Aishwarya Rajesh: பெரிய நடிகர்கள் வாய்ப்பு தரல... ஒன்றரை வருடம் சும்மா இருந்தேன்... ஆதங்கப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்...!
காக்கா முட்டை படம் வெற்றி பெற்ற நிலையில், ஒன்றரை வருடங்களாக வாய்ப்பு வராமல் வீட்டில் சும்மா இருந்தேன் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
காக்கா முட்டை படம் வெற்றி பெற்ற நிலையில், ஒன்றரை வருடங்களாக வாய்ப்பு வராமல் வீட்டில் சும்மா இருந்தேன் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷின் சினிமா கேரியர்
பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த படம் ரசிகர்களிடையே அவரை அடையாளம் காட்டியது. அப்படத்தை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளில் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, ஆறாது சினம், தர்மதுரை, கடலை, பறந்து செல்லவா, குற்றமே தண்டனை, ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், சாமி 2, செக்க சிவந்த வானம், வடசென்னை, விளம்பரம், மெய், நம்ம வீட்டு பிள்ளை, வானம் கொட்டட்டும், க/பெ ரணசிங்கம், திட்டம் ரெண்டு, பூமிகா, ரன் பேபி ரன், தீரா காதல் என பல படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து விட்டார்.
அதேசமயம் கதாநாயகியை மையப்படுத்திய படங்களில் நடிக்க தொடங்கினார். கனா படம் நல்ல வரவேற்பை கொடுத்தது. பின்னர் நடப்பாண்டில் மட்டும் டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி, ஃபர்ஹானா, தி க்ரேட் இந்தியன் கிச்சன் என ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து முடித்துள்ளார். இது அபார வளர்ச்சி என்றாலும் பெரிய நடிகர்களின் படங்களில் அவர் நடித்ததில்லை. இதற்கு காரணம் என்ன என ரசிகர்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.
ஒன்றரை வருடங்களாக சும்மா இருந்தேன்
இதனிடையே அமேசான் பிரைம் ஓடிடி தளம் சார்பில், சென்னையில் ‘மைத்ரி’ நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டார். அப்போது காக்கா முட்டை படத்தின் வெற்றிக்குப் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தது குறித்து மனம் திறந்து பேசினார். அதில் பேசிய அவர், “நான் காக்கா முட்டை என்ற படத்தில் நடித்தபோது, ஒட்டுமொத்த திரையுலகமும் என்னை அழைத்து பாராட்டினார்கள். இது எல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், மற்றொரு புறம் எனக்கு எந்த வாய்ப்பும் வராமல் இருந்தது ஆச்சரியமாக இருந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக சும்மா இருந்தேன்.
எனது சினிமா கேரியரை எடுத்துக் கொண்டால், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான் போன்ற சில பெரிய நடிகர்களைத் தவிர, என்னுடைய நடிப்பை பாராட்டிய மற்ற நடிகர்கள், அவர்களின் எந்தப் படத்திலும் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இங்கே ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் ஒரு வேறுபாடு உள்ளது. உங்களிடம் குறிப்பிட்ட சந்தை மதிப்பு, டிஜிட்டல், OTT மற்றும் சேட்டிலைட் மதிப்பு இருந்தால் மட்டுமே சினிமாவில் இருக்க முடியும்.
தனி ஹீரோயினாக மட்டும் 15 படங்கள் நடித்துள்ளேன். ஆனால் இன்றும் பெரிய ஹீரோக்கள் ஏன் என்னை அழைக்கவில்லை எனத் தெரியவில்லை. அதனால் ஒரு முடிவெடுத்தேன். நானே கதையின் ஹீரோவாக இருக்க நினைத்தேன். எனக்கென ரசிகர்கள் இருக்கின்றனர்” எனவும் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.