Ak 62: விக்னேஷ் சிவனுக்கு பதிலாக அஜித்தை இயக்கும் மகிழ் திருமேனி...24 மணிநேரத்தில் இயக்குநர் மாற்றம்... காரணம் என்ன?
கடந்த 24 மணி நேரத்தில் தான் இந்த மாற்றம் நிகழ்ந்ததாகவும், விக்னேஷ் சிவன் வழங்கிய ஸ்க்ரிப்டில் அஜித்துக்கு உடன்பாடு இல்லாததால் அதில் மாற்றங்கள் செய்யுமாறு அஜித் கோரியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
துணிவு பட வெற்றிக்குப் பிறகு ஏகே 62 படத்தை வரும் பிப்ரவரி மாதம் முதல் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தை இயக்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
வலிமை பட தோல்விக்குப் பிறகு அஜித்-போனி கபூர்-ஹெச்.வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியான ‘துணிவு’ படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து கலக்கல் ஹிட் அடித்துள்ளது.
விக்னேஷ் சிவனின் ஏகே 62
வசூலிலும் துணிவு படம் சாதனைகள் படைத்து வரும் நிலையில், அடுத்ததாக அஜித் -விக்னேஷ் சிவன் இணையும் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் உருவாகின.
ஏகே 62 படத்தில் சந்தானம், அரவிந்த் சாமி ஆகியோர் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானதுடன், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் தளம் தாங்கள் வாங்கியுள்ளதாகவும் குதூகலத்துடன் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்திருந்தது.
திடீர் திருப்பம்
இதனிடையே நேற்று திடீரென அஜித்தின் அடுத்த படமான ஏகே 63 படம் குறித்த தகவல்களால் சமூக வலைதளங்கள் நிரம்பி வழியத் தொடங்கின.
அதன்படி ஏகே 63 படத்தை இயக்குநர் அட்லி, அட்லி இயக்கவுள்ளதாகவும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. லைகா ப்ரொடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்க உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகின.
மற்றொருபுறம் ஷேர்ஷா படம் மூலம் இந்திக்கு சென்று ஹிட் அடித்துள்ள அஜித்தின் ஆஸ்தான இயக்குநர் விஷ்ணுவர்தன் அல்லது சிறுத்தை சிவா அல்லது புஷ்பா பட புகழ் சுகுமார் ஆகியோருடன் அஜித் நடிப்பார் எனத் தகவல்கள் வெளியாகின.
அஜித் - மகிழ் திருமேனி கூட்டணி
இந்நிலையில், தற்போது ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என்றும் மாறாக ஏகே 62 படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
#AK62 BREAKING NEWS sources have told me that #AjithKumar movie with #VigneshShivan has been postponed. New director for #AK62 will be finalised. Vignesh movie could be #AK63. Waiting for official news
— Latha Srinivasan (@latasrinivasan) January 28, 2023
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தான் இந்த மாற்றம் நிகழ்ந்ததாகவும், விக்னேஷ் சிவன் வழங்கிய ஸ்க்ரிப்டில் அஜித்துக்கு உடன்பாடு இல்லாததால் அதில் மாற்றங்கள் செய்யுமாறு அஜித் கோரியதாகவும், ஆனால் இறுதி கதை குறிப்பிட்ட நேரத்துக்குள் முழுமையடையாததால் அஜித் ஏகே 62 படத்துக்கான இயக்குநராக மகிழ் திருமேனி தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏன் விக்னேஷ் சிவன் இல்லை?
தன் தனித்துவமான ஆக்ஷன் படங்களுக்கு பெயர் போன மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் ஒரு புறம் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும், விக்னேஷ் சிவன் இல்லாதது அவர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் - அஜித் இருவரும் நிச்சயம் ஏகே 63 படத்தில் இணைவர் என்றும், அஜித் சொன்ன சொல் தவறாதவர் எனவே நிச்சயம் விக்னேஷ் சிவனுடன் அடுத்த படத்தில் இணைவார் என்றும் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் உறுதிபடத் தெரிவித்து வருகின்றனர்.