Barbie Movie:தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் பார்பி படம்.. அல்ஜீரியாவிலும் தடை.. காரணம் என்ன?
கிரேட்டா கெர்விக் இயக்கத்தில் வெளியான பார்பி திரைப்படத்தை அல்ஜீரிய நாடு சமூக கருத்துக்களுக்கு எதிரானதாக உள்ளது என கூறி தடை விதித்துள்ளது.
கிரேட்டா கெர்விக் இயக்கத்தில் வெளியான பார்பி திரைப்படம் ஏற்கனவே பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது அல்ஜீரியாவிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பார்பி:
கிரேட்டா கெர்விக் இயக்கத்தில் மார்கோட் ராபி, ரியான் கோஸ்லிங், அமெரிக்கா ஃபெரெரா, இசா ரே, கேட் மெக்கின்னன் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் பார்பி. உலக அளவில் பிரபலமான பார்பி பொம்மைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் பார்பி. பல்வேறு அனிமேஷன் படங்களுக்குப் பிறகு இறுதியாக இப்படம் மனிதர்கள் நடிப்பில் உருவாகி உள்ளது.
இப்படம் பார்பிகளின் உலகுக்கும் உண்மையான உலகுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை பிரதிபலிக்கிறது. பார்பிக்களின் உலகில், பார்பிக்களான பெண்கள் ஆட்சி செய்ய, உண்மையான உலகில், ஆண்கள் அடக்குமுறை செய்கிறார்கள் என்பதை இத்திரைப்படம் எடுத்துக் கூறுகிறது
மனித உலகு:
பார்பிகளின் உலகில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்டிரியோடிபிகல் பார்பி (மார்கோட் ராபி) தவிர பலவிதமான பார்பிகளும் வாழ்ந்து வருகின்றன. இந்த பார்பிகள் பார்பி லேண்டை ஆட்சி செய்ய ‘கென்’ என பெயரிடப்பட்ட அங்கு உள்ள ஆண்கள் அனைவரும் பார்பிகளுக்கு துணைகளாக இருந்து வருகின்றனர்.
தினமும் உற்சாகமும் கொண்டாட்டமும் நிறைந்ததாக கடந்து கொண்டிருக்க, திடிரென ஒருநாள் காலையில் ஸ்டிரியோடிபிகல் பார்பி, ஏதோ வித்தியாசமான மனித உணர்ச்சிகளோடு கண் விழிக்க, அந்த பிரச்னைக்கு தீர்வு காண மனித உலகுக்கு பார்பியும் கென்னும் (ரியான் கோஸ்லிங்) வருகின்றனர்.
சுவாரஸ்ய கதை:
அங்கு பெண்களை ஒரு போகப்பொருளாக பார்க்கும் ஆண்களையும் வியாபாரமயமான சமுதாயத்தையும் கண்டு அதிர்ச்சி அடைகிறார் பார்பி. ஆனால் கென், உலகம் ஆண்களால் ஆட்சி செய்யப்படுகிறது என்பதை கண்டுகொள்கிறார்.
தொடர்ந்து மீண்டும் பார்பி லேண்டுக்கு தாய்-மகள் என இரண்டு மனிதர்களுடன் திரும்பும் பார்பி, அங்கு கென்னால் சில மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை உணர்கிறார். இதனைத் தொடர்ந்து பார்பி லேண்டில் நடப்பது என்ன? பார்பியும் கென்னும் அடுத்தடுத்து செய்யப்போவது என்ன என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் படமே ‘பார்பி’
#Barbie has been banned in Algeria for allegedly going against community values, including ‘promoting homosexuality.’ pic.twitter.com/9Qkx7IufJe
— Pop Base (@PopBase) August 13, 2023
தடை:
இப்படி வித்தியசமான முயற்சியில் எடுக்கப்பட்டிருக்கும் படம் பார்பி பலரால் வரவேற்க்கப்பட்டாலும், ஒரு பக்கம் விமர்சனமும் பெற்றுள்ளது. ஏற்கனவே இந்த திரைப்படம் சமூகத்திற்கு எதிரான கருத்துக்களை பிரதிபளிக்கிறது என கூறி குவைத் நாட்டில் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் லெபனன், பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளில் பார்பி படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது பார்பி படத்திற்கு அல்ஜீரியா நாடும் தடை விதித்துள்ளது. அல்ஜீரியாவில் இருக்கும் சமூக கருத்துக்களுக்கு எதிரானதாக இருப்பதாக கூறி இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் பார்பி படம் வசூலை குவித்துள்ளது என்பதே நிதர்சனம்.