Beast Director Nelson Interview: பெரிய ஸ்டார்களை இயக்குவதில் இருக்கும் பிரச்னை என்ன..? மனம் திறந்து நெல்சன் சொன்னது என்ன?
பெரிய ஸ்டார்களை வைத்து இயக்குவதில் இங்கு இருக்கும் பிரச்னை என்ன என்பதை ‘பீஸ்ட்’ இயக்குநர் நெல்சன் பகிர்ந்திருக்கிறார்.
தமிழ்நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த விஜயின் பீஸ்ட் திரைப்படம் ஒரு வழியாக இன்று வெளியாகிவிட்டது. காலையில் இருந்து ஆட்டம் பாட்டம் என கொண்டாடி தீர்த்து படம் பார்த்த ரசிகர்களிடம் படம் எப்படி இருக்கிறது என்று கேட்டால் ஒரு முறை பார்க்கலாம் என்கிறார்கள்.
View this post on Instagram
ஒரே ஒரு படத்தை எடுத்து விட்டு உச்ச நடிகரை வைத்து டைரக்ட் செய்யும் வாய்ப்பு பெற்ற நெல்சன், வாய்ப்பை இன்னும் சிறப்பாக பயன்படுத்தி இருக்கலாம் என்றும் கருத்துக்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் படம் பற்றிய நெகட்டிவ்வான மீம்களும் சமூக வலைதளங்களில் பறக்க ஆரம்பித்திருக்கின்றன.
பெரிய ஸ்டார்கள் - பெரிய பிரச்னை
இந்த நிலையில் பெரிய ஸ்டார்களை வைத்து இயக்குவதில் இருக்கும் பிரச்னை என்ன என்பதை பற்றி நெல்சன் முன்னதாக ஃபிலிம் கம்பேனியன் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அவர் அப்போது பகிர்ந்து கொண்டதாவது, “ ஹீரோ இல்லாமல் ஒரு சப்ஜெக்டை எடுத்து ஆர்டிஸ்டிக் படமாக எடுக்க முடியும். ஆனால் இங்கு ஒரு விஷயம் இருக்கிறது.
நமக்கு பிடித்த மாதிரி ஒரு படம் எடுக்க வேண்டுமென்றால் இங்கு எந்த பெரிய ஹீரோவும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். நமக்கு பிடித்த படமும், இங்கு இருக்கும் கமர்ஷியல் சார்ந்த படங்களும் வெவ்வேறு பாதையை கொண்டிருக்கின்றன. நாம் ஒரு ஹீரோவை அப்ரோச் செய்து ஒரு படத்தை இயக்கும் போது, நமக்கு எப்படி ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறதோ, அதே போல அந்த நாயகனுக்கும் இவ்வளவு நாள் உருவாக்கிய மார்க்கெட்டை வைத்து ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அவை இரண்டும் ஒரு பாய்ண்டில் இணையும் போதுதான், நாம் எதிர்பார்க்க கூடிய கமர்ஷியல் ஃபிலிம்மை எடுக்க முடியும். நமக்கு பிடிச்ச படத்தை நானே தயாரித்து இயக்குவதுதான் சரியான விஷயம். ஆனால் அதை இப்போதைக்கு நான் செய்கிற மாதிரி இல்லை.” என்று பேசினார்.