Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
நடிகை தமன்னா மும்பையில் 7.84 கோடி மதிப்புள்ள தனக்கு சொந்தமான மூன்று அடுக்குமாடி குடியிருப்புகளை அடமானம் வைத்துள்ளார்.
ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும் பிரபலங்கள்
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சமீபத்தில் மும்பை பொரிவாலி பகுதியில் 7 கோடி மதிப்பிலான இரண்டு அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளை விலைக்கு வாங்கினார். அதே அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் 6 வீடுகளை சுமார் 15.42 கோடிக்கு விலைக்கு வாங்கினார் அமிதாப் பச்சன் மகன் அபிஷேக் பச்சன். இவை தவிர்த்து மேற்கு அந்தேரி பகுதியில் அமிதாப் பச்சன் 60 கோடி மதிப்பிலான மூன்று அலுவலக வளாகங்களையும் விலைக்கு வாங்கியுள்ளார்.
சல்மான் கான் , மனோஜ் பாஜ்பாய் , அஜய் தேவ்கன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் மும்பையின் மைய நகரப் பகுதிகளில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை தமன்னாவும் தற்போது இதில் இறங்கியுள்ளார்.
வீட்டை அடமான வைத்த தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் சுந்தர் சி இயக்கிய அரண்மனை படத்தில் நடித்திருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்தியில் ஜான் ஆப்ரஜாம் உடன் இணைந்து வேதா படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 15 தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இது தவிர்த்து இந்தியில் ஸ்டிரீ 2 மற்றும் தெலுங்குவில் ஒடெலா 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
ரியல் எஸ்டேட் நிலவரங்கலை வெளியிடும் propstack தளம் வெளியிட்டுள்ள தகவலின்படி நடிகை தமன்னா மும்பையின் ஜூஹூ பகுதியில் அலுவலக கட்டிடம் ஒன்றை மாதம் 18 லட்ச ரூபாய் என்கிற வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு வாடகைக்கு எடுத்துள்ளார். இந்த 18 லட்சம் வாடகை என்பது நான்காவது ஆண்டில் 20. 16 லட்சமாக அதிகரிக்கும். பின் ஐந்தாவது ஆண்டில் 20.96 ஆக. மொத்தம் 6065 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வளாகத்தை தமன்னா தனது அலுவலகமாக பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வளாகத்திற்கு 72 லட்சம் டெப்பாசிட்டாக முன்பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த முன்பணத்தை இந்தியன் வங்கி தமன்னாவுக்கு கடனாக வழங்கியுள்ளது. இதற்கு செக்கியூரிட்டியாக தமன்னாவுக்கு சொந்தமாக மும்பை வீர் தேசாய் சாலையில் உள்ள மூன்று அடுக்குமாடி குடியிருப்புகளை அடமானமாக பெற்றுள்ளது இந்தியன் வங்கி. இந்த மூன்று வீடுகளின் மொத்த மதிப்பு 7.84 கோடி.
தங்களுக்கு சொந்தமான குடியிருப்பு பகுதிகளை முதலீடாக வைத்துக் கொண்டு அலுவலக பணிகளுக்காக மும்பையின் மையப் பகுதிகளில் தற்காலிகமான இடங்களை பிரபல்ங்கள் வாடகைக்கு எடுத்து வரும் போக்கு சமீப காலத்தில் அதிகரித்து வருகிறது.