"பயில்வான் ரங்கநாதன் - ஷகிலா மோதல் விவகாரம்" அஜர்பைஜான் தூதர் ஆதங்கத்துடன் சொன்ன அறிவுரை!
Payani dharan : அஜர்பைஜான் நாட்டின் இந்திய தூதர் பயணிதரன் சமூக மேம்பாடு குறித்து அறிவியல் சிந்தனையை தூண்டும் வகையில் பதிவு ஒன்றை எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் பிரச்சினைகளை தைரியமாக பேசும் ஒரு மேடை நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் நடிகை ஷகிலா மற்றும் பயில்வான் ரங்கநாதன் கலந்து கொண்ட போது அவர்களுக்குள் ஏற்பட்ட விவாதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஷகிலா பயில்வான் ரங்கநாதனை "உங்கள் மகள் ஒரு பெண்ணை காதலிக்கிறாள்" என சொன்னதும் கோபத்தின் உச்சிக்கு சென்ற பயில்வான் ரங்கநாதன் " என்னுடைய பொண்ணை பத்தி தப்பா பேசின உன்னுடைய நாக்கு அழுகிவிடும்" என கொந்தளிக்க உங்கள் வீட்டு பெண்ணை பற்றி பேசினால் மட்டும் இவ்வளவு வலிக்கிறதே அப்படி தான் நீங்கள் குற்றம் சுமத்தும் நடிகைகளின் அம்மாக்களுக்கும் வலிக்கும் என பதிலடி கொடுத்தார் ஷகிலா. அவரின் இந்த தரமான பதிலடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தாலும் இந்த பிரச்சினை குறித்து சமூக அக்கறையுடன் தன்னுடைய கருத்தை பகிர்ந்துள்ளார் அஜர்பைஜான் நாட்டின் இந்திய அயலுறவு அதிகாரி பயணிதரன்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்
" எது உன்னை மகிழ்விக்கிறது என்று சொல், நீ யார் என்பதைச் சொல்கிறேன்” என்று ஒரு சொலவடை உண்டு. இது ஒரு கருவியும் கூட. இதை நமக்கு நாமே பொருத்திக்கொண்டு, நம் எண்ணங்களைச் சீர் செய்துகொள்ள முடியும். சமீபத்திய வாய்ப்பு இது. ஒரு கேவலமான ஆண் இருக்கிறார். அவர் ஊடகங்களில் பெண்களை மிகக் கீழ்த்தரமாகப் பேசுபவர். அவர் மீது பலருக்கும் நியாயமான கோபம் உண்டு.
சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரை ‘திக்குமுக்காட வைக்கும்’ காட்சி வைரலாகிக் கொண்டிருக்கிறது. பலரும் களிப்புடன் அதைப் பகிர்ந்து, பல பெண்களை இழிவுபடுத்திய அவருக்கு நல்ல பாடம் கிடைத்தது என்கிறார்கள். அவரைத் திக்குமுக்காட வைத்த விஷயம் என்ன? அவர் வீட்டுப் பெண்ணின் ஒரு செயல். அது சமுதாயக் கண்ணோட்டத்தில் ஆணவத்தைக் குறைக்கும் தன்மை உடையதாம். அதைச் சொல்லி, அதன் மூலம் அவரை அவமானமடைய வைக்கும் முயற்சி.
சாதி மறுப்புத் திருமணங்களுக்கு அவமானப்பட்டு தங்கள் பிள்ளைகளையே கொல்லும் பெற்றோர்கள் இருக்கும் சமூகம் நமது. சொந்தச் சாதியில் காதலித்தாலே கூட கத்தியைத் தூக்கும் சமூகம். குடும்ப மானம் என்பதைப் பெண்ணின் உறுப்புகளில் வைத்து அரசியலாக்கிச் சீரழியும் சமூகம். பெண்ணின் உடம்பும் நடத்தையும் உறவுகளும் பொதுவெளியில் எடைபோடப்படும் என்கிற மண்ணாந்தைப் புத்தியில் பெண்களுக்கான இடத்தைக் குறுக்கிப் பாழடிக்கும் சமூகம்.
இதைச் செய்யும் ஓர் ஆணை மட்டுப்படுத்த அந்த ஆணின் குடும்பத்துப் பெண்ணின் நடவடிக்கை தான் நமக்குக் கிடைக்கிறதா? அந்தப் பெண்ணின் தனிப்பட்ட நடவடிக்கை பொதுவில் எடைபோடப்படுவதால் அவருடைய ‘ஆணவம்’ அழியும் என்பது தான் நமக்கு உவப்பூட்டுகிறதா? இது நம்மை மகிழ்விக்கிறது என்றால், நாம் யார்? அந்தக் கேவலமான ஆணைத் திக்குமுக்காட வைக்கவேண்டும், ஆனால் அது பெண்களின் தனிப்பட்ட செயல்களைப் பொதுவில் அவமானச் சின்னமாகக் காட்டும் உத்தியில் இருக்கக்கூடாது.
உதிரிப்பூக்கள் படத்தில் கடைசியில் அந்த வில்லன் சொல்லும் வசனம் தான் நினைவுக்கு வருகிறது: நான் செய்ததில் பெரிய தப்பு உங்கள் எல்லோரையும் என்னை மாதிரியே ஆக்கிவிட்டது தான்". என்பது தான் அவரின் பதிவு.
“எது உன்னை மகிழ்விக்கிறது என்று சொல், நீ யார் என்பதைச் சொல்கிறேன்” என்று ஒரு சொலவடை உண்டு. இது ஒரு கருவியும் கூட. இதை நமக்கு நாமே பொருத்திக்கொண்டு, நம் எண்ணங்களைச் சீர் செய்துகொள்ள முடியும். சமீபத்திய வாய்ப்பு இது:
— 🚶🏽பயணி தரன் (@PayaniDharan) May 8, 2024
ஒரு கேவலமான ஆண் இருக்கிறார். அவர் ஊடகங்களில் பெண்களை மிகக்… pic.twitter.com/DBZm3PIYKD
அஜர்பைஜான் நாட்டின் இந்திய தூதராக இருக்கும் இந்திய அயலுறவு அதிகாரியான பயணி தரன் நடிகர் அஜித்தை விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்ற சமயத்தில், தனது வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.