Adipurush : சர்ச்சையில் சிக்கிய 'ஆதிபுருஷ்' புதிய போஸ்டர்... படக்குழு மீது வழக்குப்பதிவு
ராம் நவமியை முன்னிட்டு வெளியான 'ஆதிபுருஷ்' படத்தின் புதிய போஸ்டரால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியது படக்குழு
டி-சீரிஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ் நடிக்கும் பிரம்மாண்டமான திரைப்படம் 'ஆதிபுருஷ்'. ராமாயண காப்பியத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தில் ராமராக பிரபாஸ், சீதாவாக க்ரீத்தி சனோன், லக்ஷ்மணனாக சன்னி சிங், அனுமனாக தேவதத்தா நாகே, ராவணனாக சைஃப் அலி கான் நடித்து வருகிறார்கள். ஏற்கனவே ஏராளமான சர்ச்சைகளில் சிக்கியுள்ள இப்படம் மீண்டும் ஒரு கண்டனத்தை எதிர்கொண்டுள்ளது.
சர்ச்சையில் சிக்கிய புதிய போஸ்டர் :
பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் ஆதிபுருஷ் படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி கடும் விமர்சனத்தை சந்தித்தது. இப்படத்துக்கு தடை விதிக்க கோரி கண்டனங்கள் எழுந்தன. அதனை தொடர்ந்து இப்படம் ஜூன் 16ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை அடுத்து ராமரின் பிறந்தநாளாக கொண்டாடப்படும் ராம நவமியை முன்னிட்டு ஆதிபுருஷ் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டது படக்குழு. அதில் பிரபாஸ், க்ரீத்தி சனோன், சன்னி சிங் மாற்றும் தேவதத்தா நாகே உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். புதிய போஸ்டரில், பிரபாஸும் சன்னியும் வில் மற்றும் அம்பு ஏந்தியபடி கவசமும், வேட்டியும் அணிந்துள்ளனர். க்ரீத்தி சனோன் புடவையில் எளிமையான தோற்றத்தில் இருக்கிறார். தேவதத்தா மூவரையும் வணங்குவது போல் காட்சியளிக்கிறார்.
வெளியான இந்த புதிய போஸ்டரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளனர் என கூறி தயாரிப்பாளர்கள், கலைஞர் மற்றும் இயக்குனர் ஓம் ரவுத் மீது மும்பை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் - ஆஷிஷ் ராய் மற்றும் பங்கஜ் மிஸ்ரா ஆகியோர் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் அளிக்கப்பட்டதையடுத்து படத்தின் தயாரிப்பாளர்கள் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளனர்.
புகார் விவரம் :
அந்த புகாரில் பகவான் ஸ்ரீ ராமர் இந்து வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி அல்லாமல் இயல்புக்கு மாறான உடையில் இருக்கிறார் என்றும் ஆதிபுருஷ் படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் ஜானியு இல்லாமல் காட்சிப்படுத்தப்பட்டதாக புகார் அளித்துள்ளனர். பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்படும் இந்து தர்மத்தின் படி ஜானேவுக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. அதை அவமதித்ததாக கூறி தற்போது கண்டனம் தெரிவித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது 'ஆதிபுருஷ்' திரைப்படம் ஜூன் 16ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு.