ்வுகளை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்.
6வது சீசனாக ஒளிபரப்பான பிக்பாஸ்
கடந்த 2017 ஆம் ஆண்டு கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசன், அடுத்தடுத்த ஆண்டுகளில் பார்வையாளர்களிடையே நிகழ்ச்சி பற்றிய ஒருவித சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. இதனிடையே கடந்தாண்டு அக்டோபர் 9 ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் நாளை நிறைவடைகிறது. தொடர்ந்து 6வது சீசனாக கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த சீசனில் ஜிபி முத்து, திருநங்கை ஷிவின் கணேசன், அசல் கோலார், நிவாஷினி, குயின்ஸி, சாந்தி, விஜே மகேஸ்வரி, அஸிம், ராபர்ட் மாஸ்டர், ஏடிகே, அஸிம், ஜனனி, கதிரவன் ,மணிகண்டா , ரச்சிதா,ஆயிஷா, ஷெரின் ஷாம், டிக்டாக் பிரபலம் தனலட்சுமி,ராம் ராமசாமி, மற்றும் விக்ரமன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் வைல்ட் கார்டு எண்ட்ரீயாக மைனா நந்தினி பங்கேற்றனர்.
முதல் முறையாக மக்கள் போட்டியாளர்கள்
வழக்கமாக பிரபலங்களை மையப்படுத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த முறை முதல்முறையாக திருநங்கை நமீதா மாரிமுத்துவுக்கு வாய்ப்பு வழங்கியது. ஆனால் உடல்நலக்குறைவால் அவர் வெளியேறினார். அதேசமயம் இம்முறை மக்களும் பங்கேற்கலாம் என்ற அறிவிப்பு வெளியானது. ஏராளமானோர் விண்ணப்பித்த நிலையில், திருநங்கை ஷிவின் கணேசன், டிக்டாக் மூலம் பிரபலமான தனலட்சுமி மக்கள் போட்டியாளராக அறிமுகம் செய்யப்பட்டனர்.
கேப்டன்ஸி டாஸ்க்
கேப்டன்ஸி டாஸ்க்கில் சிறந்ததாக பலராலும் பாராட்டப்பட்டது முதல் வாரத்தில் நடந்த டாஸ்க் தான். இதில் ஜிபி முத்து, ஜனனி, சாந்தி ஆகியோர் பங்கேற்றனர். கடிகாரம் முள்ளாக ரு பெரிய கடிகாரத்தைப் பிடித்துக் கொண்டு அது சுழலும் போது பிடியை விடாமல் இருக்க வேண்டும். இதில் உடல்நலக்குறைவு இருந்த போதிலும் பங்கேற்ற ஜிபி முத்து வெற்றி பெற்றார். அதன்பிறகு டாஸ்க் நடந்தாலும் அவற்றில் பெரும்பாலும் கருத்து மோதல்கள் தான் எழுந்தது.
அதிக முறை கேப்டன் ஆன போட்டியாளர்
பிக்பாஸ் முந்தைய சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் போட்டியாளர் மணிகண்டா ராஜேஷ் அதிகமுறை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். 12 வாரங்கள் தாக்குப்பிடித்த அவர் 4 வாரம் கேப்டனாக செயல்பட்டார். இதனைத் தொடர்ந்து மைனா நந்தினி 3 முறையும், அஸிம், ஜிபி முத்து, குயின்ஸி, ஏடிகே, அமுதவாணன் ஆகியோரும் கேப்டனாக செயல்பட்டனர்.
சுவாரஸ்மான டாஸ்க்
9வது வாரத்தில் சினிமா கேரக்டர்களை மையமாக வைத்து கற்பனை கதாபாத்திரங்களை கொண்டு விளையாடும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் நித்யானந்தாவாக ஏடிகேவும், நாய் சேகர் வடிவேலுவாக மைனா நந்தினியும், ஜெகன் மோகினியாக ஷிவினும், நேசமணி வடிவேலுவாக தனலட்சுமியும், மைக்கேல் ஜாக்சனாக கதிரவனும், மன்மதன் சிம்புவாக ஆயிஷாவும் பங்கேற்றனர்.
இதேபோல் அந்நியன் விக்ரமாக விக்ரமனும், அராத்து ஆனந்தியாக ஜனனியும், ரகுவரனாக ராமும், சிவாஜியாக அஸிமும், எம்.ஆர்.ராதாவாக அமுதவாணனும், பாலையாவாக மணிகண்டாவும், சரோஜா தேவியாக ரச்சிதாவும் நடித்து தங்களது சிறந்த பெர்பார்மன்ஸை வெளிப்படுத்தினர்.
பிக்பாஸ் ஜெயிலுக்கு சென்றவர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்க்கில் சொதப்பியற்காக ஜனனி, ராம், அஸின், ஷிவின், ராபர்ட், ரச்சிதா, விக்ரமன், அமுதவாணன், குயின்ஸி ஆகியோர் பிக்பாஸ் சிறை சென்றார்கள்.
இதேபோல் வாழைப்பழ பெட் தண்டனையில் விக்ரமன், ஜனனி, நிவாஷினி, குயின்ஸி, ஆயிஷா, ராம், அஸிம், தனலட்சுமி ஆகியோர் சிக்கிக்கொண்டனர்.
முதல்முறையாக பண மூட்டை
தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் முதல்முறையாக பணமூட்டை மற்றும் பணப்பெட்டி என்ற பெயரில் இரண்டு முறை பரிசுத்தொகை அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 100வது நாளில் கதிரவன் ரூ.3 லட்சத்துடனும், 103வது நாளில் ரூ.11.75 லட்சத்துடன் அமுதவாணனும் வெளியேறினார்.
டபுள் எவிக்ஷன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 9வது வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. இதில் முதலில் எவிக்ஷனில் ராம் ராமசாமியும், இரண்டாவது எவிக்ஷனில் ஆயிஷாவும் வெளியேற்றப்பட்டனர்.