Bigg Boss 7: வனிதாவைத் தொடர்ந்து அமர்தீப்... தொடரும் பிக் பாஸ் ரசிகர்களின் தாக்குதல்... பிரபலங்கள் கண்டனம்!
Bigg Boss 7 Telugu: தெலுங்கு பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பல்லவி பிரசாத் ரசிகர்கள், இரண்டாவதாக வெற்றி பெற்ற அமர்தீப் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரியாலிட்டி ஷோக்கள் என்றுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. முதன் முதலில் இந்தியில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததைத் தொடர்ந்து மற்ற தென்னிந்திய மொழிகளிலும் தொடங்கப்பட்டு சிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
தெலுங்கு பிக் பாஸ் :
அந்த வகையில் தமிழில் பிக்பாஸ் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழில் சீசன் 7 ஒளிபரப்பாவதற்கு சில வாரங்களுக்கு முன்னரே தெலுங்கில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியினை நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கி வருகிறார்.
விவசாயி பல்லவி பிரசாத் :
18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட தெலுங்கு பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சமீபத்தில் தான் முடிவடைந்தது. அந்தப் போட்டியில் டைட்டில் வின்னராக பல்லவி பிரசாத் தேர்ந்து எடுக்கப்பட்டார். அடிப்படையில் ஒரு விவசாயியான பல்லவி பிரசாத், யூ டியூப் சேனல் ஒன்றை வைத்துள்ளார். அதன் மூலம் விவசாயம் குறித்த ஏராளமான தகவல்களை கொடுத்து வந்தார். அவருக்கு ஏராளமான சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். அந்த யூடியூப் சேனல் மூலம் பிரபலமாக இருந்ததால் தான் பல்லவி பிரசாத்துக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.
டைட்டில் வின்னர் :
தெலுங்கு பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் ஏராளமான நடிகர் நடிகைகள் பங்கேற்றாலும், ஒரு சாமானிய மனிதனான பல்லவி பிரசாத் மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக நிகழ்ச்சி துவங்கிய நாள் முதல் கடுமையாக போட்டியிட்டு வந்தார். அவரின் சிறப்பான விளையாட்டுக்கு தான் அவர் டைட்டில் வின்னராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.
இரண்டாவது இடம் :
பல்லவி பிரசாத்துக்கு அடுத்து இரண்டாவது வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டவர் சின்னத்திரை நடிகர் அமர்தீப். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்' என்ற சீரியல் மூலம் பிரபலமான சீரியல் நடிகை தேஜஸ்வினியின் கணவராவார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்தே அமர்தீப்பும், பல்லவி பிரசாத்துக்கு டஃப் கொடுத்து வந்தார். ஆனால் அதிக அளவிலான ஆதரவு விவசாயியான பல்லவி பிரசாத்துக்கு கிடைக்க அவர் வெற்றியாளராக பிக் பாஸ் டைட்டிலையும், 35 லட்சம் ரூபாயையும் வென்றார். பல்லவி பிரசாத்துக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
மற்றொரு தாக்குதல் :
இந்நிலையில் அமர்தீப், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்ததும் தன்னுடைய கார் மூலம் வீட்டுக்கு செல்லும் சமயத்தில், பல்லவி பிரசாத் ரசிகர்கள் அமர்தீப் காரை துரத்திச் சென்று தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற அத்துமீறிய செயலுக்கு பிரபலங்கள் பலரும் கண்டங்களை தெரிவித்து வருகிறார்கள்.
வனிதா விஜயகுமார் விவகாரம் :
பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்பதையும் மறந்து பலரும் வன்மத்தை தாக்குதல் மூலம் நடத்தி வருகிறார்கள். தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியினை விமர்சனம் செய்து வரும் வனிதா விஜயகுமார் மீது இது போன்ற ஒரு தாக்குதலை ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் செய்த சம்பவம், சமீபத்தில் நடைபெற்று பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் காரணமாக மற்றொரு தாக்குதல் நடைபெற்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.