(Source: ECI/ABP News/ABP Majha)
Behind The Song: "போறானே..போறானே” பாடல் இப்படி தான் உருவாச்சா? - வாங்க பார்க்கலாம்!
2011 ஆம் ஆண்டு வெளியான வாகை சூடவா படத்தில் விமல், இனியா, பாக்யராஜ், பொன்வண்ணன், தம்பி ராமையா என பலரும் நடித்திருந்தனர்.
வாகை சூடவா படத்தில் இடம்பெற்ற “போறாளே..போறாளே” பாடல் உருவான விதத்தை இயக்குநர் சற்குணம் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருந்தார். அதனைப் பற்றி காணலாம்.
இயக்குநர் ஏ.எல்.விஜய்யிடம் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய சற்குணம், விமல் நடித்த களவாணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து வாகை சூடவா, நய்யாண்டி, சண்டி வீரன், களவாணி 2,பட்டத்து அரசன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் தான் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக உள்ள ஜிப்ரானை அறிமுகம் செய்தவர். இருவரும் இணைந்து வாகை சூடவா படத்தில் பணியாற்றினர்.
2011 ஆம் ஆண்டு வெளியான வாகை சூடவா படத்தில் விமல், இனியா, பாக்யராஜ், பொன்வண்ணன், தம்பி ராமையா என பலரும் நடித்திருந்தனர். கல்வியின் முக்கியத்துவத்தை பற்றிய இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது தேசிய விருதும் வென்றது. மேலும் மாநில அரசு விருது, எடிசன் விருது, பிலிம்பேர் விருதுகள் என வாங்காத விருதுகளே இல்லை என்கிற அளவுக்கு பலரது பாராட்டையும் பெற்றது.
கார்த்திக் நேத்தா எழுதிய போரானே போரானே பாடலை ரஞ்சித், நேகா பாசின் இருவரும் இணைந்து பாடியிருந்தனர். இப்பாடல் உருவான பின்னணியை இயக்குநர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.
அதாவது, “ஜிப்ரான், சாய் உள்ளிட்டோர் இணைந்து போரானே..போரானே பாடலை உருவாக்கியிருந்தார்கள். அந்த பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அந்த பாடல் வாகை சூடவா படம் வெளிவருவதற்கு முன்னதாக 7 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. இந்த பாடல் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில் 2ஆம் பரிசு வாங்கியது. அப்படியே மறந்தும் விட்டார்கள். ஒருநாள் ஜிப்ரான் இந்த பாடலின் ட்யூனை பாடவும் நான் கேட்டேன்.
ஜிப்ரானின் இயற்பெயர் விஜய் தான். நானும் அவரை அப்படித்தான் கூப்பிடுவேன். அந்த ட்யூனை கேட்டதும், விஜய் சூப்பரா இருக்கு. இதை நான் படம் பண்ணும் போது உபயோகித்து கொள்கிறேன் என சொன்னேன். நாங்கள் உதவியாளர்களாக இருந்தபோதே அந்த பாடல் உருவாகி விட்டது” என இயக்குநர் சற்குணம் தெரிவித்திருந்தார்.
ஜிப்ரானின் வளர்ச்சி
வாகை சூடவா படம் ஜிப்ரானுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து வத்திக்குச்சி, குட்டிப்புலி, நய்யாண்டி, திருமணம் என்னும் நிக்காஹ், உத்தமவில்லன், பாபநாசம், விஸ்வரூபம் 2, தூங்காவனம், தீரன் அதிகாரம் ஒன்று, அறம், ராட்சசன், கடாரம் கொண்டான், மாறா என ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.