![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Big Fish: பொய்யான சாகசக் கதைகளை சொல்லும் தந்தைகள்... தந்தை-மகன் உறவை ஆராயும் 'பிக் ஃபிஷ்' திரைப்படம்!
பிக் ஃபிஷ் திரைப்படத்தை ஏன் நாம் தந்தையர் தினத்தன்று நினைவுகூற வேண்டும். அதிலும் குறிப்பாக மகன்கள் ஏன் தங்களது அப்பாக்களைப் புரிந்துகொள்ள பிக்ஃபிஷ் படத்தைப் பார்க்கவேண்டும்
![Big Fish: பொய்யான சாகசக் கதைகளை சொல்லும் தந்தைகள்... தந்தை-மகன் உறவை ஆராயும் 'பிக் ஃபிஷ்' திரைப்படம்! big fish movie a fantasy tale about father son relationship hollywood cinema details on fathers day Big Fish: பொய்யான சாகசக் கதைகளை சொல்லும் தந்தைகள்... தந்தை-மகன் உறவை ஆராயும் 'பிக் ஃபிஷ்' திரைப்படம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/17/691fbdeffa911fa3aa2b0c6dd7066de61687009315586572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆண்கள் சின்ன வயதில் சூப்பர் ஹீரோக்களாகப் பார்க்கும் தங்களது அப்பாவை ஏன் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் வில்லனாக பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள்? ஒரே வீட்டில் இரு முதிர்ந்த ஆண்கள் இருக்க நேர்ந்தால், அது ஏன் பஞ்சாரத்தில் அடைக்கப்பட்ட இரு ஆண் யானைகள் போல் மோதல்களால் நிறைந்த சூழலாய் இருக்கிறது?
அப்பா தனது மகன் தன்னைப்போல் ஒரு நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று விரும்புவதும், தனது அப்பாவைப்போல் மட்டும் ஆகிவிடக் கூடாது என்று மகன் நினைப்பதும் ஏன்? வாழ்க்கையில் தோல்வியடைந்த அப்பாக்கள் மேல் மகன்களுக்கு எல்லா காலமும் கோபம் அடங்காமல் இருப்பது ஏன்? ஒருவேளை தானும் அவரைப்போல் வாழ்க்கையுடன் சமரசம் செய்துகொண்டு ஒரே இடத்தில் தேங்கிவிடுவோம் என்கிற அச்சத்தின் காரணமாகவா?
பொய்யான சாகசக் கதைகள்!
1998ஆம் ஆண்டு டிம் பர்டன் இயக்கிய திரைப்படம் பிக் ஃபிஷ். புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணப்படுகையில் இருக்கும் தனது தந்தை எட்வர்டை பார்க்க வருகிறார் அவரது கோபக்கார மகன் வில்.
எதற்காக இந்தக் கோபம் தெரியுமா? தனது இளமைக் காலத்தில் தான் செய்த சாகசக் கதைகளை தனது மகனிற்கு சொல்லி வந்திருக்கிறார். தான் பயணம் சென்றது, மர்மமான ஒரு நகரத்தைப் பார்த்தது, தனது திருமண மோதிரத்தை பணையமாக வைத்து மிகப்பெரிய மீன் ஒன்றைப் பிடித்த கதை என்று அவர் சொன்ன கதைகள் ஏராளம்!
சிறுவனாக இருந்தபோது இதையெல்லாம் விரும்பிக் கேட்ட வில், ஒரு கட்டத்திற்குமேல் இந்தக் கதைகளால் சலிப்படைகிறான். தனது அப்பா சொல்வது அனைத்தும் பொய் என்று நம்பத் தொடங்குகிறான் வில். உண்மையில் தனது அப்பா சொல்லிக்கொல்லும்படி எதுவும் செய்ததில்லை, அதனால் தான் அவர் இப்படியான பொய்க் கதைகளை உருவாக்குகிறார் என்றும் அவன் நினைக்கிறான்.
கதைகளால் வளரும் உறவு
இன்று தான் வளர்ந்து நிற்கும் ஒரு மனிதனாக, எதார்த்த வாழ்க்கையில் எத்தனையோ சவால்களை எதிர்கொள்கிறான். அவற்றை எப்படிக் கையாள்வது எனத் தெரியாமல் தவிக்கிறான். அப்படியான நேரங்களில் எல்லாம் தனது அப்பாவிடம் தான் கற்றுகொள்ள எதுவுமே இல்லை என்கிற கோபம் அவன் மனதில் எழுகிறது.
இன்று மரணப்படுக்கையில் இருக்கும்போதுகூட அவர் அதே பழைய கதைகளை பிதற்றிக்கொண்டிருப்பதைப் பார்த்து எரிச்சலடையும் வில், அவர் இறந்துவிட வேண்டும் என்று விரும்புகிறான். ஒவ்வொரு முறையும் படுக்கையின் அருகில் தனது மகனைப் பார்க்கும் எட்வர்ட், ஒரு கதையைச் சொல்கிறார். அதை நாம் காட்சியாக பார்க்கிறோம்.
மகன்களின் ஹீரோக்கள்
ஒரு கட்டத்தில் பேசமுடியாத நிலைக்குப் போகும் எட்வர்ட், தான் சொன்ன கதைகளை தனது மகனை சொல்லச் சொல்லி கேட்கிறார். தனது தந்தையின் இறுதி ஆசையை நிறைவேற்றும் எண்ணத்தில் வேறு வழியில்லாமல் அந்தக் கதைகளை அவருக்கு ஏற்ற வகையில் சொல்கிறார் வில்.
எட்வர்ட் மரணமடைகிறார். அவரது இறுதிச் சடங்கிற்கு ஒரு பெரிய கூட்டம் வருகிறது. அவர்கள் அனைவரும் தனது அப்பா சொன்ன கதைகளில் வந்த மனிதர்கள். அதே மாதிரியாக இல்லாமல் சில வித்தியாசங்களுடன்... தனது அப்பா சொன்ன கதைகளை தனது மகனிற்கு சொல்கிறார் வில். படம் நிறைவடைகிறது.
தனது அப்பா சொன்ன கதைகள் அனைத்தும் நிஜமாக இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் அவற்றில் இருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய எத்தனையோ வாழ்க்கைப் பாடங்களை, அந்தக் கற்பனைக் கதைகளில் வில் கற்பதே நெகிழ்ச்சியான நிறைவு.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)