IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
ஆசிய கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்திய ஏ அணியை வங்கதேசம் ஏ அணி சூப்பர் ஓவரில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

கத்தார் தலைநகர் தோஹாவில் ஆசிய ஆடவர் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் ஆசிய கோப்பையில் பங்கேற்ற ஒவ்வொரு அணிகளின் ஏ அணிகள் பங்கேற்று ஆடி வருகின்றனர்.
195 ரன்கள் இலக்கு:
லீக் சுற்று முடிவுகளின் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஏ அணி வங்கதேச ஏ அணியுடன் மோதியது. ஆட்டத்தை தொடங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் ஹபிபூர் - ஜிசான் ஆலம் ஜோடி சிறப்பாக ஆடியது. ஜிசான் 26 ரன்களில் அவுட்டாக, ஜாவத் அப்ரார் 13 ரன்களில் அவுட்டாக அக்பர் அலி 9 ரன்களுக்கும், அபு ஹைதர் டக் அவுட்டும் ஆக 119 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 15வது ஓவரில் தடுமாறிக் கொண்டிருந்த வங்கதேச அணியை மெஹரூப் காப்பாற்றினார்.

ஹபிபுர் நிதானமாக ஆட மெஹரூப் சிக்ஸர் மழை பொழிந்தார். விஜயகுமார் வைஷாக், நமன்தீர், ராமன்தீப் பந்துவீச்சை விளாசித் தள்ளினார். ஹபிபுர் 46 பந்துகளில் 3 பவுண்டரி 5 சிக்ஸருடன் 65 ரன்களுடன் அவுட்டாக, மெஹரூப் 18 பந்துகளில் 1 பவுண்டரி 6 சிக்ஸருடன் 48 ரன்களும், யாசிர் அலி 9 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 17 ரன்களும் எடுக்க 194 ரன்களை வங்கதேசம் எடுத்தது.
அதிரடி தொடக்கம்:
195 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி - பிரியன்ஷ் ஆர்யா அபாரமான தொடக்கத்தை தந்தனர். பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் இவர்கள் விளாச இந்திய அணி 4வது ஓவரிலே 50 ரன்களை கடந்தது. அபாரமாக ஆடிய சூர்யவன்ஷி 15 பந்துகளில் 2 பவுண்டரி 4 சிக்ஸருடன் 38 ரன்களில் அவுட்டாக நமன்தீர் 7 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் ஜிதேஷ் சர்மா பொறுப்புடனும் அதிரடியாகவும் ஆடினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய பிரியன்ஷ் ஆர்யா 23 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 44 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
15வது ஓவரில் 150 ரன்களை இந்தியா எட்டியபோது நேகல் வதேராவுடன் இணைந்து சிறப்பாக ஆடிய ஜிதேஷ் சர்மா அவுட்டானார். அவர் 23 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 33 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து ராமன்தீப் சிங் 17 ரன்களுக்கு அவுட்டாக நேகல் வதேரா தனி ஆளாக போராடிக் கொண்டிருந்தார்.
சூப்பர் ஓவரில் டக் அவுட்:
19வது ஓவரை ரிபோன் மோன்டால் சிறப்பாக வீசி 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ராமன்தீப்சிங்கையும் அவுட்டாக்க கடைசி ஓவரில் 16 ரன்கள் இந்தியாவிற்கு தேவைப்பட்டது.
கடைசி வரை த்ரில்லிங்காக சென்ற இந்த போட்டியில் 20வது ஓவரில் இந்திய அணி 15 ரன்கள் எடுக்க இந்த ஆட்டம் டையில் முடிந்தது.
இதனால், இறுதிப்போட்டிக்குச் செல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் சூப்பர் ஓவர் நடந்தது. சூப்பர் ஓவரை வங்கதேச பந்துவீச்சாளர் ரிபோன் மோண்டோல் வீசினார். அந்த ஓவரில் இந்தியா ரன் ஏதும் எடுக்காமல் 2 விக்கெட்டுகளை இழந்தது. சூப்பர் ஓவரில் 2 விக்கெட்டை இழந்தால் ஆல் அவுட்டாக கருதப்படும்.
இறுதிப்போட்டியில் வங்கதேசம்:
சூப்பர் ஓவரில் 1 ரன் நோக்கி களமிறங்கிய வங்கதேசம் அணிக்கு எதிராக சூப்பர் ஓவரை சுயாஷ் சர்மா வீசினார். முதல் பந்திலே விக்கெட்டை பறிகொடுக்க ஆட்டத்தில் த்ரில் அதிகரித்தது. இரண்டாவது பந்தை சுயாஷ் சர்மா ஒயிடாக வீச வங்கதேசம் 1 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இதனால், வங்கதேச அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.




















