”ரஜினி சாருடன் படம் பண்ண விருப்பமில்லைனு சொன்னேனா? இன்னும் தொந்தரவா இருக்கு “ - இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்
எங்கும் தீயாக பரவ..இது குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார்.
மலையாள சினிமாவில் அதிகம் பேசப்பட்ட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். பிரேமம் திரைப்படம் மூலமாக தென்னிந்திய சினிமா ரசிகர்களால் கவனம் பெற்றார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அல்போன்ஸ் புத்திரன் சென்னையில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வபோது ரசிகர்களில் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அல்போன்ஸ் தற்போது பலநாள் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது பிரேமம் திரைப்படம் வெளியான சமயத்தில் , அல்போன்ஸ் புத்திரனுடன் ரஜினிகாந்த் படம் செய்ய விரும்பியதாகவும் ஆனால் அல்போன்ஸ் புத்திரன் ரஜினியை இயக்குவதில் எனக்கு ஆர்வம் இல்லை என குறிப்பிட்டதாகவும் செய்திகள் வெளியானது. இதனால் ரஜினி ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் அல்போன்ஸ் புத்திரன். ஆனால் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து படம் செய்யப்போவதாக பதிவிட்டு, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனாலும் அந்த படம் இன்னும் பேச்சுவார்த்தை என்ற நிலையிலேயே உள்ளது.
இந்த நிலையில் அல்போன்ஸ் புத்திரன் அந்த சம்பவம் குறித்து விரிவாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் “ 2015 ஆம் ஆண்டு பிரேமம் வெளியான நேரம். ஒரு திரைப்பட இயக்குநராக நான் ரஜினிகாந்துடன் ஒரு படம் செய்ய விரும்பினேன். 99 சதவீத இயக்குனர்கள் ரஜினியை வைத்து படம் பண்ண விரும்புவார்கள்தானே. அந்த நேரத்தில் ஆர்டிகள் ஒன்றில் அல்போன்ஸ் புத்திரனுக்கு ரஜினியை இயக்க விருப்பமில்லை என செய்திகள் வெளியானது. அந்த போலி செய்தி எங்கும் தீயாக பரவ.. இது குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார். பிரேமம் ரிலீஸுக்குப் பிறகு நான் யாருக்கும் பேட்டி கொடுக்கவில்லை என்று அவருக்கு பதிலளித்தேன். அதை புரிந்து கொண்டு ரஜினி சாரிடம் இது குறித்து பேசினார். பிரச்னையும் முடிவுக்கு வந்தது.
அதன் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் 2021 ஆம் ஆண்டு , நான் ஒரு குணச்சித்திர நடிகர் ஒருவருக்கு கோல்ட் படத்தின் கதை குறித்து விவரித்துக்கொண்டிருந்தேன். அப்போது அவர் என்னிடம், இப்போது நான் ரஜினிகாந்தை இயக்க விரும்பாத இயக்குநரிடமா பேசிக்கொண்டிருக்கிறேன் என்றார். அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் காட்டிக்கொள்ளவில்லை. 2015ஆம் ஆண்டு முதல் இன்றுவரை இந்தப் போலிச் செய்தி என்னைத் தொந்தரவு செய்வதாக உணர்கிறேன். நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்று தான். ரஜினிகாந்த் சாருடன் நான் திட்டமிட்ட படம் நான் நினைத்தது போல் நடந்திருந்தால், பார்வையாளர்களை மகிழ்வித்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கும். அரசுக்கு வரியும் அதிகம் கிடைத்திருக்கும். நஷ்டம் எனக்கும், சூப்பர் ஸ்டாருக்கும், பார்வையாளர்களுக்கும், அரசாங்கத்துக்கும்தான். இந்தக் கட்டுரையைப் போட்டவரும், இந்தப் பொய்ச் செய்திக்குப் பின்னால் இருந்த மூளையும் ஒரு நாள் என்னை சந்திக்கும் நாள் வரும் . நீங்களும் அந்த நாளுக்காக காத்திருங்கள். ரஜினியுடன் எனது படத்தைப் பார்க்க நீங்கள் விரும்பினால் எப்போதும் போல எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.” என குறிப்பிட்டுள்ளார்.