வில் ஸ்மித்தை 'ஸ்வீட் ஹார்ட்' என்று கூறிய ஏ. ஆர்.ரஹ்மான்! ஆஸ்கர் விழா சர்ச்சை குறித்து கருத்து!
இந்த சர்ச்சை குறித்து உலக பிரபலங்கள் முதல் உள்ளூர் பிரபலங்கள் வரை கருத்து தெரிவித்துவிட்ட நிலையில், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் அமைதி காத்து வந்தார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94 ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கடந்த மாதம் நடைபெற்றது. கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக நடிகர் வில் ஸ்மித், சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுவதற்காக ஆஸ்கர் விருது நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். விழாவில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக், வில் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித் பற்றி நகைச்சுவையாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த வில் ஸ்மித், மேடையில் ஏறி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் முகத்தில் பளார் என அறைந்து, விழா அரங்கை அதிர வைத்தார். ஜடா பிங்கெட்டிற்கு அலோபேசியா எனும் நோய் காரணமாக அவ்வப்போது முடிகள் உதிர்கிறதாம். இதனால் அவர் மொட்டை அடித்துக் கொண்டு வந்திருந்தார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட தன்னை கிண்டல் செய்கிறார்களே என ஜடா கண்ணீர் விட்டார். இதை கண்ட வில் ஸ்மித்தின் மனம் பொங்கியது. உடனே நேராக மேடையில் ஏறினார். கிறிஸ் ராக் சிரித்துக் கொண்டே அவரை வரவேற்றார். ஆனால் ஸ்மித்தோ கிறிஸ்ஸின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்புகளும் ஆதரவுகளும் வில் ஸ்மித்திற்கு குவிந்தன. உருவ கேலி என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என ஒரு சாராரும், அதற்காக மேடையில் அநாகரீகமாக தொகுப்பாளரை அடிப்பதா என மறு சாராரும் கேள்வி எழுப்பினர். நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை அறைந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து வில் ஸ்மித்துக்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்திருந்த நிலையில் வில் ஸ்மித்திற்கு ஆஸ்கர் அகாடமி 10 ஆண்டுகள் தடை விதித்தது. இந்த சர்ச்சை குறித்து உலக பிரபலங்கள் முதல் உள்ளூர் பிரபலங்கள் வரை கருத்து தெரிவித்துவிட்ட நிலையில், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் அமைதி காத்து வந்தார். உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த நிகழ்வு குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள ஹீரோ பண்டி 2 என்கிற திரைப்படம் வருகிற ஏப்ரல் 29-ந் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கான புரமோஷன் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஏ.ஆர்.ரகுமானிடம் தொகுப்பாளர் பல்வேறு கேள்விகளை கேட்டார். அதில் ஒரு கேள்வியாக ஆஸ்கர் விருது விழாவில் வில் ஸ்மித் அறைந்தது பற்றி கேட்டார். இதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான், வில் ஸ்மித் மிகவும் இனிமையானவர் (ஸ்வீட்ஹார்ட்). சிறந்த மனிதர். சில சமயங்களில் அந்த மாதிரி சம்பவங்கள் நடக்கும்” எனக் கூறினார்.