Aishwarya Rajinikanth: ‘இதை விட அழகான ஒன்றை படம் பிடிக்க முடியாது’; பேரன்களோடு ரிலாக்ஸ் செய்யும் ரஜினி.. வைரலாகும் போட்டோ!
ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகன்களுடன் ரஜினிகாந்த் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
பிரபல இயக்குநர் கே. பாலசந்தரின் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் வில்லனாக அறிமுகமாகி, தமிழ் சினிமாவின் உட்ச பட்ச சிம்மாசமான ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை அலங்கரித்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். வில்லனாக அறிமுகமானாலும், அடுத்தடுத்து தனக்கான பாதையை கனகச்சிதமாக கட்டமைக்க ஆரம்பித்த ரஜினிக்கு கலைப்புலி தாணு தயாரிப்பில் வெளியான 'பைரவி' படத்தில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கிடைத்தது.
தொடர்ந்து முள்ளும் மலரும், ஜானி உள்ளிட்ட படங்களில் நடித்த ரஜினி அதன் பின்னர் முழுக்க முழுக்க வணிக ரீதியான படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் நடிப்பில் வெளியான ‘அண்ணாமலை’, ‘ பாட்ஷா’, ‘ அருணாச்சலம்’ உள்ளிட்ட படங்கள் அவரை யாரும் எட்ட முடியாத உயரத்திற்கு கொண்டு சென்றது. அதன் பின்னர் வரலாறாக மாறிய ரஜினி தன்னுடைய 73 ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.
அவரது பிறந்தநாளை முன்னிட்டு திரை நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தன்னுடைய நன்றியை தெரிவிக்கும் வகையில் ரஜினிகாந்த் நன்றி கடிதம் ஒன்றையும் வெளியிட்டார்.
ரஜினியின் பிறந்தநாளன்று, தன் வீட்டின் முன்பு கூடும் ரசிகர்களை ரஜினி சந்திப்பது வழக்கமான ஒன்று. ஆனால் ரஜினி நேற்று ரசிகர்களை சந்திக்க வில்லை. தொடர்ந்து கொட்டும் மழையில் நீண்ட நேரம் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், ரஜினியின் மனைவியான லதா ரஜினிகாந்த் ரஜினி ஊரில் இல்லை, அவர் சார்பாக நான் உங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மழையில் நனைய வேண்டாம் என்று கோரிக்கை வைத்தார். நேற்று முழுவதும் பல்வேறு இடங்களில் ரஜினி ரசிகர்கள் அவரது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினர். இந்த நிலையில், ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகன்களுடன் ரஜினிகாந்த் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
View this post on Instagram
அந்தப்பதிவில், “ இதை விட அழகான ஒன்றை படம் பிடிக்க முடியாது. சில உறவுகளுக்கு தலைப்புகளையும் கொடுக்க முடியாது. என்னுடைய குழந்தைகளுடன் பிறந்தநாள் காணும் ரஜினிகாந்த்” என்று பதிவிட்டு இருக்கிறார். இந்தப்பதிவு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.