10 years of Raja Rani: மௌன ராகம் கதையில் மேஜிக் காட்டிய அட்லீ.. 10 ஆண்டுகளை கடந்த “ராஜா ராணி”..!
10 years of Raja Rani : ஒரு காதல் தோற்றுவிட்டால் ஒருவரின் வாழ்க்கை அத்தோடு முடிந்துவிடுவதில்லை. அதற்கு பின்னால் அழகான ஒரு வாழ்க்கை உள்ளது என்பதை எமோஷனலாக காட்சிப்படுத்திய திரைப்படம் ராஜா ராணி.
காதல் கான்செப்ட் எப்போதுமே தமிழ் ரசிகர்களின் மிகவும் ஃபேவரைட்டான ஒரு சப்ஜெக்ட். அந்த காதல் கான்செப்டை தனது முதல் அட்டெம்ப்ட்டிலேயே கையில் எடுத்து அதில் கொஞ்சம் கூட பிசிறு தட்டாமல் தெகிட்டாமல் ரசனையோடு இயக்குநர் அட்லீ கொடுத்த ஸ்வீட் லவ் ஸ்டோரி தான் ராஜா ராணி. இப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
ஒரு காதல் தோற்றுவிட்டால் ஒருவரின் வாழ்க்கை அத்தோடு முடிந்துவிடுவதில்லை. அதற்கு பின்னால் அழகான ஒரு வாழ்க்கை உள்ளது என்பதை எமோஷனலாக காட்சிப்படுத்திய திரைப்படம் ராஜா ராணி. ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா என இந்த நால்வரை சுற்றி நகரும் கதைக்களத்தில் வேண்டாவெறுப்பாக கட்டாயமாக திருமணம் செய்து வைக்க படுகிறார்கள் ஜான் (ஆர்யா) - ரெஜினா (நயன்தாரா). இவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் வெறுப்புக்கு காரணம் இருவரின் வாழ்க்கையிலும் நடந்த பிளாஷ்பேக் காதல் தோல்வி.
எலியும் பூனையுமாக ஒரே வீட்டில் இருந்தவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் பிளாஷ்பேக் ஸ்டோரியை தெரிந்து கொள்ள நேரிடுகிறது. இருவரின் மனமும் சற்று இளகி மனமாற்றம் ஏற்படுகிறது. இருவருக்குள்ளும் இருக்கும் காதலை பரிமாறிக்கொள்ளாமல் உள்ளுக்குள் மறைத்து வைத்து கொள்கிறார்கள். இவர்கள் இருவரும் அவர்களின் காதலை வெளிப்படுத்தினார்களா ஒன்று சேர்ந்தார்கள் என்பது தான் கதைக்களம்.
முன்பாதியில் ரெஜினாவாக நடித்த நயன்தாராவின் பிளாஷ்பேக் கண்களை ஈரமாக்க பின்பாதியில் சொல்லப்பட்ட ஜான் கேரக்டரில் நடித்த ஆர்யாவின் பிளாஷ்பேக் அப்படியே இதய துடிப்பை ஸ்தம்பித்தது. நயன்தாராவின் காதலனாக நடித்த ஜெய் அப்பாவித்தனத்தால் ஸ்கோர் செய்ய ஆர்யாவின் காதலியாக நடித்த நஸ்ரியா துறுதுறுப்பான பட்டாம்பூச்சியாய் சிறகடித்தாள். துரத்தி துரத்தி காதலித்த ரொமான்டிக் ஹீரோ ஆர்யாவை பிரதர் பிரதர் என அழைத்து வெறுப்பேத்தியது அற்புதம். சந்தானம் - ஆர்யா காம்போவில் அளவான காமெடி என்றாலும் ரசிக்கும் படி இருந்தது. ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்துபோனாலும் நெகிழவைத்தார் நடிகர் சத்யராஜ்.
அட்லீயின் உணர்ச்சிகரமான காட்சி அமைப்பு, ஜார்ஜ்.சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு, ஜி.வி. பிரகாஷ் இசை, ரூபனின் படத்தொகுப்பு என அனைத்துமே படத்தை வேற லெவலுக்கு எடுத்து சென்றது. நடிகர்களின் துடிப்பான நடிப்பு படத்திற்கு பக்கபலமாய் அமைந்தது. கிளைமாக்ஸ் காட்சியில் ட்விஸ்ட் வைத்ததும் பார்வையாளர்கள் சற்று பதறினாலும் பின்னர் அதற்கு சுகமான எண்டு கார்டு போட்டு அசத்தி இருந்தார் அட்லீ.
படம் சற்றும் நீளமாக இருந்தாலும் பிளாஷ்பேக் ஸ்டோரிகளால் படம் விறுவிறுப்பாக நகர்ந்து பார்வையாளர்களை போரடிக்காமல் சுவாரஸ்யத்தை கூட்டியது. மூன்று காதல் கதை படங்கள் தமிழ் சினிமாவில் ஒன்றும் புதிதல்ல என்றாலும் ராஜா ராணி படம் இளைஞர்களுக்கு கொஞ்சம் ஸ்பெஷல். எல்லா ஆடியன்ஸையும் கவர்ந்த ராஜா ராணி 10 ஆண்டுகளை கடந்தும் இன்றும் ப்ரெஷ் காதல் ஸ்டோரியாக ரசிக்கப்படுகிறது.
முதல் படமே அட்லீக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்று கொடுத்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் என்ற அந்தஸ்தை பெற்றுக் கொடுத்துள்ளது.