Avatar 2 Box office Collection: அவெஞ்சர்ஸ் எண்ட் கேமின் வசூலை முந்த முடியாத அவதார்-2 .. முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?
Avatar The Way Of Water: இந்தியாவில் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியான நிலையில், முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியான நிலையில், முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘அவதார்’. கிராபிக்ஸ் காட்சிகள் என கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தொழில் நுட்பத்தில் மிரட்டிய அவதார் படம் உலகளவில் அதிகமான வசூல் சாதனை செய்த படம் என்ற சாதனையை இன்றளவும் தக்கவைத்துள்ளது. ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஒளிப்பதிவு, விஷூவல் எபெக்ட்ஸ், கலை அமைப்பு ஆகிய 3 பிரிவுகளில் விருதுகளைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து அவதார் படம் 5 பாகங்களாக 2 ஆண்டுகள் இடைவெளியில் வெளிவரும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 2 ஆம் பாகமான அவதார்: தி வே ஆப் வாட்டர் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இந்தியாவில் நேற்று வெளியானது. இதற்கான டிக்கெட் முன்பதிவுகள் சில வாரங்களுக்கு முன் தொடங்கிய நிலையில் சுமார் 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்திருந்தது.
View this post on Instagram
படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் பலரும் காலை 4 மணிக்கே முதல் காட்சியைப் பார்க்க தியேட்டரில் குவிந்தனர். ஏற்கனவே பார்த்த அவதார் படத்தின் முதல் பாகத்தின் கதையை அடிப்படையாக கொண்டது என்று சொல்லப்பட்டாலும் கதைக்களமும், விஷூவல் காட்சிகள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்தது. தமிழ் டப்பிங் பார்க்க சென்ற மக்களுக்கு சமகாலத்தில் பேசப்படும் வார்த்தைகளும் இடம் பெற்றிருந்ததால் கலகலப்பாக அவதார் படம் அமைந்தது.
இந்நிலையில் அவதார் 2 பாகத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் அவதார்-2 படம் இந்தியாவில் முதல் நாளில் ரூ.40.50 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2019 ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் திரைப்படத்திற்குப் பிறகு இந்தியாவில் முதல் நாளில் அதிகமாக வசூல் செய்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. அவெஞ்சர்ஸ் படம் முதல் நாளில் ரூ.53.10 கோடியை வசூலித்தது.
ரூ.40 கோடியில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து மட்டும் ரூ.22 கோடியும் , பிற பகுதிகளில் ரூ.18 கோடியும் வசூலாகியுள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்குப் பிறகு அதிக வசூல் சாதனை பெய்த படம் குறிப்பிடத்தக்கது.