Malayalam Cinema: பெண் இயக்குநர்களை ஆதரிக்கும் கேரளா.. கான் விருது வென்ற பெண்கள் மலையாள சினிமாவுக்கு பாராட்டு!
சர்வதேச கான் திரைபப்ட விழாவில் மலையாளப் பட உலகுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.
சர்வதேச கான் திரைப்பட விழா 2024
சர்வதேச கான் திரைப்பட விழா கடந்த மே 14 முதல் மே 25ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த விழாவில் பாயல் கபாடியா இயக்கிய All We Imagine As Light படம் சிறந்த படத்திற்கான கிராண்ட் ப்ரிக்ஸ் விருதினை வென்றுள்ளது. மேலும் சிறந்த நடிகைக்கான விருதினை முதல் முறையாக இந்தியாவைச் சேர்ந்த நடிகை அனசுயா சென்குப்தா ‘ஷேம்லெஸ்’ படத்திற்காக வென்றுள்ளார். கடந்த முப்பது ஆண்டுகளில் இந்தியா சார்பாக எந்த படமும் கான் திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவில் தேர்வாகாத நிலையில் இந்த ஆண்டு பாயல் கபாடியாவின் படம் தேர்வானது இந்திய சினிமாவின் மீது உலக திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிகழ்வின் பேசியை இயக்குநர் பாயல் கபாடியா மற்றும் நடிகை கனி குஸ்ருதி மலையாள சினிமாத் துறையை பாராட்டி பேசியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பாராட்டுக்களை அள்ளும் மலையாளப் படங்கள்
2024ஆம் ஆண்டு தொடக்கம் முதல் பாலிவுட், கோலிவுட் மற்றும் டோலிவுட் ஆகிய சினிமா துறைகள் வெற்றி படங்களை கொடுத்த திணறி வரும் நிலையில் மலையாளப் படங்கள் சோலோவாக கலக்கிக் கொண்டிருக்கின்றன. பிரேமலு, மஞ்சுமெல் பாய்ஸ், பிரமயுகம், ஆவேஷம், ஆடு ஜீவிதம் என அடுத்தடுத்த படங்கள் 100 கோடி வசூல் இலக்கை தொட்டு அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளன. 2024 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் மே மாதம் வெளியான மலையாளப் படங்கள் மொத்தம் 1000 கோடி வசூலை ஈட்டி சாதனைப் படைத்துள்ளன. இப்படியான நிலையில் கான் திரைப்பட விழாவில் விருது வென்ற பிரபலங்கள் மலையாள சினிமாத் துறையை புகழ்ந்து பேசியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த விழாவில் பேசிய இயக்குநர் பாயல் கபாடியா “இன்றைய சூழலில் சினிமாத் துறை நிறையவே மாறி வருகிறது. இந்தியாவில் பல நல்ல படங்கள் வெளியாகின்றன. குறிப்பாக மலையாள சினிமாத் துறையில் வெளியாகும் படங்கள். இந்தப் படங்களின் கதைகள் அனைத்தும் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. வெகுஜனப் படங்கள் மட்டுமில்லாமல் கலைப்படங்களுக்கும் அங்கு நல்ல ஆதரவு கிடைக்கிறது” என்றார்.
நடிகை கனி குஸ்ருதி பேசியபோது “ கேரள அரசு கேரள சினிமாத் துறைக்கு சிறப்பாக ஆதரவு கொடுத்து வருகிறது. குறிப்பாக பெண் இயக்குநர்களுக்கு என்று தனியாக ஊக்கத் தொகைகளை கேரள அரசு வழங்கி வருகிறது. கேரள மக்கள் வெகுஜன படமானாலும், பரிசோதனை முயற்சிகளானாலும் சரி எல்லா விதமான படங்களுக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இப்படி பல சின்ன சின்ன முயற்சிகளை மலையாள சினிமா எடுத்து வருவதே அதன் வளர்ச்சிக்கு காரணம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.