15 Years of Aegan:“புலியை பார்த்து பூனை சூடுபோட்ட கொண்ட கதை" .. அஜித்தின் ‘ஏகன்’ படம் வெளியான நாள் இன்று..!
நடன இயக்குநர் ராஜூசுந்தரம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமானவர். காமெடி கேரக்டர்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பல பாடல்களுக்கு நடனமாடியும், நடனம் அமைத்தும் மிகப்பெரிய இடத்தை பெற்றிருந்தார்.
நடன இயக்குநர் ராஜூ சுந்தரம் இயக்குநராக அறிமுகமான ஏகன் படம் வெளியாகி இன்றோடு 15 ஆண்டுகள் நிறைவடைகிறது.
பூனை சூடுபோட்ட கொண்ட கதை
நடன இயக்குநர் ராஜூசுந்தரம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமானவர். காமெடி கேரக்டர்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பல பாடல்களுக்கு நடனமாடியும், நடனம் அமைத்தும் மிகப்பெரிய இடத்தை பெற்றிருந்தார். இவரது தம்பியான நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என பன்முக தன்மை கொண்ட பிரபலமான பிரபுதேவா, தமிழில் விஜய் நடித்த போக்கிரி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.
இப்படியான நிலையில் தான் அஜித்குமார் - ராஜூ சுந்தரம் கூட்டணியில் “ஏகன்” படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. அப்போது விஜய் - அஜித் இடையேயான போட்டி உச்சத்தில் இருந்த காலக்கட்டம். தம்பி பிரபுதேவா விஜய்யை வைத்து படம் எடுத்துவிட்டார். அதனால் அண்ணன் ராஜூ சுந்தரம் அஜித்தை வைத்து படம் எடுக்கிறார் என்றெல்லாம் பேச்சு பரவியது. பூனை சூடுபோட்ட கொண்ட கதை என வெளிப்படையாக விமர்சித்தார்கள்.
ஏகன் படத்தில் நயன்தாரா, நவ்தீப், பியா பாஜ்பாய், ஜெயராம், சுமன், நாசர் என பலரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
படத்தின் கதை
வில்லன் சுமனின் கூட்டாளிகளில் ஒருவரான தேவன் போலீசாரிடம் அப்ரூவராக மாறுகிறார். அவரை கொன்று விட துடிக்கிறார் சுமன். இதனால் தேவன் தலைமறைவாக இருக்கிறார். அவரின் ஒரே மகளான பியா ஊட்டி கல்லூரியில் படிக்கிறார். இவர் உயிருக்கு சுமனால் ஆபத்து வரலாம் என்பதால் பியாவை காக்க காவல்துறை அதிகாரியான அஜித் கல்லூரி மாணவராக மாறுகிறார். அங்கு போனால் தனக்கு நவ்தீப் என்ற தம்பி இருக்கும் உண்மையும் தெரிய வருகிறது.
நவ்தீப் - பியா இருவரும் காதலிக்கிறார்கள். முதலில் இவர்கள் உட்பட கல்லூரி மாணவர்கள் அஜித்தை வெறுக்கிறார்கள். ஒரு பிரச்சினைக்குப் பின் அவரை சக தோழராக ஏற்றுக் கொள்கிறார்கள். இதற்கிடையில் கல்லூரி பேராசிரியை நயனுடன் அஜித்துக்கு காதல் ஏற்படுகிறது. இதனிடையே தன்னுடைய நம்பிக்கைக்குரியவராக மாறிய பின் அஜித்தை தன் அப்பா தேவனிடம் அறிமுகம் செய்கிறார். இதனைத் தொடர்ந்து அஜித் அவரை கைது செய்யவும் தான், அவர் ஒரு போலீஸ் அதிகாரி என்ற உண்மை தெரிய வருகிறது. பின்னர் வில்லன் சுமனை எப்படி அழிக்கிறார் என்பது தான் இப்படத்தின் கதையாகும்.
கூடுதல் தகவல்கள்
ஏகன் படம் 2004 ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படமான மை ஹூன் நாவை அடிப்படையாகக் கொண்டதாக கூறப்பட்டது. அதேபோல் ஹீரோயினாக நடிக்க ஸ்ரேயா சரண், கத்ரீனா ஃகைப், பிபாஷூ பாசு, தீபிகா படுகோனே, இலியானா டி க்ரூஸ், தனுஸ்ரீ தத்தா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கடைசியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும் சிவகார்த்திகேயன் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தார்.
அதேபோல் ஏகன் படத்தில் ராஜு சுந்தரத்தின் தம்பியான பிரபுதேவா நடனக் கலைஞராக படத்தில் சிறப்பு தோற்றத்தில் வர அணுகப்பட்ட நிலையில் அவர் மறுத்து விட்டார். தீனா, பில்லா படங்களுக்கு பின் யுவன் ஷங்கர் ராஜா அஜித் படத்திற்கு இசையமைத்தார். பாடல்களும் சூப்பர் ஹிட்டாயின. ஏகன் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் அஜித்துக்கு தோல்வி படமாகவே அமைந்தது.