Ponniyin Selvan Teaser Launch: “உயிரை பணயம் வச்சு படம் எடுத்துருக்கோம்”... ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன உண்மை
பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய கதாபாத்திரம், புத்தகத்தில் இல்லாத கதாப்பாத்திரம் என்ற கேப்ஷனோடு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மேடையேறினார்.
பொன்னியின் செல்வன் படத்தை உயிரை பணயம் வைத்து எடுத்துள்ளோம் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவருகிறது. முன்னதாக இப்படத்தின் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்தநிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் டீசரை தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டது.
கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் வெளிவர உள்ள நிலையில், இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பொன்னியின் செல்வன் டீசர் வெளியிட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் நடைபெற்றது. முன்னதாக நடிகர்கள் சரத்குமார், கார்த்தி, விக்ரம் பிரபு, நடிகை த்ரிஷா ஆகியோர் பங்கேற்று படத்தைப் பற்றி பேசினர். இவர்களைத் தொடர்ந்து பேசிய படத்தின் இயக்குநர் மணிரத்னம், பொன்னியின் செல்வனின் மதிப்பு எனக்கு தெரியும். கொரோனா சமயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக முழுக்க முழுக்க ஒரு அழுத்தத்தில் தான் எடுக்க முடிந்தது. இவர்கள் அனைவரின் ஒத்துழைப்பு இல்லையென்றால் பொன்னியின் செல்வன் இல்லை என தெரிவித்தார்.
இதனையடுத்து பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய கதாபாத்திரம், புத்தகத்தில் இல்லாத கதாப்பாத்திரம் என்ற கேப்ஷனோடு மேடையேறிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் மணிரத்னத்தை புகழ்ந்து தள்ளினார். 30 வருடங்களாக அவர் தான் என் பாஸ் என்றும், ஒருவரின் திறமையை எப்படி வெளியில் எடுக்க வேண்டும் என்பது அவருக்கும் தெரியும் எனவும் ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார்.
மேலும் இந்த படம் நம்ம படம்... இந்தியாவோட படம் என தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான், இவ்வளவு பெரிய படத்தை ஆரம்பித்த சில நாட்களில் ஊரடங்கு போடப்பட்டது. அந்த சமயத்துல உயிரையும் பணயம் வச்சு இந்த ஒட்டுமொத்த குழுவும் இவ்வளவு பிரமாண்டமாக படத்தை எடுத்துருக்காங்க...உங்களுக்கு பொன்னியில் செல்வனின் இசை பிடிக்கும் என நினைக்கிறேன். எங்களால முடிந்ததை பண்ணியிருக்கிறோம் என ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்