”தென்னிந்தியாவில் இருந்து ஓடுங்கள்...” - இந்தியில் பேசிய தனியார் சேவை மையத்தைக் கண்டித்த நடிகை சொர்ணமால்யா
தமிழ் மொழி தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை குறைந்தது ஆங்கிலம் தெரிந்த ஆட்களை பணியமர்ந்த வேண்டும் என வாடிக்கையாளர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பெருமாலான சேவைகள் ஆன்லைன் பயன்பாட்டாக மாறிவிட்ட நிலையில், வாடிக்கையாளருக்கும் நிறுவனத்திற்கும் இடையேயான தகவல் பரிமாற்றம் எந்த மொழியில் இயங்குகிறது என்பதில் தொடர்ந்து குழப்பம் இருந்து வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை, வங்கி சேவை தொடங்கி உணவு டெலிவரி சேவை வரை இந்தி மொழியை பிராதனமாக பயன்படுத்தப்படுவது அவ்வப்போது சர்ச்சையை கிளப்பும். அந்த வரிசையில், தமிழ் சினிமா நடிகையான சொர்ணமால்யா, தனியார் வங்கி வாடிக்கையாளர் சேவை இந்தி மொழில் மட்டும் இயங்குவதாக புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்த வங்கி சேவை மிக சுமாராக உள்ளது. இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தி பேசுபவர்கள் என எண்ணிவிடாதீர்கள். அப்படி ஒரு எண்ணம் கொண்டிருந்தால், தென்னிந்தியாவில் உங்களை சேவையை நிறுத்திவிட்டு இந்தி தெரிந்த மக்கள் இருக்கும் மாநிலங்களுக்கு செல்லுங்கள். உங்களது வாடிக்கையாளர் சேவை நபரால் ஒரு வார்த்தை கூட ஆங்கிலத்தில் பேச முடியவில்லை. இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உங்களது வங்கி சேவை மிகவும் மோசமாக உள்ளது. #Hinditeriyadhupoda” என பதிவிட்டிருக்கிறார்.
அந்த தனியார் வங்கியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தை டேக் செய்து சொர்ணமால்யா பதிவிட்டிருந்ததற்கு வங்கி சார்பில் பதில் அளிக்கப்பட்டிருந்தது. அதில், ”உங்களது புகார்களை ஏற்றுக்கொண்டு பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளோம். எந்த புகாராக இருந்தாலும் எங்களது உள்டப்பிக்கு (இன்பாக்ஸ்) தகவல் தெரிவிக்கவும். குறைகள் இருந்தால் உடனே எங்களுக்கு தெரியப்படுத்தவும்” என பதில் அளித்திருந்தது.
ஆனால், அதோடு பிரச்னை முடியவில்லை. தொடர்ந்து புகார் தெரிவித்த சொர்ணமால்யா, “எனது வங்கி கணக்கு ஆர்.ஏ புரம் கிளையில் உள்ளது. வங்கி மேலாளாரிடம் பல முறை புகார் தெரிவித்தும், எந்த பயனும் இல்லை. இது தொடர்பாக வாடிக்கையாளர் சேவையிடம் புகார் தெரிவிக்கலாம் என முயற்சி செய்தபோது அவர்கள் இந்தியில் மட்டுமே பேசுகிறார்கள். இந்தியாவின் தேசிய மொழி இந்தியா? ஆங்கிலம் தெரியாத வாடிக்கையாளர் சேவையை வைத்து கொண்டு எதற்கு தென்னிந்தியாவில் வங்கி நடத்த வேண்டும்?” என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
உலக தாய்மொழி தினமான இன்று, சொர்ணமால்யா பகிர்ந்திருக்கும் இந்த பதிவு சமூக வலைதளத்தில் விவாதத்தை எழுப்பியுள்ளது. இதில் கருத்து தெரிவித்திருப்பவர்கள், ஆக்ஸிஸ் வங்கியைப் போல பல தனியார் நிறுவனங்களின் சேவை இந்தி மொழியில் மட்டும் வழங்கப்படுகிறது என்றும். தமிழ் மொழி தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை குறைந்தது ஆங்கிலம் தெரிந்த ஆட்களை பணியமர்ந்த வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்